2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரிவிக்கையில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வெண்ணிக்கையை வெளியிட்டுள்ளோம். எனினும் சில வேளைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வாகவும் இருக்கலாம் என்றார்.

இதேவேளை, ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.