நகரம் என்பது நினைவுகளின் உருவாக்கம் : கேப் - டவுனும் கொழும்பும் பகிரும் மறக்கப்பட்ட வரலாறு !

22 Jul, 2025 | 01:10 PM
image

அபிலாஷனி லெட்சுமன் 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நகரவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஸாஹிரா அஸ்மாலின் ஏற்பாட்டில்,  இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்தக் கண்காட்சி, அடிமைத்தனம் மற்றும் கேப் டவுனின் நகர்ப்புற பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட சர்வதேசத் தோற்றமுடையது என்ற கருப்பொருளில் இடம்பெறுகின்றது.

இந்தக் கண்காட்சி “இங்கு முன்பு ஏதோ இருந்தது” (There Was Something Here Before) என்ற தலைப்பில் நடைபெறுவதுடன், வரலாற்று சிந்தனையையும் சமூகப் பார்வையையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

“ இங்கு முன்பு ஏதோ இருந்தது” (There Was Something Here Before ) என்ற தலைப்பிலான ஸஹிரா அஸ்மாலினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  கண்காட்சி  ஜூலை 18 முதல் 27 வரை, கொழும்பு 7 இல் அமைந்துள்ள இன்டிபென்டன்ஸ் ஆர்க்கேட்டில் உள்ள மணிக்கூட்டுக்கோபுர கட்டிடத்தின் முதலாவது மாடியில் கடந்த  18 ஆம் திகதி ஆரம்பமாகி தினமும் காலை 10 மணி முதல் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சிறப்பு தினமாக கருதப்பட்டு, அதனையொட்டி கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கண்காட்சியை நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நகரவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஸாஹிரா அஸ்மால் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

“இங்கு முன்பு ஏதோ இருந்தது” என்ற தலைப்பிலான இந்த சர்வதேசக் கண்காட்சி, கடந்த காலத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவின் கேப்-டவுன் நகரத்திற்கு இடையிலான பழமை வாய்ந்த தொடர்புகளை இது வெளிக்கொணர்கின்றது.

இந்த வரலாற்றுத் தொடர்புகள் இன்று கேப்-டவுனிலும் இலங்கையிலும் அறியப்படாதவைகளாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காட்சியின் மூலமாக அவற்றின் ஆழமான, மறைந்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என தென்னாபிரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நகரவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஸாஹிரா அஸ்மால் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “ இங்கு முன்பு ஏதோ இருந்தது” (There Was Something Here Before )  என்ற கண்காட்சி பற்றியும் கேப்-டவுன் பற்றியும் பல வரலாற்றத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

நான் சாஹிரா அஸ்மால். நான் கேப் டவுனில் உள்ள ஒரு நகர வடிவமைப்பாளர் (urbanist). நான் ஆரம்பித்த "The City" எனும் நிறுவனம் கடந்த 15 வருடங்களாக இயங்குகிறது. நாங்கள் சமூக மற்றும் கலாச்சார அடிப்படையிலான நகரமைப்பில் (socio-cultural urbanism) கவனம் செலுத்துகிறோம்.

நான் ஒரு நூற்றாண்டுகளாக காலனித்துவத்தின் கீழும் 50 ஆண்டுகளாக நிறவெறி (apartheid) வேறுபாடுகள் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வந்தவள். அதனால், தென் ஆப்பிரிக்க நகரங்கள் மிகவும் பிளவுபட்டுள்ளன. நம்முடைய சமூகம் முழுவதும் பிளவு நிலைக்குள் உள்ளது.

ஜூலை 18 என்பது நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளும் ஆகும், எனவே இந்தக் கண்காட்சியின் ஆரம்ப  நாள் சிறப்பானது.  

மேலும், icu.capetown என்ற இணையதளத்திலும், எங்கள் சமூக ஊடக பக்கங்களிலும், இக்கண்காட்சியைப் பற்றிய மேலதிக தகவல்களை பெறலாம்.

நீரா விக்ரமசிங்க,  சுஜித் சிவசுந்தரம்,  நஸீமா கமால்தின், நதாஷா ஜின்வாலா , பியு ரஹ்மான்  , பமுது ஆகியோரின் கலந்துரையாடலுடனான 10 நாள் நிகழ்ச்சி திட்டமும் இதனுடன் இணைந்து  நகரங்கள், வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் நகரமயமாக்கல் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.

அத்தோடு,  The Mother City – Cape Town பற்றிய படம்  , Colombo and the Women in Colombo – கொழும்பு மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட இரண்டு புகைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

தென் ஆப்பிரிக்க நகரங்கள் மிகவும் பிளவுபட்டுள்ளன. சமூகங்களும் அதுபோலவே காணப்படுகின்றன. எனவே, எனது பணியை ஏனைய நாடுகளோடு பகிர்ந்துகொள்வதிலும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து கற்றுக்கொள்வதிலும்  உறுதியாகவுள்ளேன்.

நாங்கள் இந்தக் கண்காட்சியை ஏனைய நாடுகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம் வைத்திருக்கிறோம். ஏனெனில் நாங்கள் ஒரே வரலாற்றைப் பகிர்ந்துள்ளோம். இந்தோனேசியா, இந்தியா, இலங்கை ஆகியவை தென் ஆப்பிரிக்காவுடன் ஒரு தொடர்புபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. அதேபோல் மொரீஷியஸ், சுரினேம் மற்றும் பிற நாடுகளும் இதில் அடங்கும்.

எனவே, இந்தக் கண்காட்சியை நெதர்லாந்து, கேப் டவுன், ஜொஹானஸ்பெர்க் ஆகிய நகரங்களுடன் சேர்த்து, சர்வதேச ஒற்றுமையின் ஒரு பகுதியாக அந்த நாடுகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

நெதர்லாந்து, கொழும்பு மற்றும் கேப் - டவுனின்  நூறாண்டுகள் பழமையான தார்மீகப் பின்னணியை இணைக்கும் இந்தக் கண்காட்சிக்கு “ இங்கு முன்பு ஏதோ இருந்தது” (There Was Something Here Before )   என்று பெயரிட்டுள்ளேன்.

இந்தத் தலைப்பு காலம் பற்றியும், அதன் அடுக்குகளான அரசியல், பொருளாதாரம், சமூகம், வரலாறுகள், மற்றும் நம்முடைய நினைவுகள் பற்றியும் சிந்திக்கச் செய்கின்றன.  

நாம் அனைவரும் கடந்த காலத்தை உண்மையாக நினைவுகூருகிறோமா ?

இந்தக் கண்காட்சி மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது:

1. Palimpsest – நினைவுகளின் அடுக்குகள்

- இது கேப் டவுன் நகரத்தில் முக்கியமான 10 தருணங்களைச் சித்தரிக்கிறது – நகரம் எப்படி "விற்கப்படுகிறது" என்பதை தெளிவுபடுத்தும்.

- ஒரு சுற்றுலாப் பயணியானால், நகரத்தை ஒரு அழகான முகம் போலவே காணலாம் : மலை, கடற்கரை, Robben Island, முதலியவை.  

- ஆனால் இந்தக் கண்காட்சி, நகரத்தைப்போலவே – ஆழமாகப் பார்க்கும் போது தான் உண்மை வெளிப்படுகிறது.  நீங்கள் மேலும் ஆழமாக செல்வது போலவே புரிதலும் அதிகமாகும்.

2. Counter-Narratives – மறைக்கப்பட்ட வரலாறுகள்

- இந்தப் பகுதி நினைவுகளின் அடுக்குகள் ( Palimpsest ) பகுதியில் காணப்படும் அழகான, செல்வந்த வாழ்க்கையின் எதிர் முகம்.  

- இவை சிலரது கதைகள் மட்டுமே — சுற்றுலா பயணிகள், முதலீட்டாளர்கள்.  

- ஆனால் உண்மையான கேப் டவுன் இந்த பத்து பெட்டிகளில் தான்.  

- நீங்கள் அவற்றை பார்வையிடலாம், ஓர் மேசையில் அமர்ந்து நேரம் செலவழிக்கலாம்.  

- ஒவ்வொரு பெட்டியிலும் மிக ஆழமான, உணர்வுபூர்வமான தகவல்கள். ஒவ்வொரு பெட்டியிலும் தென் ஆப்பிரிக்காவின் அரசியல் உரிமைகள் – இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் ஆகும். மற்றொன்றில்: Cape Town நகரம் அடிமைகளால் உருவாக்கப்பட்டது – இது ஒரு மறைக்கப்பட்ட வரலாறு.

3. இலங்கையர்களின் மறக்கப்பட்ட பங்கு

புத்தக வடிவமைப்பின் போது, Dutch East India Company (VOC) ஆவணங்களில், இலங்கை, இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, விற்கப்பட்டு, Cape Town நகரத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டனர் என்பது தெரியவந்தது.

அதனால், இந்தக் கதைகள் கேப்பின் வரலாறே அல்ல — இலங்கையின் வரலாறும் கூட. இவை அதிகம் அறியப்படாதவை.  அதனால் தான் இந்தக் கண்காட்சி அவற்றை வெளிக்கொணர்கிறது.  

இதில் உணர்வுபூர்வமான, கோரமான உண்மைகள் இருக்கலாம் — ஆனால் மக்கள் நிதானமாக, நேரம் எடுத்துக்கொண்டு பார்வையிடன அழைக்கின்றோம்.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளில், அவரது நினைவுகளை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவருடைய இளமைக்காலத்தில் அவர் முன்னெடுத்த போராட்டங்கள், சமூக நீதிக்கான முயற்சிகள் போன்றவற்றை நாம் மறந்து விடுகிறோமா? அவரை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே பார்க்காமல், ஒரு சமூக போராளியாகவும் நினைவுகூர வேண்டும்.

கேப் டவுன் நகரின் மறைக்கப்பட்ட வரலாறு

கேப் டவுன் நகரில், சில தெருக்கள் இன்னும் நிறவெறி (apartheid)  காலத்தில் இருந்த தலைவர்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இதுவே நகரம் தனது கடந்த காலத்தை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு கட்டுமானத் திட்டத்தின் போது, அடிமைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 5,000 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தற்போது 20 ஆண்டுகளாக கார்ட்போர்டு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. இது நமது ஜனநாயக காலத்தில் இடம்பெற்றது.

அடிமைகளின் மறைக்கப்பட்ட அடையாளங்கள்

அடிமைகளின் பெயர்கள், கலாச்சாரம், உடைகள் என அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டன. அவர்களின் உண்மையான அடையாளங்களை மீண்டும் அறிய, நாங்கள் சில ஆவணங்களை கண்காட்சியில் வைத்துள்ளோம். 

அரபு - ஆபிரிக்க மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகள், குடும்ப மரபுகள் போன்றவை. இந்த மொழி, ஆபிரிக்க  அடிமைகளால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி, அதன் முதல் எழுத்துக்கள் அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டன.

இந்த கண்காட்சி, கேப் டவுன் மற்றும் கொழும்பு நகரங்களின் வரலாற்று தொடர்புகளை வெளிப்படுத்தும் முயற்சி. நாம் கடந்த காலத்தின் தவறுகளை ஒப்புக்கொண்டு, எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் ,

இது ஒரு சிறப்பான நாள் மட்டுமல்ல, ஒரு முக்கிய நிகழ்ச்சியின் தொடக்கமும் கூட. இன்று நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையும், அவரது விடுதலைப் பாரம்பரியமும் நினைவுகூரப்படுகின்றன. அவரது மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து யாவரும் சிந்திக்க வேண்டும்.

நாம் ஒட்டுமொத்த சக்தியை கொண்டு உலகளாவிய மாற்றத்தை உருவாக்கலாம். மண்டேலாவின் வாழ்க்கை முழுவதிலும் செய்ததைப் போலவே நாமும் நமது சமூகங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

நெல்சன் மண்டேலா கூறியது போல,  "ஒரு செயலை நீங்கள் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோன்றும்!" ("It always seems impossible until it’s done.") என்ற  உரை, நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளின் முக்கியத்துவத்தையும், கேப் டவுன் நகரின் மறைக்கப்பட்ட வரலாற்றை, மற்றும் சமூக நீதி, அடையாளம், மற்றும் நினைவுகளின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இது, நமது கடந்த காலத்தைப் புரிந்து, எதிர்காலத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு படியாக இருக்கலாம்.

தென்னாபிரிக்க நகரவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சாஹிரா அஸ்மால் நகர பாரம்பரியத்தை மீள்பார்க்கும் குரலாக காணப்படுகிறார்.

நாங்கள் தென்னாபிரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் சந்தித்தோம். அவர் 'The City' என்ற அமைப்பின் நிறுவனர். அவர் சமூக சமத்துவம், வரலாற்றுச் சிந்தனை மற்றும் காலனியத்திற்குப் பிந்தைய நகரங்களின் அமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வருகிறார்.

2015 அல்லது 2016ம் ஆண்டில், சாஹிரா ஆரம்பித்த விவாதங்கள், நெதர்லாந்து மற்றும் பல ஐரோப்பிய அரசியல் அமைப்புகளில் அடிமைத்தனம், குடியேற்றவியல் (Colonialism) மற்றும் வெவ்வேறு சமூகங்களின் பாதிப்புகள் குறித்த கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்தன.

இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு அடிமைத்தனத்திற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறது. மேலும், காலனித்துவ (Colonialism) காலத்தில் திருடப்பட்ட பொருட்களை மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. 

இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம், உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை ஒன்றிணைக்கும் ஒரு பாதுகாப்பான, பகிரும் இடமாக அமைப்பதேயாகும்.

இந்த இடம் எம்முடைய வாழ்க்கைப் பயணங்களைக் கூறும் இடமாக மட்டுமல்லாமல், கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவும் இடமாக இருக்கட்டும்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து குழுவினருக்கும், இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவிலுள்ளவர்களுக்கும் குறிப்பாக நெருங்கிய தோழி ஸாஹிரா அஸ்மாலுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜயதசமியன்று முக்தியடைந்த ஷீர்டி சாயி பாபா!

2026-10-18 14:29:02
news-image

"நாளை போவேன்" : வைராக்கியமும் சிதம்பர...

2026-10-14 17:53:04
news-image

அதானி சீமேந்து நிறுவனத்தின் வியக்கவைக்கும் துர்கா...

2026-10-12 16:32:57
news-image

இன்று மகாளய அமாவாசை

2026-10-10 13:34:02
news-image

காரைநகரில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா

2026-09-23 17:24:25
news-image

கொட்டும் மழையில் கொட்டகலை வாவியில் 17...

2026-09-21 15:49:12
news-image

17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மீனாட்சி...

2026-09-17 11:47:34
news-image

12,000 வலம்புரி சங்குகள் முதல் மணல்...

2026-09-14 15:43:34
news-image

பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2026-09-08 10:11:49
news-image

இசையும் நடனமும் சங்கமித்த "வானவில்" :...

2026-08-31 15:33:32
news-image

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம்

2026-08-12 12:15:37
news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12