செம்மணி மனித புதைகுழியிலிருந்து நாள்தோறும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
புதைகுழியிலிருந்து இதுவரையில் 37 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் சிலரின் எலும்புக் கூடுகளும் தாய் மற்றும் சேயின் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. சிறு பராயத்தைச் சேர்ந்த ஒருவரது எலும்புக் கூட்டுடன் நீல நிற பை ஒன்றும் விளையாட்டு பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பையானது 1996ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஐ.நா. தொண்டு நிறுவனமான யுனிசெப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பை ஆக இருக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.
இதேபோன்றே மீட்கப்பட்ட விளையாட்டு பொம்மையானது பல்வேறு சோகக் கதைகளை கூறுவதாகவே அமைந்திருக்கின்றது. இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது அம்பலமாகியிருக்கின்றது.
செம்மணி பகுதியில் வேறு இடங்களிலும் இவ்வாறான புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதிகளையும் அடையாளம் கண்டு, அவற்றை அகழ்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவே தெரிகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணி புதைகுழி பகுதியை பார்வையிட்டதுடன் இந்த விவகாரத்துக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றார்.
1996ஆம் ஆண்டு குடாநாட்டை படையினர் பூரணமாக கைப்பற்றியிருந்தனர். இவ்வாறு கைப்பற்றியதை அடுத்து பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றதாக அன்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குடும்பம் குடும்பமாக படுகொலை செய்யப்பட்டு மக்கள் புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.
1995ஆம் ஆண்டு சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாடசாலை விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் செம்மணிப் பகுதியில் படைத் தரப்பினரால் வழி மறிக்கப்பட்டு இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படைத்தரப்பினரால் விசாரணைக்கு உட்பட்டதை அறிந்த அவரது தாயார், சகோதரர் மற்றும் அயல் வீட்டுக்காரர் ஆகியோர் செம்மணி பகுதிக்கு வருகை தந்த போது அவர்களும் படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த படுகொலை வழக்கு விசாரணையின் பிரதான சூத்திரதாரியான இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ வழக்கு விசாரணையின் இறுதியில் தெரிவித்த விடயமானது செம்மணி படுகொலைகளை அம்பலப்படுத்தியிருந்தது.
கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ உட்பட 6 இராணுவத்தினருக்கும் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ, செம்மணி பகுதியில் 600 வரையிலான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல் வழங்கியிருந்தார். இந்தத் தகவலானது அன்றைய காலப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிணங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு செம்மணி பகுதியில் புதைகுழி தோண்டப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் வழக்கு விசாரணையும் இடம்பெற்றது. ஆனால், அன்றைய காலப் பகுதியில் இந்த விசாரணைகள் இடைநடுவில் கைவிடப்பட்டன. வழக்கு விசாரணையும் அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது.
செம்மணிப் பகுதியில் 600 பேர் வரையில் இராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டதாக அன்று சோமரத்ன ராஜபக் ஷ சாட்சி அளித்த போதிலும் அந்த புதைகுழி விசாரணையானது உரிய வகையில் முன்னெடுக்கப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையும் கிடப்பில் போடப்பட்டதாகவே தெரிகின்றது.
தற்போது மீண்டும் செம்மணி புதைகுழி விவகாரம் மீட்சிபெற்றுள்ளது. புதைகுழி அகழ்வின் போது இதுவரை 37 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. நாள்தோறும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.
1995, 1996ஆம் ஆண்டு காலப் பகுதியில் குடாநாட்டை படைத் தரப்பினர் முழுமையாக கைப்பற்றியதையடுத்து பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் தமது வீடுகளை பார்க்கச் சென்ற 9 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையும் அன்று முன்னெடுக்கப்பட்டு இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதில் தண்டனை வழங்கப்பட்ட இராணுவ கோப்ரல் ஒருவரே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனைவிட, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரஜினி எனும் பெண் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கு விசாரணையும் இடம்பெற்று குறித்த இராணுவ வீரர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தன.
இதேபோன்றே குடாநாட்டில் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் அன்றைய காலப் பகுதியில் அரங்கேற்றப்பட்டிருந்தன. ஆனாலும் அன்று அனைத்து சம்பவங்களும் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கவில்லை.
தற்போது செம்மணிப் பகுதியில் இடம்பெற்று வரும் அகழ்வு பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மனிதப் புதைகுழியில் கண்டறியப்படும் எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி. விக்னேஸ்வரன், ஐ.நா.விடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றார். செம்மணி மனித புதைகுழியில் கண்டறியப்படும் எலும்புக் கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதுடன் உரிய பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்படுவதை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், செம்மணியில் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள சகல எலும்புக் கூடுகளும் அரச சட்ட வைத்திய அதிகாரியின் பொறுப்பின் கீழேயே வைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக அந்த எலும்புக் கூடுகள் சிதைக்கப்படுவதற்கும், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். ஆகவே, மனித புதைகுழி அகன்று எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்படுவது தொடக்கம் அவை ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையான ஒட்டுமொத்த செயன்முறையும் எந்ததெந்த தரப்பினரால் கையாளப்படுகின்றது என்பது குறித்து உடனடியாக அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இல்லையேல் தடவியல் பரிசோதனை முடிவுகள் சட்ட ரீதியாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் மீட்கப்படும் எலும்புக் கூடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்குமாறு அரசாங்கத்திடம் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்றே செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விடயத்தில் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உறுதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே மன்னார், முல்லைத்தீவு உட்பட பல பகுதிகளிலும் புதைகுழிகள் அகழப்பட்டிருந்தன. அந்த அகழ்வுப் பணிகள் தொடர்பான விசாரணைகளும் இடைநடுவிலேயே நிற்கின்றன.
இவற்றைப் போன்று செம்மணி புதைகுழி விவகாரமும் இடைநிறுத்தப்படக் கூடாது. எனவே, புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும். அத்தகையவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM