வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன வெளியேற்றினார்.

195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து குறித்த பேருந்து நிலையம் மூடப்பட்டது.

இந் நிலையில் குறித்த பேருந்து நிலையத்தினை மீள் இயங்க செய்வது தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்காத நிலையில் காணப்பட்டது.

இவ்வாறான சூழலில் கடந்த வாரம் இது தெர்டர்பான கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதிலும் தீர்வு ஏதும் எட்டப்படாமல் நிறைவு பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் வவுனியா மாவட்ட செயலகத்தில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் தலைமையில் வட மாகாண சுகாதார அமைச்சர்  ப. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்  கே. கே. மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர்  செ. மயூரன்  ஆகியோரின் வருகையுடன் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையை சார்ந்தவர்கள் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள்  வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு அழைப்பு விடுக்கப்படாத சிலரை வெளியேறுமாறு போக்குவரத்து அமைச்சின் செயலளார் தெரிவித்தர். எனினும்  எவரும் வெளியேறாத நிலையில்  கூட்டத்தில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதால் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் பணித்திருந்தார்.