கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி இன்றுடன் 141 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் 180 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனால் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றையதினம் காணிகள் பகுதியளவிலாவது விடுவிக்கப்படுமென்ற ஆவலுடன் காத்திருந்த மக்கள் இன்று விடுவிக்கப்படவிருக்கும் காணிகளில் தமது எந்த விதமான காணிகளும் அடங்கவில்லை மாறாக வேறு இடங்களை சேர்ந்த  6 பேருக்கு சொந்தமான மத்தியவகுப்பு காணிகள்  மட்டுமே விடுவிக்கப்படவுள்ளது என்பதனை அறிந்த மக்கள் ஆத்திரமடைந்த நிலையில் காணி விடுவிப்புக்காக கேப்பாபுலவுக்கு வருகைதந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர் ஆகியோரை காணிவிடுவிப்புக்காக கேப்பாபுலவு இராணுவத்தலைமையகத்துக்குள் செல்லவிடாது வீதியில் மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

வீதியை மறித்து அமைச்சருடன் வாக்குவாதப்பட்ட மக்கள் தொடர்ந்து தம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கவேண்டாம் எனவும் இம்முறையும் அரசு கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படுமென கூறி தம்மை ஏமாற்றும் விதமாக நடந்துகொள்வதாகவும் இன்று விடுவிக்கப்படும் காணிகளில்  ஒரு அங்குலமேனும் தற்போது 141 நாட்களாக வீதியில் போராடும் மக்களின் காணிகள் அடங்கவில்லை எனவும் இவ்வாறு பல தடவைகள் வேறு காணிகளை விடுவித்துவிட்டு கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட்டது. என அனைவரையும் ஏமாற்றிவருவதாகவும் இனியும் தம்மால் இந்த வீதியில் இருந்து அல்லல் பட முடியாது எனவும் ஆவேசத்துடன் அமைச்சருடன் கலந்துரையாடினர்.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன் உங்களின் வலி வேதனைகள் எனக்கு புரிகின்றது நீங்கள் 141 நாட்களாக வீதியில் இருந்து அல்லல் படுவதை கருத்தில் கொண்டே நான் எனது அமைச்சிலிருந்து 5மில்லியன் பணத்தை இராணுவத்துக்கு கொடுத்து காணிவிடுவிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் . இதனடிப்படையிலேயே பகுதியளவில் இன்று காணிகளை விடுவிக்க வருகைதந்தேன் .உங்களது மிகுதி காணிகளும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதனிடம் போராடிவரும் மக்கள் இன்று இந்த 180 ஏக்கர் காடுகளை விடுவித்து விட்டு கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட்தாக ஊடகங்கள் வாயிலாக மீண்டும் செய்திகளை வெளியிட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் இந்த காணி விடுவிப்பு எமக்கு அவசியமில்லை எனவும் உறுதிபட தெரிவித்தனர். இதனால் போராட்டம் இடம்பெறும் பகுதி சிறிது நேரம்  பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்பட்ட்து . இதன் காரணமாக மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸாரின் துணையுடன் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இராணுவத்தலைமையகத்துக்கு சென்று இராணுவ உயர் அதிகாரிகளுடன் காணிவிடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இன்றையதினம் காணிவிடுவிப்புக்காக இராணுவத்தலைமையகத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறவிருந்த காணிவிடுவிப்பு நிகழ்வு நடைபெறவில்லை .அதனை தொடர்ந்தும் மீண்டும் மக்களை சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் உங்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நான் தொடர்ந்து மேற்கொள்வேன் . மேலும் காணிவிடுவிப்புக்காக நான் பணம் இராணுவத்துக்கு வழங்கவுள்ளேன் .நீங்கள் இந்த போராட்டத்தை  கைவிட்டு உங்களின் வீடுகளுக்கு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நாம் எமது வீடுகளுக்கு எவ்வாறு செல்வது நாம் வீதியில் கிடக்கின்றோம் வீதிதான் எமது வீடு என தெரிவித்தனர் .சொந்த நிலங்கள் என்று விடுவிக்கப்படுகின்றதோ அன்றுதான் நாம் இந்த போராட்டத்தை கை விடுவோம் எனவும் உறுதிபட தெரிவித்தனர்.

இத்தனை தொடர்ந்து மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களில் 5பேர் அடங்கிய குழுவினரை எதிர்வரும் 26 ம்  திகதி சந்திப்புக்காக கொழும்புக்கு வருகைதருமாறும் இந்த காணிவிடுவிப்பு தொடர்பில்  அன்று உரிய வகையில் கலந்துரையாடுவோம் எனவும் தெரிவித்து சென்றார்.

இன்றையதினம் கேப்பாபுலவு மக்களை  சந்திப்பதற்காக பாராளுமன்ற  உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா  வடக்கு மாகாண சபையின்  பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன்,மற்றும் புவனேஸ்வரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.