(ஆர்.பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 16 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் 1 - 1 என சமப்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியில் அறிமுகமான சுழல்பந்துவீச்சாளர் தன்விர் இஸ்லாம் தனது இரண்டாவது போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
அவரது மிகச் சிறந்த பந்துவீச்சும், தன்விர் ஹொசெய்ன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவர் குவித்த அரைச் சதங்களும் பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் ஜனித் லியனகே தனி ஒருவராக வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது.
முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க பிரகாசிக்கத் தவறி 5 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.
நிஷான் மதுஷ்க (17) தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்ததுடன் அடுத்த போட்டியில் அவருக்கு விளையாட கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.
அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 20 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து, ஆர். பிரேமதாச அரங்கில் அதிவேக அரைச் சதம் குவித்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.
பதினொரு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக திசர பெரேரா 23 பந்துகளில் பூர்த்திசெய்த அரைச் சதமே இந்த மைதானத்தில் பெறப்பட்ட முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது.
அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் நிதானத்தைக் கடைப்பிடித்த குசல் மெண்டிஸ் அடுத்த 11 பந்துகளில் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபார சதம் குவித்த சரித் அசலன்க இந்தப் போட்டியில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (126 - 5 விக்.)
ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகே 10 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுடனும் மஹீஷ் தீக்ஷன 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (170 - 8 விக்.)
எவ்வாறாயினும் துணிச்சலை வரவழைத்து புத்திசாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 9ஆவது விக்கெட்டில் துஷ்மன்த சமீரவுடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
85 பந்துகளை எதிர்கொண்ட ஜனித் லியனகே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார்.
துஷ்மன்த சமீர 13 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் தன்விர் இஸ்லாம் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். தன்ஸிம் ஹசன் சக்கிப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் (7) களம் விட்டகன்றார்.
தொடர்ந்து பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (9), ஷமிம் ஹொசெய்ன் (22) ஆகிய இருவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
இந் நிலையில் தௌஹித் ஹிரிதோய், ஜேக்கர் அலி ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜேக்கர் அலி 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தன்ஸிம் ஹசன் சக்கிப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
22ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அசித்த பெர்னாண்டோ தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை இந்தப் போட்டியில் பதிவுசெய்தார்.
அவர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெடக்ளை வீழ்த்தியதுடன் வனிந்து ஹசரங்க 60 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: தன்விர் இஸ்லாம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM