இலங்கையில் யுத்தக் குற்றம் ஒருபோதும் இடம்பெறவில்லை, யுத்தக் குற்றச் சாட்டு என்ற பெயரில் எமது இராணுவத்தை தண்டிக்க எவரேனும் வருவார்களாயின் அதற்கும் எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நாம் எமது இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மோசமான சித்திரவதை கள் இடம்பெறுவதாகவும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், போர் குற்றச்சாட்டில் இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என்ற பிரதான விடயங்களை ஐ.நா வின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுக்கும் வகையில் விஜயதாச இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதானது,
இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்யப்படும் பெரும்பாலான கைதிகளை சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக கூறும் காரணிகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மிகவும் ஒழுக்கமான சட்ட கொள்கையை கொண்டுள்ளோம். எம்மால் எந்த சந்தர்ப்பத்திலும் மோசமான வகையில் செயற்பட முடியாது. உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளை கொண்டும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டும் கூறப்படும் விடயங்கள் தொடர்பில் ஒரு அரசாங்கத்தின் மீதும் அதன் சட்ட தன்மைகள் மீதும் குற்றம் சுமத்த கூடாது. இன்று மேற்கத்திய நாடுகளின் பலர் ஆதாரமற்ற கருத்துக்களை வைத்தே அறிக்கைகள் தாயாரித்து வருகின்றனர்.
அதேபோல் 2008 விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டும் பொய்யான ஒன்றாகும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளில் 12 ஆயிரம் பேர் முன்னைய அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடும் குற்றங்களில் கைதுசெய்யப்பட்ட 71 புலி பயங்கரவாதிகள் மட்டுமே இன்று தடுப்பில் உள்ளனர். இவர்கள் யுத்த காலத்தில் மிகவும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்ட நபர்களாவர். பேருந்துகளில் குண்டு வைத்தவர்கள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்த நபர்கள் என பலதரப்பட்டடோர் இதில் உள்ளனர். இவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுதலை செய்ய முடியாது.
யுத்தக் குற்றம் ஒன்று நாட்டில் இடம்பெறவில்லை. இங்கு இடம்பெற்றது மனிதாபிமான நடவடிக்கையாகும். அன்று எமது இராணுவம் உறுதியாக முன்னேறிய காரணத்தினால் தான் இன்று வரையில் மாத்திரம் அல்லாது நாடு பூராகவும் மூவின மக்களும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எந்தவொரு யுத்தமும் அமைதியான முறையில் நடைபெறாது. ஆனால் எமது இராணுவம் ஒருபோதும் இராணுவ குற்றத்தை மேற்கொள்ளவில்லை. அதேபோல் எம்மீது குற்றம் சுமத்தும் நபர்கள் முதலில் அவர்கள் செய்த மற்றும் செய்துகொண்டு இருக்கும் யுத்த குற்றங்கள் தொடர்பில் முதலில் பொறுப்புக்கூறவேண்டும். அதன் பின்னர் ஏனைய நாடுகளின் நிலைமைகளை பார்க்கலாம். யுத்த குற்றச்சாட்டு என்ற பெயரில் எமது இராணுவத்தை தண்டிக்க எவரேனும் வருவார்களாயின் அதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நாம் எமது இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
அதேபோல் நாட்டில் மனிதாபிமான நகர்வுகள் தொடர்பில் நாம் அரசாங்கம் என்ற வகையில் பலமாக முன்செல்ல வேண்டிய தேவை உள்ளது. அவை தொடர்பில் நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் வாக்குறுதி வழங்கியுள்ளோம். அதற்காக இராணுவத்தை தண்டிக்கவும் யுத்த குற்றம் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் அழுத்தம் கொடுக்குமாயின் அதை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. யாருக்கும் அடிபணிந்து செயற்பட நாம் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM