(மா.உஷாநந்தினி)
“கதிரைவேலன் நாட்டிய நாடகத்தின் நிறைவம்சமாக உள்ள தில்லானா “சர்வ மத தில்லானா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. காரணம், கதிர்காமம் ஆலயம் இந்துக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் பௌத்தர்களுமே ஒன்றிணைந்து வழிபடும் தலம். எந்தவொரு பாகுபாடும் இன்றி, எல்லோரும் “எங்கள் கந்தன்... எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று கந்தனைக் கொண்டாடும் ஒரு தலம், கதிர்காமம். எனவே, இந்த நாட்டிய நாடகமும் அன்பு, ஒருமைப்பாட்டையே தாங்கி நிற்கிறது. அன்பும் ஒற்றுமையுமே என்றென்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இன்பம் சேர்க்கவல்லது!” என்கிறார் பரதநாட்டியக் கலைஞர் திவ்யா சுஜேன்.
கதிர்காமம் முருகன் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி வழங்கும் “கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” நாட்டிய நாடகம், எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாட்டிய நாடக நெறியாளரும் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநருமான திவ்யா சுஜேன், நாட்டிய நாடகத்துக்காக தெரிவுசெய்த தலைப்பு, கதிர்காமம் தலம் பற்றிய சிறப்புகள், நடனம் மற்றும் இசை அமைப்புக்களில் உள்ள சுவாரஸ்யங்கள், இலங்கை - இந்தியக் கலைஞர்களின் கூட்டிணைவு போன்ற பல்வேறு விடயங்களை, வீரகேசரி வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர் அளித்த நேர்காணல் இனி...

கதிரைவேலனுக்கு ஒரு நாட்டிய நாடக சமர்ப்பணம்... நடன நெறியாளராக உங்கள் மன உணர்வுகள் எப்படியிருக்கின்றன?
“முருகா முருகா முருகா...” “அரோகரா” என்று சொல்கிற விதமாக உள்ளங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. நான் மட்டுமல்ல, என்னுடன் சேர்ந்து இந்த நிகழ்வுக்காக பணியில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களும் வேலனை, கந்தனை நினைத்து கூத்தாடிக்கொண்டிருக்கின்றன.
இந்த நாட்டிய நாடக நெறியாள்கைக்காக, தயாரிப்புக்காக தினந்தினம் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இது, கதிர்காமக் கந்தனின் திருவிழாக் காலம். கதிர்காமத்தில் எப்படி கந்தனுக்கான திருவிழாக் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறதோ, அதேமாதிரியான ஒரு கொண்டாட்ட உணர்வோடு நாங்களும் நாட்டிய நாடகத்துக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.
குறிப்பாக, அபிநயக்ஷேத்ரா, அன்பு நிறைந்த ஒரு கூடம். எந்தவொரு தயாரிப்பின்போதும், அதற்கான பணிகளின்போதும் எங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி, கொண்டாட்டம் இருக்கும். அந்த படைப்பை எல்லோரும் உணர்வுபூர்வமாக அனுபவிக்க வேண்டும், அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், இணங்கி வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இந்தப் படைப்பு, முருகன் மீதான பக்தியென ஒருபுறமிருக்க, மறுபுறம், ஒரு மிகப் பெரிய படைப்பை, தயாரிப்பை, கலையை உணர்ந்து, அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என சொல்லத் தோன்றுகிறது.
அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி 2012இலிருந்து தொடர்ந்து நாட்டிய நாடகப் படைப்புகளை வழங்கிவருகிறது. 2017இல் அவிசாவளை சீரடி சாய்பாபா கோயில் திருப்பணிக்காக, “சீரடி சாய் சத்சரிதம்” நாட்டிய நாடகத்தை நடத்தி, நிதி திரட்டி வழங்கியிருந்தோம். 2020இல் திருக்கேதீஸ்வரம் கோயிலில் கேது சந்நிதி கட்டுவதற்கான நிதியை திரட்டுவதற்காக, நாட்டிய நாடகமொன்றை வழங்கியிருந்தோம். அந்த இரு நிகழ்வுகளாயினும், இனி நடைபெறவுள்ள கதிரைவேலனுக்கான நாட்டிய நாடகமாயினும், எல்லாமே ஒரு இறை செயல் என்றே நாம் கருதுகிறோம். இது எந்தவித முன்திட்டமுமின்றி, தானாக அமையப்பெற்றுள்ளது.
திருக்கேதீஸ்வரம் நாட்டிய நாடகத்தினை மேடையேற்றியபோது, அதன் வெற்றிகரமான நிறைவு வேளையில் கதிர்காமம் ஆலயத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு பெரியவர், “கதிர்காமக் கந்தனுக்கும் இதைப் போல ஒரு நாட்டிய நாடகத்தை நடத்தலாமே” என்றொரு விண்ணப்பத்தை எங்களிடம் வைத்தார். அதை முருகனுடைய விண்ணப்பமாகவே ஏற்றுக்கொண்டோம். அது, ஒரு தக்க தருணத்தில் நிறைவேறுகிறது.

“கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” என்ற தலைப்பை எங்கிருந்து எடுத்தீர்கள்?
கதிர்காமம் ஆலயத்தின் புகழ் பாடும் பழைய பாடல் வரிகளிலிருந்து இந்த வரிகளை எடுத்திருக்கிறோம். இந்தியாவின் தமிழறிஞர், பிரபல எழுத்தாளர், மேடைப் பேச்சாளரான, “திரு.வி.க” என்று அழைக்கப்படும் திரு.வி.கல்யாணசுந்தரனாரின்
“மூங்கில் கழிவில்லார் களியாடுங் கதிரைவேற்
பெருமானே! கருணைத் தேவே!” என்ற வரிகளே, நாட்டிய நாடகத்துக்கான தலைப்பை எடுத்துக்கொடுத்திருக்கிறது.
நமது நாட்டின் புராதனமும் பழைமையான கலாசாரமும் அடுத்த தலைமுறையைத் தொடவேண்டும் என்பதற்காக இந்த நாட்டிய நாடகத் தயாரிப்பு முழுவதிலுமே கதிர்காமம் தலத்தின் மீது பாடப்பட்ட பழமையான பாடல் வரிகளைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

நாட்டிய நாடகத்தின் கருப்பொருள், கதையாக்கம் பற்றி சொல்லுங்கள்...
கதிர்காமத் தலமே நாட்டிய நாடகத்தின் கருப்பொருள். சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக பாசறை அமைத்த இடம் “ஏமகூடம்” ஆகிறது. அந்த ஏமகூடம் “கதிர்காமம்” என்றானது வரலாறு. அன்றிலிருந்து கதிர்காமம் ஆலயத்தில் எத்தனை ஆச்சரியங்கள்!
பொதுவாக, ஸ்தல புராணத்தில் தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூன்றின் பிரசித்தமும் பேசப்படும். தீர்த்தமான மாணிக்க கங்கையின் பிரசித்தம் என்ன, மூர்த்தியின் பிரசித்தம் என்ன, இந்த தலத்தின் சிறப்புகள் என்னென்ன, யாரெல்லாம் இந்த ஆலயத்தை வழிபட்டிருக்கிறார்கள், பயன்பெற்றிருக்கிறார்கள் என்பது போன்ற நீண்ட வரலாறு ஓரளவு காலக் கிரமப்படி கதையாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாட்டிய நாடகத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மிக முக்கியமான கதைகள் அடுத்த சந்ததிக்கு போய்ச் சேரவேண்டும் என்பதையும் கதிர்காமம் ஸ்தலத்தின் புகழை ஒட்டுமொத்தமாக 90 நிமிடங்களில் எடுத்துக்காட்டுவதென்றால், எதை நாங்கள் சாரமாக எடுக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு நாடகத்தை அமைத்திருக்கிறோம்.

இலங்கை, இந்திய இசை, நடனக் கலைஞர்களில் நாட்டிய நாடகத்தில் ஒன்றிணைக்க என்ன காரணம்?
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. அபிநயக்ஷேத்ரா கலைஞர்கள் மட்டுமன்றி, ஏனைய பல கலைஞர்களும் எங்களுடன் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தில் பங்குபற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய கலைஞர்களுடன் ஒன்றுகூடி, கலந்துரையாடி, அவர்களின் கலையுணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவரவர் கலைஞானத்தை பகிர்ந்து, பணிபுரியவேண்டும் என்பது ஒரு காரணம்.
ஏனென்றால், நம் நாட்டில் கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை முகாம்கள் மிக அரிது. முன்னறிமுகம் அற்ற கலைஞர்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஐந்து ஆறு நாட்கள் தொடர்ச்சியாக, ஒன்றாக தங்கியிருந்து, முழுநேர கலைப்பயிற்சிகளைப் பெற்று, மேடையேறுவது என்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். அதுபோன்ற நிகழ்வுகள் இங்கு வாய்ப்பது குறைவு என்பதால், இந்த நாட்டிய நாடகத்தினூடாக அந்த அழகிய அனுபவத்தை அபிநயக்ஷேத்ரா கலைஞர்களும் ஏனைய கலைஞர்களும் பெறவேண்டும். இதனூடாக அவர்களது கலையின் தரமும் புரிந்துணர்வும் மேம்படவேண்டும்.
இந்த நாட்டிய நாடகத்தில் இன்னொரு சிறப்பம்சம் இருக்கிறது. பல இந்திய சித்தர்கள், குருமார்கள், பாவாக்கள், வட இந்தியர்கள் என ஏராளமானோர் கதிர்காம கந்தனை தரிசிக்க இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. வட இந்தியாவிலிருந்து வருகைதந்த சித்தர்கள் கதிர்காமத்திலேயே தங்கி, கந்தனுக்கு சேவை செய்து சமாதியடைந்த வரலாறுகளும் நிறைய உண்டு. அந்த வகையில், இந்த நாட்டிய நாடகத்தின் கருப்பொருளாக விளங்கும் கதிர்காமம் ஆலயத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் இந்திய, இலங்கைக் கலைஞர்கள் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தை வழங்குவது பொருத்தமாகவும் அமைகிறது.

“பாரதியாரின்” கொள்ளுப்பெயரன் ராஜ்குமார் பாரதி உங்களது பல நடனப் படைப்புக்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்த கதிரைவேலன் நாட்டிய நாடகத்தில் அவரது இசையின் தனித்துவமென நீங்கள் கருதுவது...?
முனைவர் 'ஞானபாநு’ ராஜ்குமார் பாரதி ஐயா அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியுடன் இணைந்து சுமார் எட்டு வருடகாலமாக இசைப்பணி ஆற்றிவருகிறார். இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் அபிநயக்ஷேத்ராவுக்கே இசையமைத்துத் தருகிறார் என்பது ஒருபுறம் நித்தியமான உண்மை, சிறப்பு என்றால், மறுபுறம் இவரது இசையமைப்பு எமது நாட்டியத்துக்கான தயாரிப்பையும் நெறியாள்கையையும் நாட்டிய கற்பனைகளையும் மேம்படச் செய்யவல்லது. அது இவரது இசையின் தனித்துவம்.
அவரது இசை மிக மிக நுட்பமானது. ஏராளமான கணக்குகளைக் கொண்டது. எமது ஆத்மாவை தீண்டி, கற்பனைகளை தட்டியெழுப்பக்கூடிய தன்மை அவரது இசைக்குண்டு. வெறுமனே ஒரு எழுந்தமாதிரியான நாட்டிய வடிவமைப்பை அந்த இசைக்கு வழங்கமுடியாது.
நாட்டியத்தைப் பொறுத்தவரை, அபிநயம் காட்டுவது சற்று கடினமானது. அது உள்ளார்ந்ததாக, ஆத்மாவோடு நெருங்கியதாக இருக்கும். அதுபோல இவரது இசையில் உள்ளார்ந்த தன்மையுடைய ஏராளமான நுட்பங்கள் இருப்பதை உணரலாம்.
ஐயாவின் இசையில் ராகப் பிரயோகங்கள், தாளக் கணக்குகள், ஜதி அமைப்புகள், அதன் வேலைப்பாடுகள், முக்கியமாக இசைக்கருவிகளை பிரயோகிக்கும் விதம், இசையடுக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. அவை எமது நாட்டியத் தரத்தை மேம்படுத்தக்கூடியவை.
இன்னும் பெருமைபடக் கூறவேண்டுமானால், ராஜ்குமார் பாரதி ஐயா இலங்கைக்கு முதன்முதலில் நாட்டிய நாடக இசையாக, திருக்கேதீஸ்வர தல புராணத்தை அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளிக்காக வழங்கியிருந்தார். கதிரைவேலன் நாட்டிய நாடகம், அவர் இசையமைக்கும் இரண்டாவது நாட்டிய நாடகப் படைப்பாகிறது.
நாட்டியப்பள்ளியின் அரங்கேற்றங்கள் ஒவ்வொரு கருப்பொருளை தாங்கி அமைகிறபோதும், அவரது இசை துணையாக வந்து நிற்கும். இசைக்கு முக்கியத்துவமளிக்கும் நடன வடிவமைப்புகளாக எமது படைப்புக்கள் இருப்பதனால் அவருக்கும் பிடித்துப்போய்விட்டது. அதனால் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன உருப்படிகளை அவரது இசையில் அரங்கேற்றியிருக்கிறோம்.
நாடக இசை மிளிரும் சில கட்டங்களைப் பற்றி கூற முடியுமா?
ராஜ்குமார் பாரதி ஐயா, இந்த நாட்டிய நாடகத்தின் முதற்கட்ட இசையினை சண்முகப்ரியா ராகத்தில், சண்முகப்ரியா தாளத்தில் ஆரம்பித்திருக்கிறார். இதில் என்ன அழகென்றால், சண்முகப்ரியா தாளம் ஆறு அங்கங்களைக் கொண்டது. ஆறு முகங்கள் உடையவனுக்கு ஆறு அங்கங்கள் கொண்ட தாளத்தில், சண்முகனுக்கு சண்முகப்ரியா ராகத்தில் இசையை அமைத்த நுட்பம் சிறப்பானது. இதுவும் கூட முருகனின் செயலே.

பலர் அறியாத, புதிய கதைகளை நாட்டிய நாடகத்தில் வைத்திருக்கிறீர்களா?
அப்படிப் பொதுப்படக் கூறிவிட முடியாது. சிலருக்கு நிறைய கதைகள் தெரிந்திருக்கும். சிலருக்கு குறைவாக தெரிந்திருக்கும். சிலர், எந்தக் கதையும் தெரியாதவர்களாகக் கூட இருப்பார்கள்.
“கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” என்று இந்த நாட்டிய நாடகத்துக்கு தலைப்பு இட்டிருக்கிறோம். பலருக்கு இந்த சொற்றொடர் எங்கிருக்கிறதென்றே தெரியாது. “கதிரைவேற்" என்ற சொல்லிலும் பிழை இருக்குமோ எனக் கேட்டவர்களும் உண்டு. எனவே, எத்தனை பேருக்கு எவ்வளவு தெரியும், தெரியாது என்று எமக்குத் தெரியாது. ஆனால், இந்த நாட்டிய நாடகத்தில் எடுத்துக்காட்டப்படும் பல விடயங்கள், பார்வையாளர்கள் முன்னெப்போதும் அறியாத, புதியவையாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். காரணம், இதன் கதையாக்கம்.
ஒரு நாட்டிய நாடகத்துக்கு மிக மிக அவசியமானது காட்சியமைப்பும் கதையாக்கமுமே. கதைகளை நகர்த்துவதில் ஒரு சீர் - வரிசை - ஒழுங்கு மட்டுமன்றி, உணர்வுகளுக்கான ஒழுங்கும் இருக்கவேண்டும். இதைப்போன்ற பல கோட்பாடுகள் ஒரு நாட்டிய நாடகத்துக்கு உண்டு. எனினும், இந்தக் கோட்பாடுகளில் கவனம் செலுத்தியெல்லாம் காட்சிகளை நாங்கள் கோர்க்கவில்லை. முருகனின் செயலால் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. இதில் நான் ஒரு கருவி மட்டுமே.
இந்த நாட்டிய நாடகத்துக்காகவே நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். நிறைய புத்தகங்கள், ஆவணங்களைத் தேடி எடுத்து, ஆராய்ந்தே, இதற்கான கதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. நிகழ்ச்சிக்கு வந்து பார்த்தால் தெரியும்... என்னென்ன புதிய விடயங்கள் இருக்கின்றன என்பது. “ஆஹா இது எனக்கு தெரியாத ஒன்று” என பார்வையாளர்கள் உணர்ந்தால், நிகழ்வின் நிறைவில், உங்களது அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

கர்நாடக இசை, மேலைத்தேய இசை, கிராமிய இசை, கூத்து, கண்டிய நடனம், கதக், களரி போன்ற பல கலையம்சங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.... ஒரு நாட்டிய நாடகத்துக்குள் இத்தனை கலைகளை புகுத்தியது ஏன்?
கதைக்கும் காட்சியமைப்புக்கும் இவை தேவைப்படுகின்றன என்பதால் மட்டுமே இந்த கலைகள் அனைத்தும் நாட்டிய நாடகத்தில் புகுத்தப்பட்டுள்ளன.
இசையாக இருக்கட்டும், ஒரு நாட்டிய அசைவாக இருக்கட்டும்... எதையுமே, எங்களிடம் நிறைய இருக்கின்றன என்ற காரணத்துக்காக புகுத்திவிடக் கூடாது. புகுத்தினால் அது கலையாகாது.
கதைக்கும் காட்சியமைப்பும் மிக இயல்பாக அவை பொருந்தியிருப்பதனால் இந்த அத்தனை கலைகளையும் சேர்த்திருக்கிறோம்.
நடனம் என்கிறபோது, முக்கியமாக கூறவேண்டுமானால், இந்தியாவின் அரும்பெரும் நடன ஆசிரியரும் “களரி” நடனக் கலைஞருமான திருமதி. மிருதுளா ராய் அவர்களும் அவரது “நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி” மாணவிகளும் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தில் பங்குபற்றுகிறார்கள். அத்துடன், மற்றுமொரு இந்தியக் கலைஞரான திருமதி. வித்யா அரசு அவர்களும் நடனமாடுகிறார்.
பொதுவாக, நம் நாட்டில் யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, ஹட்டன், மட்டக்களப்பு போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும் பங்குபற்றுகின்றனர். சில சிங்களக் கலைஞர்களும் நடனமாடுகின்றனர். முக்கியமாக, கண்டிய நடனக் கலைஞரான பேராசிரியர் ரவிபந்து அவர்களும் கூத்துக் கலைஞரான பேராசிரியர் மௌனகுரு அவர்களும் நாட்டிய நாடகத்தில் பங்கேற்பது மேலும் சிறப்புச் சேர்க்கிறது.
ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நம் நாட்டின் பாரம்பரியமான கண்டிய நடனமும் கூத்துக் கலையும் இணைக்கப்பட்டுள்ளது. கண்டிய நடனம், கூத்து, பரதநாட்டியம் ஆகிய மூன்று நடனங்களுமே இணைகின்ற காட்சியொன்றும் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.


இந்திய இசைக் கலைஞர்களின் பங்களிப்பை பற்றி கூறுங்கள்...
கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேலைத்தேய இசை, கிராமிய இசை ஆகிய நான்கு இசை வடிவங்களும், ஒன்றிலிருந்து ஒன்று பிசகாமல் நகர்ந்து, தாலாட்டுவது போல் அழகாக அமைந்திருக்கின்றன. அத்தகைய இசையினை மிகப் பெரிய இசைஞானிகளால் வழங்க முடிந்திருக்கிறது. இதில் மிகப் பெரிய பங்கு கலைமாமணி ஸ்ரீ சாய் ஷ்ரவணம் அவர்களின் ஒலி வடிவமைப்புக்கும் உண்டு. இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தபேலா வாத்தியக்கலைஞர் மட்டுல்ல, அவரோடு நெருங்கிப் பணியாற்றும் ஒருவரும் கூட. அவரது கலை நுட்பங்களை எமக்கு அள்ளி வழங்கியிருக்கிறார். இந்த பிரம்மாண்ட இசைக் கைவண்ணத்தை நாட்டியக் கலைஞர்களின் உடல்மொழியின் ஊடாக கொண்டுவரவேண்டியிருக்கிறது. இது மிக சவாலாக விடயமும் கூட.
ஒவ்வொரு வாத்தியங்களுக்கு ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அந்தந்த வாத்தியங்களுக்கு ஏற்ப நாட்டிய அசைவுகள், உடல் அசைவுகள் வேறுபட்டிருக்கும். உதாரணமாக, மிருதங்கத்தில் ஒரு கணக்கு கொடுத்தால், அதை, நாம் பாத அசைவுகளில் காட்டமுடியும். புல்லாங்குழல் அல்லது சிதார் இசைக்கு பாத அசைவைக் காட்ட முடியாது. அதன் உடல் அசைவுகள் வேறு விதமானவை. இவ்விதமாக வாத்தியங்களின் தன்மைகளுக்குத் தகுந்தாற்போல் நாட்டியம் அமைக்கவேண்டியிருந்தது.
மேலும், வாய்ப்பாட்டுக்கு மட்டுமே மூன்று பேர் உள்ளனர். குரலிசை என்கிறபோது ஐந்து குரல்கள் இதில் வருகின்றன. ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ ஆர்.பி.ஷ்ரவண், க்ருத்திகா அரவிந்த் ஆகிய தேர்ந்த கலைஞர்களின் குரல்களுக்கு நடுவே ராஜ்குமார் பாரதி ஐயாவின் குரலில் சில பாடல்கள் ஒலிக்கின்றன. இவர்களுக்கு மத்தியில் எனது குரலும் சேர்ந்திருக்கிறது.
அத்துடன், மிருதங்கத்துக்கு ஸ்ரீ கார்த்திகேயன் ராமநாதன், தாள வாத்தியங்களுக்கு ஸ்ரீ கணபதி வெங்கட சுப்ரமணியன், வயலினுக்கு ஸ்ரீ எம்பார் கண்ணன், புல்லாங்குழலுக்கு ஸ்ரீ நவின் சந்தர், வீணை மற்றும் பழைமையான வாத்தியமான ஸ்வரமண்டலுக்கு ஸ்ரீ வி.வி.சுப்ரஹ்மண்ய சர்மா, சிதாருக்கு ஸ்ரீ கிஷோர் குமார், நாதஸ்வரத்துக்கு ஸ்ரீ அடையார் D.பாலசுப்பிரமணி, ஒலிப்பதிவுக்கு ஆர்.கே.சர்வேஷ் என இவர்கள் எல்லோருமே இந்திய திரைப்பட இசைக்காக பணியாற்றுபவர்கள். மிகத் தரம் வாய்ந்தவர்கள். இவர்களது இசைக்கு நடனமாடுவதே, எமது இளம் நடனக் கலைஞர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்தான்.


கதிர்காமம் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் திரிபுகளை சுட்டிக்காட்டும் நேரடி, மறைமுக கருத்துக்கள் ஏதும் நாட்டிய நாடகத்தில் இருக்கின்றனவா?
கதிர்காமம் மட்டுமல்ல, எதன் வரலாற்றை பார்த்தாலும், வரலாற்றுத் திரிபுகள் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். எந்தவொரு வரலாற்றுத் திரிபையும், சிறந்ததொரு வரலாற்று ஆய்வின் மூலம் ஓரளவு கண்டறியலாம். அது, ஆய்வுக்கான விடயம். ஆனால், இந்த நாட்டிய நாடகம் அன்புக்கானது.
கதிர்காமம் என்பதே ஒளி பொருந்திய, அன்புமயமான நம் கந்தன் உரைகின்ற இடம். இங்கே அன்புதான் பிரதானமானது. அனைவரும் ஒன்றென்று கொண்டாடுவது கதிர்காமத்தின் சிறப்பு.
கதிரைவேலன் நாட்டிய நாடகத்தின் நிறைவம்சமாக உள்ள தில்லானாவுக்கும் கூட “சர்வ மத தில்லானா” என்றே பெயரிட்டிருக்கிறோம். காரணம், கதிர்காமம் ஆலயம் இந்துக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் பௌத்தர்களுமே ஒன்றிணைந்து வழிபடும் தலம்.
எந்தவொரு பாகுபாடும் இன்றி, எல்லோரும் “எங்கள் கந்தன்... எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று கந்தனைக் கொண்டாடும் ஒரு தலம், கதிர்காமம். எனவே, இந்த நாட்டிய நாடகமும் அன்பு, ஒருமைப்பாட்டையே தாங்கி நிற்கிறது. அன்பும் ஒற்றுமையுமே என்றென்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இன்பம் சேர்க்கவல்லது!

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM