இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது. 

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தபோதும் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவதென்பது மிகவும் சவால் இருக்கும் என நினைக்கின்றேன்.

இலங்கையில் விளையாடுவதற்கு எமது வீரர்கள் எப்போதும் விரும்புவார்கள். எமது கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின் போது இளைப்பாறும் இடமாக இலங்கை உள்ளது.

இலங்கை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வதென்பது இலகுவான காரியமல்ல. இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமானதாகவே அமையும். 

ஓர் அணியாக ஒன்றிணைந்து எமது பலம், பலவீனங்களை தெரிந்து டெஸ்ட் போட்டியில் எமது ஆட்டத்தை வரையறுத்துக்கொண்டு தரவரிசையில் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தோம். 

கடைசியாக நாம் இலங்கையில் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது இரு அணிகளுக்கும் இடையிலான அனுபவம் அதிக இடைவெளி கொண்டதாக இருந்தது. சங்கக்கார விளையாடிக் கொண்டிருந்தார், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் விளையாடினர். ரங்கன ஹேரத் சிறந்த பந்துவீச்சாளர்.

எல்லா வீரர்களும் பொறுப்புணர்வுடனும் கடின உழைப்புடனம் விளையாடும் போதே நல்ல பயனை அடையமுடியும்.

எவரும் வந்து எந்த நேரத்திலும் தமது திறமைகளை வெளிப்படுத்தமுடியும். உபாதையென்பதை விரும்பியோ விரும்பாமலோ நாம் விளையாட்டில் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். குறிப்பாக உபாதை எல்லா விளையாட்டுகளிலும் பொதுவாக வரக்கூடியதொரு பிரச்சினை.

ஏதோ ஒருவகையில் அனைத்து வீரர்களுக்கும் நாட்டுக்காக விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. 

நான் ஒரு துடுப்பாட்ட வீரன் என்ற வகையில் டெஸ்ட் போட்டிகளைப்போன்று தொடர் போட்டிகளில்  விளையாடுவதையே  விரும்புகின்றேன். நாளை எமக்கான பயிற்சி ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 

கிரிக்கெட்டை நாம் எந்த நேரத்திலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. எந்த நேரத்திலும் குறிப்பாக கடந்த காலத்தில் விளையாடியதையோ அல்லது எதிர்காலத்தில் எவ்வாறு விளையாடுவதென்றோ கிரிக்கெட்டை பார்க்க முடியாது. நிகழ்காலத்தில் எவ்வாறு விளையாட முடியுமென்று நினைக்க வேண்டும்.

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட முடியும். பயிற்சிப்போட்டியில் தவறுகள் இருந்தால் அவை திருத்தப்படும்.

நாம் நம்பர் -1 அணியாக இருந்தாலும் அனைத்து விதமான துறைகளிலும் சமநிலையில் உள்ளோம். திறமைகளை வெளிக்காட்டும் போது வெற்றிபெற சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.