bestweb

3 பி ஹெச் கே - திரைப்பட விமர்சனம்

04 Jul, 2025 | 05:13 PM
image

3 பி ஹெச் கே - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு: சாந்தி டாக்கீஸ்

நடிகர்கள்: சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு ,விவேக் பிரசன்னா மற்றும் பலர்.

இயக்கம்: ஸ்ரீ கணேஷ்

மதிப்பீடு : 2.5 / 5

எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய சிறுகதையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த ' 3 பி ஹெச் கே' எனும் திரைப்படம் - அனைத்து நடுத்தர குடும்பத்து திரைப்பட ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாசுதேவனு ( சரத்குமார்)க்கு மூன்று அறைகள் கொண்ட சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. 

அந்த வீட்டையும்,  கடன் வாங்காமல்... தனது சேமிப்பின் மூலம் வாங்க வேண்டும் என்றும் நினைக்கிறார். இவர் பிரபு( சித்தார்த் )- ஆர்த்தி (மீதா ரகுநாத்) என்ற தனது இரண்டு வாரிசுகளின் தேவையை நிறைவேற்றிக் கொண்டே தன்னுடைய இலட்சிய கனவை எட்டினாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

சென்னை போன்ற மாநகரங்களில் வாழும் நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு என்பது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பதுதான். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை விட காணியின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வரும் இன்றைய யதார்த்தமான கள சூழலில் வாசுதேவன் போன்றவர்களின் கனவு நனவாகுமா? என்ற கேள்வியை எழுப்பி... அதற்கு அவர்களுடைய வாரிசுகள் வாழ்க்கையில் மத்திம வயதை கடக்கும் போது... உயிர்ப்புடன் வைத்திருக்கும் தந்தையின் கனவிற்காக வங்கியிலிருந்து கடனுதவி பெற்றால் தான் நனவாக்க இயலும் என்ற யதார்த்தத்தை இப்படம் சொல்கிறது.

படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ரசிகர்களின் யூகத்தின் படியே திரைக்கதை பயணிக்கிறது. இதனால் படத்தின் திரைக்கதை மீதான எதிர்பார்ப்பை விட.. அதனை திரையில் காட்சிப்படுத்திய விதம் குறித்து கவனம் செல்கிறது. அதில் தான் இயக்குநர் வென்றிருக்கிறார். இதற்கு சரத்குமார் - தேவயானி - சித்தார்த் - மீதா ரகுநாத் - யோகி பாபு - போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்கள் இயக்குநருக்கு பக்கபலமாக தோள் கொடுத்திருக்கிறார்கள்.

அதே தருணத்தில் காட்சிகள் இயல்பாக இருந்தாலும் அவை நீளமாக இருப்பது சோர்வைத் தருகிறது. ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் ரசிகர்களை படமாளிகையின் இருக்கையில் அமர வைக்கிறது.

சரத்குமாரின் நடிப்பு தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும்.. செல்ல செல்ல அவருடைய உடல் மொழியும், கதாபாத்திர உணர்வு வெளிப்படுத்தலும் ஒன்றிணையாமல் இடைவெளியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அவருடைய முதிய வயது தோற்றத்தில் முகம் மட்டுமே முதுமையாக இருப்பது உறுத்தல்.

பிரபுவாக நடித்திருக்கும் சித்தார்த் தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பாடசாலையில் 'ஏ' லெவல் மாணவனாக திரையில் தோன்றும் போதும் ...கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டதாரியாக படிக்கும் போது கல்லூரி மாணவனாகவும், தான் தோல்வி அடைந்தவன் என்பதற்காக தந்தையிடம் மன்னிப்பு கேட்கும் போதும் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

சாந்தி, ஆர்த்தி , ஐஸ்வர்யா ஆகிய மூன்று பெண் கதாபாத்திரங்களையும் இயக்குநர் ஆணாதிக்க சிந்தனையுடன் எழுதியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது குடும்ப அமைப்பு தொடர்பாக கடந்த தசாப்தத்தில் பெண்களின் பங்களிப்பை..  இந்த தலைமுறையிலும் அதே கோணத்தில்.. அதே பார்வையில்...தொடர வேண்டும் என்பதனை மறைமுகமாக வலியுறுத்துவது போல் இருக்கிறது.  

ஆனால் இந்த மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் தேவயானி- மீதா ரகுநாத் -சைத்ரா - தங்களுடைய நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார்கள்.

யோகி பாபு சில இடங்களில் மட்டும் திரையில் தோன்றினாலும் தன்னுடைய வழக்கமான 'ஒன் லைன்' பஞ்ச் மூலம் சிரிப்பை வரவழைக்கிறார்.

இதுபோன்ற நடுத்தர மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை திரையில் உரக்க பேசும் போது பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் 3 பி ஹெச் கே அந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் ஒப்புக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.

3 பி ஹெச் கே - விற்பனையாகாத தரைத்தள குடியிருப்பு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right