bestweb

பீனிக்ஸ் வீழான் - திரைப்பட விமர்சனம்

04 Jul, 2025 | 03:11 PM
image

பீனிக்ஸ் வீழான் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஏ கே பிரேவ்மேன் பிக்சர்ஸ்

நடிகர்கள் : சூர்யா சேதுபதி, 'காக்கா முட்டை' விக்னேஷ், அபி நட்சத்திரா, தேவதர்ஷினி, சம்பத் ராஜ், வரலட்சுமி சரத்குமார், திலீபன், முத்துக்குமார் மற்றும் பலர்.

இயக்கம் : 'அனல் ' அரசு

மதிப்பீடு : 2 / 5

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் என்பதால்,'பீனிக்ஸ்- வீழான் ' திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு நிறைவடைந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

வங்க கடலோரப் பகுதியில் எளிய குடியிருப்பு ஒன்றில் விளிம்பு நிலை மக்களுக்கான வாழ்வியலை வாழும் கணவனை இழந்த தேவதர்ஷினிக்கு கர்ணா( காக்கா முட்டை விக்னேஷ்) , சூர்யா ( சூர்யா சேதுபதி) என இரண்டு பிள்ளைகள்.

இதில் சூர்யா அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கரிகாலன் ( சம்பத் ராஜ்) என்பவரை ஒரு துக்க சம்பவம் நடந்த இடத்தில் காவலர்களின் முன்னிலையில் கொலை செய்துவிட்டு காவல்துறையில் சரணடைகிறார்.

அவர் 17 வயதுள்ள வளரிளம் பருவத்து பிள்ளை என்பதால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை பிள்ளைகளுக்கான சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்திற்கு நீதிமன்றத்தால் அனுப்பப்படுகிறார். அந்த சிறையில் அவனை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். அதன் பிறகு அவன் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் சூர்யாவை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறது.

அதிலிருந்து  சூர்யா தப்பித்தாரா ?இல்லையா? என்பதும், சூர்யா- கரிகாலனை கொலை செய்ததன் பின்னணி என்ன? என்பதை குறித்து விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

வழக்கமான பழிக்கு பழி வாங்கும் மசாலா கதை என்றாலும் இதில் எக்சன் காட்சிகளை அதிகமாக தூவி அறிமுக கதாநாயகன் சூர்யா சேதுபதியை அதிரடி எக்சன் நாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படி ஒரு கதையை நிச்சயமாக விஜய் சேதுபதி தெரிவு செய்திருக்க மாட்டார். ஏனெனில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு இடத்தில் கூட சூர்யாவிற்கு வாய்ப்பு இல்லை அல்லது வாய்ப்பு வழங்கப்படவில்லை. கிடைத்த ஒன்று இரண்டு வாய்ப்புகளிலும் சூர்யா தன் தந்தைக்கு நேர் எதிரானவர் என்பதை நிரூபிக்கிறார்.

முதல் பாதி எக்சன் ரசிகர்களுக்கும் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட்டை ரசிக்கும் ரசிகர்களுக்கும் என திரைப்படத்தை பிரித்து வைத்து இயக்கியிருக்கும் அனல் அரசு இனி கமர்சியல் திரைப்படங்களை இயக்குவதை விட, கமர்சியல் திரைப்படங்களில் பிரம்மாண்டமாக இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளை நேர்த்தியாக சொல்வதில் கவனம் செலுத்தலாம். இயக்குநருக்கான முத்திரை என்று எந்த இடத்திலும் இல்லாதது பெருங்குறை.

சூர்யா சேதுபதியை கடந்து 'காக்கா முட்டை' விக்னேஷ், அபி நட்சத்திரா , தேவதர்ஷினி.. ஆகியோர் மனதில் பதிகிறார்கள். சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சம்பத் ராஜ் தன்னுடைய வழக்கமான மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

பாடல்களை விட சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையை ரசிக்க முடிகிறது. ஆர். வேல்ராஜின் ஒளிப்பதிவு எக்சன் காட்சிகளில் அதிரடியாய் செயல்பட்டிருக்கிறது. 

பீனிக்ஸ்‌- நோய் தாக்கிய சாம்பல் பறவை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right