டிரெண்டிங் - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

18 Jul, 2025 | 04:16 PM
image

தயாரிப்பு : ராம் ஃபிலிம் ஃபேக்டரி

நடிகர்கள் : கலையரசன் பிரியாலயா பிரேம்குமார், பெசன்ட் நகர் ரவி, வித்யா, கௌரி ,பாலாஜி தியாகராஜன், தயாளன் மற்றும் பலர்.

இயக்கம் : சிவராஜ் .என்

மதிப்பீடு : 2.5/5

தமிழ் திரையுலகில் சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய இணைய தலைமுறையினரின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது 'ட்ரெண்டிங்'. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

பொதுவாக சமூக வலைதளங்கள் என்பது எம்முடைய பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இலத்திரனியல் சாதனம் என அறிவோம். ஆனால் ஓன் லைன் வர்த்தகம் சர்வதேச அளவில் விரிவடைந்த பிறகு ஓன் லைன் மூலமாக வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமாகி இருக்கிறது. அதிலும் இன்ஸ்டாகிராம் வாஸ்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காணொளிகளை பதிவிட்டு, அதனூடாக வருவாயை ஈட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் சாதக பாதக அம்சங்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட அர்ஜுன்( கலையரசன் ) - மீரா ( பிரியாலயா) தம்பதியினர், தங்களது பெயரில் சொந்தமாக சமூக வலைதள கணக்கு ஒன்றினை தொடங்கி அதில் சுவராசியமான காணொளிகளை பதிவிட்டு வருகிறார்கள். அந்த காணொளி சமூக வலைதள வாசிகளால் பெரிதும் விரும்பப்பட்டு, ட்ரெண்டிங் ஆகிறது.

இதன் காரணமாகவே இவர்களுக்கு வருவாயும் , வாழ்வாதாரமும் மேம்படுகிறது. இந்த தருணத்தில் கடன் வாங்கி தங்களது சமூக நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக அவர்களுடைய சமூக வலைதள கணக்கு முடக்கப்படுகிறது.  இதனால் அவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் தடுமாறுகின்றனர். திணறுகின்றனர்.

இந்த தருணத்தில் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது.  அந்த அழைப்பு அவர்களை வித்தியாசமான ஒரு விளையாட்டில் ஈடுபட தூண்டுகிறது. அந்த விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள-  தங்களுடைய பொருளாதார சூழல் காரணமாக அர்ஜுன் - மீரா தம்பதியினர் ஒப்புக்கொள்கிறார்கள். அந்த மர்ம அழைப்பு இவர்களுக்கு பல்வேறு வகையினதான விளையாட்டுகளை விளையாடுமாறு பணிக்கிறது. இதனால் ஏற்படும் உணர்வு ரீதியான அழுத்தங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்ற 'பிக் பொஸ்' நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை பிரதிபலித்து, திரைக்கதை அமைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.  இனி இவரும் இது போன்ற கதைகளை தெரிவு செய்து கதையின் நாயகனாக உயரலாம். தொடரலாம்.

மீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியாலயாவும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு இவரும் முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்வார்.

இவர்கள் இருவர் மட்டுமே திரையை பெரும்பாலான தருணங்களை ஆக்கிரமித்துக் கொள்ள சலிப்பில்லாத வகையில் திரைக்கதையை நகர்த்தியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் மீண்டும் அவர்கள் இது போன்றதொரு விளையாட்டில் ஈடுபடுவது சுவராசியத்தை குறைக்கிறது.

ஓன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய இயக்குநர் மைய கதாபாத்திரம் அதில் தடுமாறுவது போல் அமைத்திருப்பது பலவீனம்.

'டாஸ்க்கை லைப்பாக எடுத்துக்காதே' என ஆண் கதாபாத்திரமும் , 'நீயும் லைஃபை டாஸ்க்காக எடுத்துக் கொள்ளாதே ' என பெண் கதாபாத்திரமும் பேசும் உரையாடல்  கவனம் ஈர்க்கிறது. இன்றைய காதலுக்கான புது விளக்கத்தையும் வழங்குகிறது.

ஒளிப்பதிவு , பின்னணி இசை , படத்தொகுப்பு ,இந்த மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இயக்குநரின் எண்ணத்திற்கு வலிமை சேர்த்திருப்பதுடன் ரசிகர்களிடத்திலும் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

டிரெண்டிங் - லைக்ஸ் அள்ளும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right