பி அடுக்கு 50 ஓவர் கிரிக்கெட்டில் SSC சம்பியனானது

Published By: Vishnu

19 Jul, 2025 | 01:42 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த பி  அடுக்கு   கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிங்களவர் விளையாட்டுக் கழகம் (SSC) சம்பியனானது.

எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மொறட்டுவை விளையாட்டுக் கழகத்தை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டு எஸ்எஸ்சி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்ததுடன் 10 இலடசம் ரூபா பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது.

ப்ரபாத் ஜயசூரியவின் மிகச் சிறப்பான பந்துவீச்சு, நுவனிது பெர்னாண்டோவின் அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் எஸ்எஸ்சி 9.2 ஓவர்கள் மீதம் இருக்க மிக இலகுவாக வெற்றிபெற்று சம்பியனானது.

மொறட்டுவை விளையாட்டுக் கழகம் சார்பாக 10ஆம் இலக்க வீரர் குவித்த அபார அரைச் சதம் இறுதியில் வீண்போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மொறட்டுவை விளையாட்டுக் கழகம் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

ப்ரபாத் ஜயசூரியவின் சுழல்பந்துவீச்சில் திணறிய மொறட்டுவை விளையாட்டுக் கழகம் போட்டியின் 29ஆவது ஓவரில் 8ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 108 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், பத்தாம் இலக்க வீரர் பூர்ண ப்ரபாத், 9ஆம் இலக்க வீரர் துமிந்து செவ்மினவுடன் 9ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களையும், ஓ ட்டமே பெறாத 11ஆம் இலக்க வீரர் உஷான் சத்சரவுடன் 59 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார்.

கடைசியாக ஆட்டம் இழந்த  பூர்ண ப்ரபாத்  80 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 92 ஓட்டங்களை விளாசினார்.

துமிந்து செவ்மின 35 ஓட்டங்களைப் பெற்றார்.

இவர்கள் இருவரைவிட முதல் நான்கு வீரர்களான அமித்த தாபரே (14), அனுஷ்க பெரேரா (17), அபிஷேக் லியனஆராச்சி (17), புபுது பண்டார (18) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 5 ஓட்டமற்ற ஓவர்களில் உட்பட 10 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ்எஸ்சி 40.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எஸ்எஸ்சி சார்பாக துடுப்பெடுத்தாடிய 8 வீரர்களும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

அவர்களில் நிப்புன் தனஞ்சய திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

அணித் தலைவர் அவிஷ்க பெர்னாண்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் சரித் அசலன்கவுடன் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களையும் நிப்புன் தனஞ்சய பகிர்ந்தார்.

அவிஷ்க பெர்னாண்டோ 38 ஓட்டங்களையும் சரித் அசலன்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட ஷெவான் டெனியல் (12), க்ரிஷான் சஞ்சுல (15), தசுன் ஷானக்க (16), தினுர கலுபஹன (19), சமிந்து விக்ரமசிங்க (12 ஆ.இ.) ஆகியோர்  10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் துமிந்து செவ்மின 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சஹான் கௌஷல்ய 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சம்பியனான எஸ்எஸ்சி க்கு 10,000,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மொறட்டுவை விளையாட்டுக் கழகத்திற்கு 750,000 ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

இறுதி ஆட்டநாயகன்: நிப்புன் தனஞ்சய (எஸ்எஸ்சி - 200,000 ரூபா பணப்பரிசு)

சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்டக்காரர்: ஹிருன் சிகேரா (லியோ கிரிக்கெட் கழகம் - 300,000 ரூபா பணப்பரிசு)

சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்: சஹான் கௌஷல்ய (மொறட்டுவை விளையாட்டுக் கழகம் - 300,000 ரூபா பணப்பரிசு)

தொடர் நாயகன்: க்ரிஷான் சஞ்சுல (எஸ்எஸ்சி - 500,000 ரூபா பணப்பரிசு)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19இன் கீழ் இளையோர் இரண்டாவது டெஸ்டில்...

2026-07-22 21:35:08
news-image

டெவிஸ் கிண்ண ஆசிய கடல்சூழ் பிராந்தியம்...

2026-07-22 21:21:39
news-image

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை...

2026-07-22 14:53:25
news-image

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார்...

2026-07-22 14:16:34
news-image

பங்காளாதேஷ் இன் டாக்கா இல் நடைபெற்ற...

2026-07-22 12:55:39
news-image

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது இளையோர் டெஸ்ட்...

2026-07-22 08:59:09
news-image

கண்டி றோயல்ஸ் 43 ஓட்டங்களால் வெற்றி

2026-07-22 08:57:13
news-image

சீ ஹோக்ஸ் அணிக்கு இறுக்கமான வெற்றி;...

2026-07-21 21:49:39
news-image

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட...

2026-07-21 15:14:26
news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01