(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 77 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.
அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தது.
இந்த மூவரும் காலி றிச்மண்ட் கல்லூரி கிரிக்கெட் அணிக்காக 2016இல் ஒன்றாக விளையாடியதுடன் அதே வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியிலும் இடம்பெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
இலங்கை அணியின் களத்தடுப்பும் அபரிமிதமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
மிலான் ரத்நாயக்க இப் போட்டியில் அறிமுகமானதுடன் அவருக்கான இலங்கை தொப்பியை தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரியா அணிவித்தார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை.
பெத்தும் நிஸ்ஸன்க (0), நிஷான் மதுஷ்க (5), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை அணியை பலமான நிலையில் இட்டார்.
குசல் மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் ஜனித் லியனகேவுடன் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்கவுடன் 6அவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்கவுடன் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும் சரித் அசலன்க பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.
குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 29 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 123 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
74ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சரித் அசலன்க தனது 5ஆவது சதத்தைக் குவித்தார்.
இதில் நான்கு சதங்கள் ஆர். பிரேமதாச அரங்கில் பெற்றவையாகும். இதன் மூலம் இந்த மைதானத்தில் இலங்கை சார்பாக 4 சதங்கள் குவித்த சனத் ஜயசூரியவின் சாதனையை சரித் அசலன்க சமப்படுத்தினார்.
பந்துவீச்சில் தஸ்கின் அஹமத் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
இலங்கையை விட பங்களாதேஷின் ஆரம்பம் மிகச் சிறப்பாக இருந்தது.
ஆரம்ப வீரர்கள் வேகமாக ஓட்டங்ளைப் பெற்றனர். எனினும் 5அவது பர்விஸ் ஹொசெய்ன் ஏமொன் (13) ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து தன்ஸித் ஹசன், முன்னாள் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவை மிலான் ரத்நாயக்கவும் குசல் மெண்டிஸும் இணைந்து ரன் அவுட் ஆக்கியவுடன் போட்டியின் சாதகத் தன்மை முழுமையாக இலங்கை பக்கம் திரும்பியது.
அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த பங்களாதேஷ், அதன் பின்னர் 7 விக்கெட்களை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.
ஆனால் மத்திய வரிசையில் ஜேக்கர் அலி திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.
முன்வரசையில் தன்சித் ஹசன் 62 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 23 ஓட்டங்களையும் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஜேக்கர் அலி 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசி இரண்டு விக்கெட்களில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
கடைசி விக்கெட்டில் மாத்திரம் ஓட்டம் பெறாமலிருந்த முஸ்தாபிஸுர் ரஹ்மானுடன் 42 ஓட்டங்களை ஜேக்கர் அலி பகிர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்
இதேவேளை, இந்தப் போட்டியில் 3 தடவைகள் குறிப்பிட்ட ஒரு நிமிடத்திற்குள் அடுத்த ஓவரை வீச இலங்கை தவறியதால் பங்களாதேஷுக்கு இனாமாக 5 அபாரத ஓட்டங்கள் வழங்கப்பட்டது.
இப் போட்டியில் லிட்டன் தாஸின் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க தனது 100ஆவது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். இதுவரை 64 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க 103 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள அடங்கலாக 7.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சரித் அசலன்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM