காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இன்னமும் அதற்கான உரிய செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர்ந்தும் துன்பக் கடலில் மூழ்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இறுதி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பதை அறிய முடியாது தமிழ் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இறுதி யுத்தத்தின்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகை தந்த மக்கள் மத்தியில் படைத் தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலையடுத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் படைத் தரப்பினரிடம் சரணடைந்திருந்தனர். இதனை விட பல நூற்றுக்கணக்கானவர்கள் படைத் தரப்பினரிடம் உறவுகளால் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோன்றே பெருமளவானோர் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் அன்று காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
இதனை விட இறுதி யுத்த காலத்தில் கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளை வேன்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்திச் செல்லப்பட்டனர். பெருமளவானோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை புரியாத புதிராகவே காணப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி, பல ஆண்டுகளாக அவர்களது உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும் உறவுகளையும் தேடி அழைந்த 75க்கும் மேற்பட்ட வயோதிப தாய்மார், தமது எண்ணம் நிறைவேறாத நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கின்றனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் என்பது தொடர்ந்தும் தீர்வுகாணப்படாத விடயமாகவே நீடித்து வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்கள் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.
இந்த ஆணைக்குழுக்கள் தமது அறிக்கையினை கையளித்திருந்த போதிலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சிபாரிசுகள் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனைவிட, கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது. 2018ஆம் ஆண்டு இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. இழப்பீட்டுக்கான அலுவலகமும் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போர்க் கொடி தூக்கியிருந்தனர். இதனால் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் உருவாக்கமும் உரிய பயன் தந்திருக்கவில்லை.
இதன்பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இடைக்கால செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து அந்த செயற்பாடுகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 2012ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு பிரேரணைகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால், இன்று வரை அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை. ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நேர்ந்த கதியை அறிய முடியாது தமிழ் மக்கள் நாள்தோறும் கவலையுடன் வாழ்க்கையை கொண்டு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. அண்மையில் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் தமது உறவினர்களாக இருப்பார்களோ என்று எண்ணி தமிழ் மக்கள் பெரும் கவலை கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையானது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 29ஆவது கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் போது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தின் கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது பற்றி அக்குழுவினால் மீளாய்வு செய்யப்படும்.
இந்த நிலையில், இலங்கை தொடர்பில் அக்குழுவினால் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்கு சமாந்தரமாக சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தின் கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளின் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 25 பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.
அந்த அறிக்கையில் வலிந்து காணாலாக்கப்படல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தியிருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மனித புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித உச்சங்கள் உள்ளிட்ட சான்றுகளை உரியவாறு பாதுகாப்பதற்கும், அது குறித்து செயல்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அவசியமான போதிய நிதி நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இதனைவிட நபர் ஒருவரை வலிந்து காணாமலாக்குவது மிகப் பாரிய மனித உரிமை மீறலாகும். இவ்வாறான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இலங்கையில் சகல பகுதிகளிலும் இடம்பெற்றிருப்பதுடன் அவற்றின் விளைவாக அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த கால விசாரணை ஆணைக்குழுக்களில் சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன் இதுகுறித்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்துக்கு 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
2009ஆம் ஆண்டு மே மாதம் 17, 18ஆம் திகதிகளில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.
இதனால் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவடைந்து வருகிறது.
ஆனால், இலங்கையானது ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாமையினால் அத்தகைய முயற்சியை மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய நிலையில்தான் தற்போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது காணாமலாக்கப்படல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தியிருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளமை முன்னேற்றகரமான நடவடிக்கையாகவே காணப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ள விடயங்களையாவது தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு இனியும் தீர்வு காணாமல் இழுத்தடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கை அல்ல. எனவே, இனியாவது இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.
(ஆசிரியர் தலையங்கம்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM