(நெவில் அன்தனி)
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்திய பங்களாதேஷ் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் கைப்பற்றியது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் 2013இலிருந்து நடைபெற்றுவந்த 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட ஐந்து சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்களில் பங்களாதேஷ் வெற்றியை சுவைத்தது இதுவே முதல் தடவையாகும்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2003இல் நடைபெற்ற ஒற்றை ரி20 போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
அதன் பின்னர் விளையாடப்பட்ட 4 தொடர்களில் ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய 3 தொடர்களில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
பங்களாதேஷின் இந்த வெற்றியில் மெஹிதி ஹசனின் 4 விக்கெட் குவியல், தன்ஸித் ஹசனின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றி இருந்தன.
தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியம் எனவும் குறிப்பாக துடுப்பாட்டத்தில் முழுத் திறமை வெளிப்படவேண்டும் எனவும் சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணி மீண்டு எழும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அவர் கூறியவற்றுக்கு எதிர்மாறாகவே இலங்கை அணியின் விளையாட்டு அமைந்திருந்தது.
இதேவேளை, இந்தப் போட்டியில் அதிக தவறுகளை இழைத்ததாலேயே தோல்வி அடைய நேரிட்டதாகத் தெரிவித்த அணித் தலைவர் சரித் அசலன்க, தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனவும் கூறினார்.
கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பவர் ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்ததால் இலங்கை பெரும் தடுமாற்றத்திற்குள்ளானது.
குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் குசல் ஜனித் பெரேரா தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார்.
மூன்று வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட தினேஷ் சந்திமால் தவறான அடி தெரிவால் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து மெஹிதி ஹசனின் பந்துவீச்சை புரிந்துகொள்ள முடியாதவராக அணித் தலைவர் சரித் அசலன்க போல்ட் ஆகி 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் கமிந்து மெண்டிஸும் அணியை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்தனர்.
ஆனால், அதுவரை தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெஹிதி ஹசன் வீசிய பந்தை அரைகுறை மனதுடன் அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் கமிந்து மெண்டிஸும் தசுன் ஷானக்கவும் 6ஆவது விக்கெடடில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கமிந்து மெண்டிஸ் 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அவரைத் தொடர்ந்து ஜெவ்றி வெண்டசே 7 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டம் இழந்தார்.
தசுன் ஷானக்க கடைசி ஓவரில் 2 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளையும் விளாசி அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். அவர் அடித்து ஒரு பந்து விளையாட்டரங்கில் உள்ள எண்ணிக்கை பலகைக்கு மேலாக கூரையைக் கடந்து சென்று மைதானத்திற்கு வெளியே வீழ்ந்தது.
அந்த பந்து கிடைக்காததால் வெறொரு பந்து அதன் பின்னர் பயன்படுத்தப்பட்டது.
25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
தசுன் ஷானக்கவும் மஹீஷ் தீக்ஷனவும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 29 ஓட்டங்களே இலங்கையின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
பந்துவீச்சில் மெஹிதி ஹசன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
133 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பினுர பெர்னாண்டோ வீசிய முதல் பந்திலேயே பங்களாதேஷின் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (0) ஆட்டம் இழந்ததும் இலங்கை பெரு மகிழ்ச்சியில் மிதந்தது.
ஆனால், 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன், அணித் தலைவர் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை பலப்படுத்தினர்.
லிட்டன் தாஸ் 32 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் குசல் பெரேரவின் சிறப்பான பிடி மூலம் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.
தன்ஸித் ஹசன் 47 பந்துகளில் ஒரு பவுண்டறி, 6 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
தௌஹித் ஹிரிதோய் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ், நுவன் துஷார ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்: மெஹிதி ஹசன்.
தொடர்நாயகன்: லிட்டன் தாஸ்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM