டி.பி.எஸ்.ஜெயராஜ்
2025 ஜூன் 29ஆம் திகதி தனது 80ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 நவம்பரில் இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவாகியதன் மூலம் வரலாறு படைத்தவர். சந்திரிகா அல்லது சி.பி.கே. என்று பிரபல்யமாக அறியப்படும் குமாரதுங்க 1994 ஜனாதிபதி தேர்தலில் 62 சதவீதமான வாக்குகளை பெற்றார். பிறகு 1999 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் 51 சதவீதமான வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார். அவர் 1994 நவம்பர் தொடக்கம் 2005 நவம்பர் வரை 11 வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருந்தார்.
ஜனாதிபதியாக தெரிவாவதற்கு முன்னர் சந்திரிகா மூன்று மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். 1994 ஆகஸ்டில் அவர் பிரதமராக பதவியேற்றமை இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த உலக சாதனையாக அமைந்தது. தந்தையையும் தாயையும் பிரதமராகக் கொண்ட ஒருவர் பிரதமராக வந்த முதல் சந்தர்ப்பமாகவும் அது வரலாற்றில் பதிவானது. அவரது தந்தையார் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டு தொடக்கம் 1959 ஆண்டு வரை இலங்கையின் பிரதமராக இருந்தார். தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க முதலில் 1960ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரையும் அடுத்து 1970ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆணடு வரையும் பிரதமராக பதவி வகித்தார்.
சந்திரிகா குமாரதுங்க ஒரு பிரகாசமான ஆனால் சர்ச்சைக்குரிய அரசியல் ஆளுமை. மக்கள் மத்தியில் ஒரு கலப்பான பிரதிபலிப்புக்களை அவர் ஏற்படுத்தினார். சிலர் அவரை நேசித்து மெச்சினார்கள். அதேவேளை வேறு சிலர் அவரை வெறுத்தார்கள். சந்திரிகா செய்த காரியங்கள் பலவற்றுக்கும் செய்யாத காரியங்கள் பலவற்றுக்கும் குற்றப் பொறுப்புடையவர். மக்களினால் தேர்தல் ஒன்றில் தெரிவு செய்யப்பட்டு பதவிக்கு வந்த அரசியல் தலைவர் ஒவ்வொருவரையும் பொறுத்தவரை இது உண்மையே. தேர்தல் பிரசாரங்கள் அலங்காரக் கவிதை நடையில் இருக்கின்ற அதேவேளை, ஆட்சிமுறை கடினமான உரைநடையில் காணப்படுகிறது.
சந்திரிகா 1994ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டபோது ஒரு சமாதானத் தேவதை என்று போற்றப்பட்டார். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரப்போவதாக கூறியே அவர் மக்களிடம் வாக்குக் கேட்டார். ஜனாதிபதி சந்திரிகா தமிழீழ விடுதலை புலிகளுடனான கொடூரமான போரை முடிவுக்கு கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமாக இணக்கத் தீர்வொன்றைக் காண்பதன் மூலமாக நிலைபேறான சமாதானத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு குறுகியகால மோதல் ஓய்வுக்குப் பிறகு போர் கவலைக்குரிய வகையில் மீண்டும் மூண்டது.
"சமாதானத்துக்கான போர்" என்று வர்ணிக்கப்பட்ட அந்த போர்க் காலகட்டம் பெருமளவு உயிரிழப்புகளையும் அழிவுளையும் ஏற்படுத்தியது. சமாதானப்புறா போர்க் கழுகாக மாறியதாக சந்திரிகா விமர்சிக்கப்பட்டார். கடந்த காலத்தில் நானும் கூட அவரை அவ்வாறு விமர்சித்திருந்தேன்.
இந்த கடந்தகால விமர்சனங்களுக்கு மத்தியிலும், நான் எப்போதும் சந்திரிகாவை சாதகமான முறையில் மதித்தேன். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் அவரது தீவிர அபிமானிகளில் நானும் ஒருவன். அவரது சமாதான முயற்சிகளை நான் உறுதியாக ஆதரித்தேன். 1995 ஏப்ரலில் போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டு மீண்டும் போரைத் தொடங்கியமைக்காக நான் விடுதலைப் புலிகளை கடுமையாக கண்டனம் செய்தேன்.
அதற்கான விலையை நான் செலுத்தினேன். கனடாவில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எனக்கும் ரொறன்டோவில் எனக்கு சொந்தமான இரு தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கும் எதிராக விசமத்தனமான பிரசாரங்களைச் செய்தனர். அதன் விளைவாக 1996 ஏப்ரலில் பத்திரிகையை மூடவேண்டியதாயிற்று.
ஆனால், போர் தீவிரமடையவே நிலைவரங்கள் மாற்றமடைந்தன. போர் எப்போதுமே அதன் கொடூரமான தர்க்கத்தையும் பயங்கரமான வேகத்தையும் கொண்டிருக்கும். வடக்கு, கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிராந்தியங்களில் இடம்பெற்ற போர் சாதாரண தமிழ் குடிமக்களுக்கு பெரும் அவலங்களை கொண்டு வந்தது. அதனால், அன்றைய ஜனாதிபதி குமாரதுங்கவை மிகவும் கடுமையாக கண்டிக்கும் ஒருவனாக நான் மாறினேன்.
தமிழ்த் தேசியப் பிரச்சினை
சில விவகாரங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தமிழ் தேசியப் பிரச்சினையை பொறுத்தவரை, நன்னோக்கத்தைக் கொண்ட ஒருவராக சந்திரிகாவை நான் தொடர்ந்து மதித்து வந்தேன். அந்த வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் அது பற்றி நான் எழுதியிருக்கிறேன். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கிடையில் ஒரு ஒப்பீட்டை நான் செய்வது வழமை. அந்த ஒப்பீடு தொடர்ந்தும் பெறுமதியானதாகவே இருக்கிறது.
மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுடன் பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வை செய்வதற்கு அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் எதிரானவர். ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையிலும் கூட, அதிகாரப்பகிர்வுக்கு உணர்வுபூர்வமாக எதிரானவர். ஆனால், அவர் உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவதே நிலைபேறான சமாதானத்துக்கும் பொருளாதார சுபீட்சத்துக்கும் ஒரே வழி என்பதை அறிவுபூர்வமாக விளங்கிக்கொண்டிருக்கிறார். சந்திரிகா வித்தியாசமானவர். அவர் அதிகாரப் பகிர்வையும் சமத்துவத்தையும் மெய்யாகவே அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆதரிப்பவர்.
அத்தகைய ஓர் உன்னதமான சிந்தனையைக் கொண்டிருந்த போதிலும், தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கத்தையும் சமத்துவ உரிமைகளையும் வழங்க வேண்டும் என்று எப்போதும் கொண்டிருந்த விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. பதிலாக அவர் போர் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டார். அதனால் அவர் தமிழ் மக்களிடமிருந்தும் இலங்கையில் நியாயசிந்தை கொண்டர்களில் பெரும்பாலானவர்களிடமிருந்தும் தனிமைப்பட வேண்டிவந்தது. பின்னோக்கிப் பார்க்கும்போது இது ஏன், எவ்வாறு என்பதை என்னால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதனால், ஜூன் 29 சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது 80வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருக்கும் நிலையில் அவரின் அரசியல் மீது இந்த கட்டுரையில் கவனம் செலுத்துகிறேன்.
அரசியல் குடும்பங்கள்
தெற்காசியாவின் பெரும்பாலான நாடுகளில் அரசியல் வம்சங்கள் பொதுவான ஒரு அம்சமாகும். சந்திரிகாவும் 'அரசியல் குடும்பங்களின்' தோற்றமும் வளர்ச்சியும் வழமையான ஒரு நிகழ்வுப்போக்காக இருக்கின்ற இலங்கையில் முக்கியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரே.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சட்டசபை மற்றும் அரசாங்க சபை ஆகியவற்றின் ஊடாக இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவங்களை பெற்றபோது தேர்தல்களின் ஊடாக ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் பதவிகளை நாடும் நடைமுறை தொடங்கியது. காலனித்துவ தளையில் இருந்து விடுதலை கிடைத்த நிலையில் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படத் தொடங்கியதும் அரசியல் வம்சத் தோற்றப்பாடு மேலும் செல்வாக்குப் பெற்றது. உள்ளூராட்சி சபைகள் தொடக்கம் அதியுயர் சட்டவாக்க சபையான பாராளுமன்றம் வரை பல மட்டங்களிலும் அரசியல் குடும்பங்கள் பல்கிப் பெருகத் தொடங்கின.
குடும்ப அரசியல் என்பது இலங்கை அரசியலில் நிலக்காட்சியில் இனம், மதம், சாதி கடந்து பரிச்சயமான ஒரு அம்சமாக வந்துவிட்டது. கிழக்கு மாகாணத்தின் அப்துல் மஜீதுகள் தொடங்கி தெற்கின் அபேவர்தனாக்கள் வரை அகரவரிசையில் இலங்கையின் அரசியல் குடும்பங்களின் ஒழுங்கை நோக்கும்போது இலங்கை அரசியலில் குடும்ப அரசியலுக்கு இனம் ஒரு தடையாக இருக்கவில்லை என்பதை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதி மட்டங்களில் வெவ்வேறு அரசியல் வம்ச வகைகள் இருக்கின்றன. பிராந்தியங்களிலும் உப பிராந்தியங்களிலும் பல அரசியல் குடும்பங்கள் இருக்கின்ற அதேவேளை, இலங்கையில் இதுவரையில், தேசிய மட்டத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பிரதான குடும்ப அமைப்புக்களே இருந்து வந்தன.
முதலாவது டி.எஸ். சேனநாயக்கவின் 'போத்தலே” வம்சம். அவரும் அவரது மகன் டட்லி சேனநாயக்க மற்றும் மருமகன் சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோருடன் அவர்களின் விரிவடைந்த குடும்பத்தின் உறுப்பினர்களான ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணிவ் விக்கிரமசிங்கவை உள்ளடக்கியதாக அந்த வம்சம் இருந்தது. அடுத்தது எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, அவரது மனைவி சிறிமாவோ ரத்வத்தை பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகன் அநுரா பண்டாரநாயக்க ஆகியோரைக் கொண்ட 'ஹொரகொல்ல வம்சம்.' மூன்றாவது டொன் அல்வின் (டி.ஏ.) ராஜபக்ஷவின் மெடமுலான வம்சம். டி.ஏ. ராஜபக்ஷவின் மகன்களான சமல், மகிந்த, கோட்டாபய, பசில் ஆகியோருடன் பேரன்களான நாமல், சஷீந்திர மற்றும் நிபுன எல்லோரும் அரசியல் அதிகாரத்தை அனுபவித்தனர்.
பண்டாரநாயக்க வம்சம்
சந்திரிகா மகாமுதலியார் பண்டாரநாயக்கவினதும் ரத்வத்த திசாவவினதும் பேத்தியாவார். அவரது தந்தையார் சொலமன் பண்டாரநாயக்கவுக்கும் தாயார் சிறிமா ரத்வத்தைக்கும் இடையில் நடைபெற்ற திருமணம் பெருமதிப்புக்குரிய கரையோர மற்றும் கண்டி சிங்களக் குடும்பங்களுக்கு இடையிலான ஒரு அரசியல் ஒன்றிணைவு என்று வர்ணிக்கப்பட்டது. அந்த திருமணம் புதிய அரசியல் வம்சம் ஒன்றின் தொடக்கமாக இருந்தது. என்னே அரசியல் வம்சம் அது!
1984 - 2008 காலப்பகுதியில் அதாவது சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் அறுபது வருடங்களில் 1959 செப்டெம்பர் தொடக்கம் 1960 ஜூலை வரையான பத்து மாதங்களை தவிர, ஒரு பண்டாரநாயக்க சட்டவாக்க சபையில் (பாராளுமன்றம், செனட்) அங்கம் வகித்தார். அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் 21 வருடங்கள் பிரதமர்களாகவும் 14 வருடங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் பதவி வகித்தனர்.
குடும்பத்தின் உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவிக்கு வருகின்ற தோற்றப்பாடு பண்டாரநாயக்கக்களுடன் ஆரம்பிக்கவில்லை. அதை தொடங்கியது சேனநாயக்கக்களே. டட்லி செல்டன் சேனநாயக்க தனது தந்தையாருக்கு பிறகு 1952ஆம் ஆண்டில் பிரதமரானார். பிறகு 1960 ஜூலையில் விதவை சிறிமா பிரதமராக பதவியேற்றபோது பண்டாரநாயக்கக்களின் நேரம் வந்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1959ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் ஜவஹர்லால் நேரு 1964ஆம் ஆண்டு வரை 17 வருடங்கள் பிரதமராக பதவியில் இருந்தார். அவரது புதல்வி இந்திரா காந்தி 1966ஆம் ஆண்டில் பிரதமராக வந்தார். நேருக்களும் பண்டாரநாயக்கக்களும் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் நெருக்கமானவர்களாக கருதப்பட்டனர்.
நேரு - பண்டாரநாயக்க
நேருவும் பண்டாரநாயக்கவும் இந்திராவும் சிறிமாவும் தங்களது பிள்ளைகளான ராஜீவ், சஞ்சய், சுனேத்ரா, சந்திரிகா மற்றும் அநுராவுடன் ஒன்றாக நிற்கும் இரு குடும்பங்களினதும் பிரபலமான ஒரு புகைப்படம் இருக்கிறது. அந்த படத்தைப் பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது. அது எடுக்கப்பட்டபோது நேருவும் பண்டாரநாயக்கவும் பிரதமர்கள். ஆனால், விரைவாகவே சிறிமாவும் இந்திராவும் பிரதமர்களாக வந்தனர். அவர்களின் பிள்ளைகளில் யார் முதலில் பிரதமராக வருவது என்பது ஒரு கேள்வி.
இந்திராவின் மூத்த புதல்வன் ராஜீவ் ஒரு விமானியாகி இத்தாலியைச் சேர்ந்த சோனியாவை திருமணம் செய்துகொண்டார். அவர் அரசியலில் அக்கறை காட்டவில்லை. இளைய புதல்வன் சஞ்சயே தனது மனைவி மேனகாவுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். ஆனால், சஞ்சய் 1980ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி குறுகிய காலத்திற்குள் விமானவிபத்து ஒன்றில் காலமானார். அரசியலில் ஈடுபடுவதில் தயக்கம் கொண்டவரான ராஜீவ் சகோதரரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு பாராளுமன்ற உறுப்பினரானார். அதற்கு பிறகு 1984 அக்டோபரில் தாயார் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் பிரதமராகவும் பதவியேற்றார். ராஜீவும் 1991ஆம் ஆண்டில் விடுதலை புலிகளினால் கொலைசெய்யப்பட்டார். ராஜீவின் விதவை மனைவி சோனியா காந்தி ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதுடன் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமை தாங்குகிறார். மகன் ராகுல் காந்தியும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ராஜீவின் அரசியல் வாரிசாக அவர் நோக்கப்படுகிறார். ராகுலின் சகோதரி பிரியங்காவும் இப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
பண்டாரநாயக்கவின் பிள்ளைகளை பொறுத்தவரை, சுனேத்ராவும் சந்திரிகாவும் அநுராவுக்கு மூத்தவர்கள். அவர்கள் இருவரும் அநுரா அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னதாக ஓரளவுக்கு அரசியல் பிரசன்னமாக இருந்தனர். என்றாலும், இளைய சகோதரரான அநுரா 28 வயதாக இருக்கும்போது 1977ஆம் ஆண்டில் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். ஆறு வருடங்கள கழித்து 34 வயதில் அநுரா எதிர்க்கட்சி தலைவராகவும் வந்தார்.
தந்தையார் 1956ஆம் ஆண்டில் பிரதமராகும் வரை 1952ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் என்பதால் அநுராவும் அதே விதமாக பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
ஸ்ரீலங்கா மகாஜன கட்சி
தனது கணவர் விஜய குமாரதுங்கவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறிய அநுராவின் சகோதரி சந்திரிகா ஸ்ரீலங்கா மகாஜன கட்சி என்ற புதிய கட்சியை அமைத்தார். 1988ஆம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே வி.பி.) வினால் கணவர் சுடடுக்கொலை செய்யப்பட்ட பின்னர் சந்திரிகா லண்டனுக்குச் சென்று சுய அஞ்ஞாதவாசம் செய்தார். ஆனால், சில வருடங்கள் கழிந்து நாடு திரும்பிய அவர் மீண்டும் சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டார். இதனால் அவருக்கும் அநுராவுக்கும் இடையிலும் சிறிமாவோவுக்கும் அநுராவுக்கும் இடையிலும் கூட பதற்றம் உருவானது. மகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக தாயாரைக் குற்றஞ்சாட்டிய மகன் கட்சியில் இருந்து வெளியேறி பரம எதிரியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டார்.
1994ஆம் ஆண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன பெரமுன அதிகாரத்துக்கு வந்தபோது ஆகஸ்டில் சந்திரிகாவே பிரதமராக வந்தார். நவம்பரில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர் மகத்தான வெற்றியைப் பெற்றார். சிறிமாவோ பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரதமர் பதவியை வகித்த முதல் கணவர் - மனைவி என்று வரலாறு படைத்த பண்டாரநாயக்கக்கள் முதல் தந்தை - தாய் - மகள் என்றும் ஜனாதிபதியாக மகளும் பிரதமராக தாயாரும் என்ற முதல் கூட்டு என்றும் வரலாறு படைத்தனர்.
பெற்றோரின் அரசியல்
தனது பெற்றோர் கடைப்பிடித்த அரசியலில் இருந்து விடுபட்டதே சந்திரிகாவின் அரசியலைப் பற்றி மிகவும் மெச்சத்தக்க அம்சமாகும். குறிப்பாக, இலங்கை இனப்பிரச்சினையில் இந்த வேறுபாடு மிகவும் பிரத்தியேகமானதாக இருந்தது.
தமிழ்ச் சிறுபான்மையினச் சமூகத்துக்கு பாதகமான முறையில் சிங்கள 'பெரும்பான்மையினவாத' அரசியலில் ஈடுபட்ட முக்கியமான முதல் சிங்கள அரசியல் தலைவர் சந்திரிகாவின் தந்தையார் என்பது ஒன்றும் இரகசியம் இல்லை. நாட்டு மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக சிங்களம் மாத்திரம் அரசகரும மொழி என்ற கொள்கையை பயன்படுத்திய பண்டாரநாயக்க வளமான அறுவடையைச் செய்தார். குறுகிய கால அரசியல் பயனுக்காக இனக்குரோதம் திட்டமிட்ட வகையில் ஊக்குவிக்கப்பட்டது.
சந்திரிகாவின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் கணவரின் பாதையையே பின்பற்றி சிங்கள ஆதரவுக் கொள்கையை முன்னெடுத்தார். வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் நடத்திய அமைதிவழி சத்தியாக்கிரக போராட்டத்தை, இராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்கிய சிறிமாவோ அந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேறு செயற்பாட்டாளர்களையும் பனாகொடை இராணுவ முகாமில் பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைத்தார்.
சிறிமாவோ பிறகு சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் கூட்டணியான 'ஐக்கிய முன்னணி'க்கு தலைமை தாங்கினார். எதிரணியில் இருந்தபோது இந்த கட்சிகள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாவட்ட சபைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடுத்தன.
திருமதி பண்டாரநாயக்க மீண்டும் 1970ஆம் ஆண்டில் பிரதமராக வந்தபோது பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த முறையின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பிரவேசித்து முக்கியமான கற்கை நெறிகளை படிப்பதற்கு சிங்கள மாணவர்களை விடவும் கூடுதல் புள்ளிகளை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பெறவேண்டியிருந்தது. ஒற்றையாட்சி அரசை (Unitary State) நிறுவிய புதிய அரசியலமைப்பு ஒன்றையும் அறிமுகப்படுத்திய சிறிமாவோ அரசாங்கம் பௌத்த மதத்துக்கு அதிமுன்னுரிமையையும் வழங்கியது. அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் விசாரணை எதுவுமின்றி பல தமிழ் இளைஞர்களை தடுப்புக்காவலில் வைத்தமையும் அந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
கணவனும் மனைவியுமாக பண்டாரநாயக்கக்கள் இனங்களுக்கு இடையிலான பிளவை அகலப்படுத்தி தமிழ்ப் பிரிவினைவாதத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதற்கு பொறுப்பாக இருந்தனர் என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது. இத்தகைய குடும்ப அரசியலுக்கு மத்தியிலும், சந்திரிகா பண்டாரநாயக்க தனது பெற்றோர்களின் அரசியலை பின்பற்றி நடக்கவில்லை. அவர் அறிவுபூர்வமாக முற்போக்கான ஒரு நோக்குடன் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவராக இருந்தார்.
மத்திய இடது
மத்திய வலது போக்குடையவராக கருதப்பட்ட சகோதரர் அநுராவைப் போலன்றி சந்திரிகாவும் அவரது மூத்த சகோதரி சுனேத்ராவும் அவர்களது கருத்துக்களைப் பொறுத்தவரை மத்திய இடது போக்கைக் கொண்டவர்களாக இருந்தனர். சந்திரிகாவை பொறுத்தவரை, பிரான்சில் கல்வி கற்றவர் என்பதால் அவரது அரசியல் கோட்பாடு மேலும் முற்போக்கானதாக இருந்தது. மேற்குலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் 'புரட்சிகர' அரசியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்ட கொந்தளிப்பான காலகட்டமாக அது இருந்தது.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சந்திரிகாவின் அரசியல் தீவிரமான போக்குடையதாக மாறியதாக நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். சந்திரிகாவுக்கும் விஜயவுக்கும் இடையிலான திருமணம் வர்க்கம், மதம் மற்றும் சாதி எல்லாவற்றையும் கடந்ததாக இருந்தது. மிகவும் முக்கியமாக இருவரும் முற்போக்கான உலக நோக்கைக் கொண்டவர்களாக இருந்தனர். சந்திரிகாவின் வாழ்க்கையை விஜய குமாரதுங்க பல வழிகளில் மாற்றினார்.
விஜய குமாரதுங்க
விஜய குமாரதுங்க என்று உலகினால் அறியப்பட்ட கோவிலகே விஜய அந்தோனி குமாரதுங்க சீதுவையில் 1945 அக்டோபர் 9ஆம் திகதி பிறந்தார். விஜய ஆட்களை கவர்ந்திழுக்கும் ஒரு நேயமான ஒரு ஆளுமை. அவரது நோக்கை நான் பெரிதும் விரும்பி மதித்தேன். அவர் இலங்கையை சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு பல்லின, பன்முக, சமத்துவ தேசமாக மாற்றவேண்டும் என்ற நோக்கைக் கொண்ட மனிதராக விளங்கினார். மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட விஜய மிகவும் இளம் வயதில் கொலை செய்யப்படாவிட்டால், இந்த அழகான தீவின் விதியை மிகவும் நேர்மறையான முறையில் மாற்றியிருக்கக்கூடும்.
நடிப்புத்தான் விஜய குமாரதுங்கவின் அக்கீகரிக்கப்பட்ட தொழில். ஆனால், அரசியல் அவர் தெரிந்தெடுத்துக்கொண்ட பணி. இடதுசாரி சார்புக் கருத்துக்களை கொண்டிருந்ததுடன் பேராசிரியர் கார்லோ பொன்சேகாவுக்கு உறவுக்காரராகவும் இருந்த விஜய தனது இளமைக் காலத்தில் லங்கா சமசமாஜ கட்சியுடன் தொடர்பைக் கொண்டிருந்தார். பிறகு அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து அதன் கட்டான தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1977 ஜூலை பொதுத்தேர்தலில் கட்டான தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் விஜயபால மெண்டிஸை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியினால் படுமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. ஏற்கெனவே கட்டான தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயபால மெண்டிஸ் விஜய குமாரதுங்கவை 4, 212 பெரும்பான்மை வாககுகளினால் தோற்கடித்தார். விஜயபாலவுக்கு 23,950 வாக்குகளும் விஜயவுக்கு 19,738 வாக்குகளும் கிடைத்தன. தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், விஜய சுதந்திர கட்சியின் அரசியலில் தொடர்ந்தும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
சந்திரிகா பண்டாரநாயக்கவை கவர்ந்திழுத்ததன் மூலம் சுதந்திர கட்சியின் அன்றைய முதல் குடும்பத்திற்குள் விஜய திருமணம் செய்து கொண்டார். விஜயவை 1977ஆம் ஆண்டில் கண்டியிலேயே முதல் தடவையாக தான் சந்தித்ததாக அவரின் மரணத்துக்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சந்திரிகா கூறினார்.
விஜயவின் திரைப்படங்கள் சிலவற்றை சந்திரிகா பார்த்திருந்தபோதிலும், 1977ஆம் ஆண்டில் கட்டான தொகுதி சுதந்திர கட்சியின் வேட்பாளராகவே அவரை அநுரா பண்டாரநாயக்க சகோதரிக்கு முதன் முறையாக அறிமுகம் செய்தார். கண்டியில் நடைபெற்ற சுதந்திர கட்சியின் மகாநாட்டில் அதன் சகல வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
அதற்கு பிறகு சந்திரிகா அன்று வசித்துவந்த ஹொரகொல்லைக்கு விஜய அடிக்கடி வருகை தந்தார். கட்டான சுதந்திர கட்சி வேட்பாளர் தனது தொகுதியில் பல அரசியல் கூட்டங்களுக்கு கட்சியின் தலைவியின் புதல்வியை அழைக்கத் தொடங்கினார்.
1977 ஜூலையில் சுதந்திர கட்சி அரசியல் வீழ்ச்சியைச் சந்தித்தபோதிலும், தேசிய மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கு என்று கூறிக்கொண்டு சந்திரிகாவை விஜய தொடர்ந்து சந்தித்தார்.
லெஸ்டரும் ஹெக்டரும்
இந்த கலந்துரையாடல்கள் அழகான ஒரு காதலாக மலர்ந்தது. 1978 பெப்ரவரி 20ஆம் திகதி அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திரைப்பட இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் விஜயவின் சார்பிலும் முன்னாள் விவசாய, காணி அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ சந்திரிகாவின் சார்பிலும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். அது 19 விருந்தினர்கள் மாத்திரம் கலந்துகொண்ட ஒரு எளிமையான வைபவம்.
திருமணத்துக்கு பிறகு விஜய சந்திரிகாவுடன் 63 றொஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தில் குடியேறினார். பிறகு அவர்கள் பொரளை கின்ஸி ரோட்டிலும் கிருலப்பனை பொல்ஹேன்கொடவிலும் இருந்த வீடுகளுக்கு மாறினார்கள். விஜயவுக்கும் சந்திரிகாவுக்கும் இரு பிள்ளைகள். மகள் யசோதரா 1979ஆம் ஆண்டிலும் மகன் விமுக்தி 1982ஆம் ஆண்டிலும் பிறந்தனர். இருவரும் பிரிட்டனில் இப்போது மருத்துவ டாக்டர்கள். விஜயவும் சந்திரிகாவும் தங்களது திருமணத்தின் பத்தாவது வருட நிறைவை 1988 பெப்ரவரி 20ஆம் திகதி பெருமெடுப்பில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஐயகோ! அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் விஜய கொல்லப்பட்டார்.
தயக்கமான அரசியல்வாதி
அவரது எதிராளிகள் என்னதான் கூறினாலும், சந்திரிகா தயக்கத்துடனேயே அரசியலுக்கு வந்தார். அவரது தந்தையாரும் கணவரும் அரசியலின் விளைவாக கொல்லப்பட்டனர். சந்திரிகாவும் கூட கொலை முயற்சி ஒன்றில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆனால், ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். தயக்கத்துக்கு மத்தியிலும் ஒரு கடமையுணர்வு காரணமாக சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபட்டார். அவரது தந்தையாரால் தொடங்கப்பட்டு தாயாரால் வளர்க்கப்பட்ட கட்சி ஒரு மோசமான நிலையில் இருந்தது. அது மேலும் பல வருடங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்கும் போலத் தோன்றியது.
மேலும், சந்திரிகாவை பொறுத்தவரை அவரது கணவரின் அரசியலை நனவாக்குவதிலும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதிலும் நிறைவு செய்யப்படாத பணி ஒன்றும் இருந்தது. நாடு தவறான ஒரு திசையில் சென்றுகொண்டிருந்தது. அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்று தேவைப்பட்டது. விதி தன்னை அழைப்பதாக உணர்ந்த காரணத்தினாலேயே சந்திரிகா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கை திரும்பி அரசியலில் இறங்கியதாக முன்னாள் அமைச்சரும் சந்திரிகா விசுவாசியுமான காலஞ்சென்ற மங்கள சமரவீர ஒரு தடவை கூறியிருந்தார்.
இரு தசாப்தங்களுக்கு முன்னர் 'ரைம்' சஞ்சிகையின் அலெக்ஸ் பெறிக்கு வழங்கிய நேர்காணலில் சந்திரிகா கூறிய விடயங்கள் இதை தெளிவாக வெளிக்காட்டின. "எந்தவொரு தனிநபரும் தவிர்க்கமுடியாதவர் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், வரலாற்றுச் செயன்முறைகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு ஆட்கள் அழைக்கப்படுகின்ற சூழ்நிலைகள் குறிப்பிட்ட ஒரு விதத்தில் ஒன்று சேருகின்ற தருணங்கள் ஒரு நாட்டின் வரலாற்றில் வருகின்றன. இவ்வாறாகத்தான் மனிதகுலம் முன்னோக்கி நகர்ந்தது" என்று அவர் கூறியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM