அம்பாறை திராய்கேணி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டி  நடத்துனர் மீது நேற்று புதன்கிழமை இரவு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,  படுகாயமடைந்த நடத்துனர்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி இலங்கை போக்குவரத்து சபைக்கு  சொந்தமான பஸ் சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 6.30 மணிக்கு பொத்துவில் இருந்து மட்டக்களப்பிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த பஸ்ஸில் அக்கரைப்பற்று பகுதியில்  பெண் ஒருவர் ஏறி பஸ்வண்டி மிதிபலகையில் பிரயாணம் செய்தபோது அவரை உள் வருமாறு நடத்துனர்   தெரிவித்த நிலையில் அப் பெண் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் தனது உறவினர் ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உரையாடிய நிலையில் அக்கரைப்பற்றில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் பஸ் சென்று கொண்டிருந்தபோது அட்டாளைச்சேனை திராய்க்கேணி பகுதியில் அவ் பஸ்ஸினை முந்திச் சென்ற லொறி ஒன்றில் வந்த அப் பெண்ணின் சகோதரியின் கணவர் பஸ்ஸினை நிறுத்தி அதில் ஏறி பஸ் நடத்துனர் மீது கத்தியால் குத்தியுள்ளார்.

இதில்  படுகாயமடைந்த நிலையில் நடத்துனர்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார்  தகவல் ‍ ‍வழங்கியுள்ளனர்.தாக்குதல்  நடாத்திய பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த  40 வயதுடைய   நபரை கைது செய்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரனைகளை நடத்தியுள்ளனர்.