(நா.தனுஜா)
நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை (15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான பெனிஸ்லஸ் துஷான் இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்குச் சொந்தமானது என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருக்கிறார்.
நான்கு அல்லது ஐந்து வயதைத் தாண்டாத சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டு, மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டு, அச்சிறுமியைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் அதுபற்றி மறந்துபோயிருக்கும் நாட்டிலேயே நாம் வாழ்கிறோம். இப்போது, தசாப்தங்கள் கடந்து, அந்த நிலம் தனது அமைதியை முடிவுக்குக்கொண்டுவந்திருக்கிறது. உண்மையை நீண்டகாலத்துக்குப் புதைத்து வைத்திருக்கமுடியாது.
அவ்வாறிருந்தும் நாம் அதற்கான நீதியையும், கௌரவத்தையும், பொறுப்புக்கூறலையும் கோருகையில் பிறிதொரு எதிர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனைப் பார்க்கிறோம். துரோகிகள் என்றும், அமைதியை குழப்புபவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில் ஸ்திரமற்றதன்மையைத் தோற்றுவிப்பவர்கள் என்றும் அக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபருக்கு 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே தற்போது சுட்டிக்காட்டும் இந்த பொருளாதார நெருக்கடி உருவானது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு வாக்குகள் அச்சத்தின் நிமித்தம் அளிக்கப்பட்டவையே தவிர, தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை அல்ல. அந்நபருக்கு வாக்களிப்பதென மேற்கொள்ளப்பட்ட தெரிவு எமது பொருளாதாரத்தை வங்குரோத்துநிலைக்கு இட்டுச்சென்றதுடன் மாத்திரமன்றி, நாட்டின் நேர்மை மற்றும் மனசாட்சி என்பவற்றையும் சீர்குலைத்தது.
நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்?
கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM