நடிகை லிஜா மோல் ஜோஸ் வீட்டில் இலங்கைத் தமிழை கற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்தார்' - இயக்குநர் சத்யசிவா

Published By: Digital Desk 2

07 Jul, 2025 | 05:34 PM
image

' கிராமத்து நாயகன்' என்ற பட்டத்தை ரசிகர்களிடமிருந்து பெற்றிருக்கும் நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி இருக்கும் ' ஃபிரீடம்' எனும் திரைப்படம் - 90களில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஃப்ரீடம் 'திரைப்படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ் , போஸ் வெங்கட்,  ரமேஷ் கண்ணா , சுதேவ் நாயர் , 'பாய்ஸ்'மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜயா கணபதி'ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ' ஃபிரீடம் ' படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினருடன் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் டி .சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் சத்ய சிவா பேசுகையில், ''ஒரு கதாபாத்திரத்தை நல்லவராக திரையில் காண்பிக்க வேண்டும் என்றால் அதற்குரிய காட்சிகளை இடம்பெறச் செய்ய வேண்டும். ஆனால் சசிக்குமாரை நீங்கள் திரையில் காண்பித்தாலே போதுமானது. நல்லவர் என்பதற்கான காட்சிகளுக்கு அவசியம் இல்லை. 

அப்பாவி-  ஏழ்மையானவர் - என்ற கதாபாத்திரத்தை திரையில் விவரிக்கும் போது நடிகை லிஜோ மோல் ஜோஸை காட்சிப்படுத்தினால் போதும். அதற்கென தனியாக காட்சிகளை இடம்பெறச் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திரைப்படத்திற்காக நடிகை லிஜோ மோல் இலங்கைத் தமிழை அவருடைய வீட்டில் கற்றுக்கொண்டு பேசி, நடித்துள்ளார். அத்துடன் இப்படத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது ''என்றார்.

இதனிடையே முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நடைபெற்ற தருணத்தில் வேலூர் கோட்டை மற்றும் அகதிகள் முகாமிலிருந்து 30 இலங்கை தமிழர்கள் தப்பி சென்ற சம்பவத்தை பின்னணியாக கொண்டு இப்படம் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right