தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்து கடந்த 30ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அவரை நினைவுகூர்ந்து திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனைத் தவிர வடக்கு, கிழக்கில் வேறு எந்த இடங்களிலும் அவர் நினைவுகூரப்பட்டதாக தகவல்கள் இல்லை.
தமிழ்த் தேசிய அரசியலில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக பங்கேற்றிருந்த இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி பிறந்த இரா. சம்பந்தன் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியை கற்றார். 1956ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த அவர் ,திருகோணமலையில் பிரபலமான சட்டத்தரணியாக விளங்கியிருந்தார். 1977ஆம் ஆண்டு தொகுதிவாரியான தேர்தலில் அவர் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 32 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், தமிழ் மக்களின் பெருந்தலைவராக திகழ்ந்திருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதில் முக்கிய பாத்திரம் வகித்த சம்பந்தன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகாணப்பட வேண்டும் என்ற விடயத்தில் அவர் தீவிர அக்கறை செலுத்தி வந்தார். இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தெற்கின் சிங்கள தலைவர்களாலும் சர்வதேச தலைவர்களினாலும் நன்கு மதிக்கப்பட்ட தமிழ்த் தலைவராக அவர் தொடர்ந்தும் விளங்கினார். வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த காலப் பகுதியில் கூட இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் மாறி மாறி வந்த ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் சம்பந்தன் செயற்பட்டிருந்தார்.
1991ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்ற புதிய அரசியல் தீர்வுக்கான முயற்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இடம்பெற்ற பேச்சுக்கள், நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்புக்கான முயற்சி என்பவற்றிலும் அவரது பங்களிப்பு காணப்பட்டிருந்தது.
1994ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியேற்ற சந்திரிகா குமாரதுங்க, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அன்று கலாநிதி நீலன்திருச்செல்வம், இரா. சம்பந்தன் ஆகியோர் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அன்றைய காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெரும் அச்சுறுத்தலையும் இரா. சம்பந்தன் சந்தித்திருந்தார். ஆனாலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் அவர் உறுதியாக செயற்பட்டார்.
இதன் பின்னணியில்தான் 2000ஆம் ஆண்டு பிராந்தியங்களின் ஒன்றியங்களை ஒத்த அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. ஆனால், அந்தத் தீர்வுத் திட்டத்தை அன்றைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தமையினால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.
இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தலைமையில் சர்வகட்சி குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டது. இந்தக் குழுவில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பங்கேற்றிருக்கவில்லை. ஆனாலும், உரிய அரசியல் தீர்வை காணவேண்டியதன் அழுத்தங்களை இரா. சம்பந்தன் அந்த வேளையில் கூட வலியுறுத்தியே வந்தார்.
அன்றைய காலப் பகுதியில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் முயற்சி செய்தது. மாகாண சபைகளுக்கான அதிகாரத்தில் சில சரத்துகளை நீக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் அன்று பெறப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரண்டு மாகாண சபைகள் விரும்பினால் வாக்கெடுப்பின் மூலம் இணைந்து கொள்ளலாம் என்ற சரத்தையும், மாகாண சபைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கும் போது சகல மாகாண சபைகளதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற விடயத்தையும் நீக்குவதற்கு அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த விவகாரம் அமைச்சரவையில் ஆராயப்பட்ட போது அன்றைய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன உட்பட்ட சிலர் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும், அமைச்சரவை இதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தது. இந்த வேளையில் இரா. சம்பந்தன் சமயோசிதமாக காய்களை நகர்த்தியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திய இரா. சம்பந்தன், இதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியாவின் தலையீட்டையடுத்து மாகாண சபை முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியை அரசாங்கம் கைவிட்டிருந்தது. இரா. சம்பந்தன் அன்று உரிய நடவடிக்கையினை எடுத்திருக்காவிட்டால் மாகாண சபை அதிகாரங்கள் இல்லாது போயிருக்கும்.
இதேபோன்றுதான் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமானது அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை காண்பித்திருக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை நடத்தும் எண்ணத்திலும் இருக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் தொடர்புகளை பேணிய சம்பந்தன், அன்றைய அரசாங்கத்துக்கு பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை கொடுத்திருந்தார்.
இதன் காரணமாக, 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அன்றைய அரசாங்கத் தரப்புக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போதிலும் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை. பின்னர் பேச்சுவார்த்தையிலிருந்து அரசாங்கம் விலகிக் கொண்டிருந்தது.
ஆனாலும், மஹிந்த அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவருவதற்கான அழுத்தங்களை அன்று இரா. சம்பந்தன் பிரயோகித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றத்தையடுத்து இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த அரசாங்க காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நம்பப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்ற இரா. சம்பந்தன், பல விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு, அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக அரசியல் தீர்வை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய அரசியல் யாப்புக்கான முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசியல்தீர்வைக் கண்டுவிட முடியும் என்று இரா. சம்பந்தன் நம்பினார். அதற்காக பாடுபட்டார். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியைக் கண்டிருந்தது.
இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி அமைத்த போது, அரசியல் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். இறுதி வரையில் அரசியல் தீர்வுக்காக அவர் பாடுபட்டிருந்தார். தற்போது அவர் மறைந்துள்ள நிலையில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசியக் கட்சிகள் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM