நம்பர் - 1 அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமதுவீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். கடந்த காலத்தில் தரவரிசையிலிருந்த அணியுடன் எவ்வாறு விளையாடி 3-0 என தொடரைக் கைப்பற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  அதேபோல் தற்போதைய நம்பர்-1 அணியுடன் விளையாட முடியுமென இலங்கை அணியின் ஒருநாள் போட்டித் தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்ததுள்ளது. 

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே உபுல் தரங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிம்பாப்வே அணியுடனான கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றோம். சிம்பாப்வே அணி அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் டெ்ஸ்ட் போட்டியை நாம் கடுமையாக போராடி வெற்றிபெற்றோம். அதுவும் பாரிய வெற்றி இலக்கை துரத்தியடித்து வெற்றிபெற்றோம்.  இதிலிருந்து எமது வீரர்களின் மன உறுதி வெளிப்பட்டுள்ளது. 

தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமது வீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எமது அணி வீரர்களிடம் நம்பிக்கையுள்ளது. கடந்த காலத்தில் தரவரிசையில் முதலிடத்திலிருந்த அணியுடன் எவ்வாறு விளையாடினோம் என தெரிந்திருக்கும்.  அதேபோல் தற்போது தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியுடன் விளையாடி எமது திறமைகளை வெளிப்படுத்த நல்ல தருணம் கிடைத்துள்ளது. எனவே இத் தொடரில் நன்றாக விளையாடி நாம் எந்ந நிலையிலுள்ளோமென எமது நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

எவ்வாறு நாம் வேகப்பந்துவீச்சுகளுக்கு முகங்கொடுப்பதென அனைத்து விதமான பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து போட்டியில் திறம்பட செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.