ஹங்வெல்ல மற்றும் நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பிரதேச மக்களை ஆட் கொண்டிருக்கும் கிரீஸ் பூதத்தின் பயம் பதற்ற நிலையை போக்க பூதத்தை பிடிக்கச்சென்ற 27 வயது இளைஞன் கடந்த 17 ஆம் திகதி கிணற்றில் விழுந்து பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குறித்த பிரதேச மக்கள் சீசிடீவி காட்சியொன்றில் சிக்கிய கிரீஸ் மனிதனின் நடமாட்டம் தொடர்ச்சியான கொலை, கொள்ளை, கற்பழிப்பு காரணமாக பீதியினால் முடங்கி கிடந்துள்ளனர்.

பெண்கள் வீட்டை விட்டு வெளிவர அஞ்சியதாகவும் இரவுகளில் வீட்டு யன்னல் கதவுகளை தட்டி தொல்லை கொடுப்பதாதாகவும் கிராம மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் கிராமவாசியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பல தடவை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தும் பலனளிக்காத நிலையிலேயே அமித் பிரியங்கர மற்றும் அவரது இரு தோழர்களும் கிரீஸ் மனிதனை பிடிக்கச்சென்றுள்ளனர்.

மூடப்பட்டிருந்த கிணற்றின் மேல் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே கொன்கிரீட் தட்டு உடைந்து அமித் பிரியங்கர உள்ளே விழுந்தார் என அமித்துடன் சென்ற நண்பர் பொலிஸாருக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மரணம் தொடர்பாக பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஹங்வெல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.