இலங்கையில் மலேரியா நோயினை முற்றாக அழித்த போதிலும் டெங்கு நோயினை அழிக்க முடியாதுள்ளது. இலங்கையில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

இந்த மாதத்தின் பின்னர் டெங்கு நோய் பரவல் குறைவடையும் எனினும் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வருகின்றது. மிகவும் மோசமான வகையில் எதிர்பார்க்காத அளவில் டெங்கு நோய் பரவி வருகின்றது. நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு நோய் மோசமாக பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை தடுக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையில் முன்னர் மலேரியா நோய் மிகப்பெரிய சவாலாக காணப்பட்டது. எனினும் அதனை நாம் முற்றாக அழித்துள்ளோம். 

எனினும் டெங்கு நுளம்புகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க முடித்து உள்ளது. நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நாம் சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புகள் இல்லாது எம்மால் முழுமையாக செயற்பட முடியாது. 

மேலும் கடந்த ஏழு மாதங்களில் சராசரியாக 90 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த மாதம் இறுதியுடன் நோய் பரவல் குறைவடையும் வாய்ப்புகள் உள்ளது. காலநிலை சீராக அமையும் நிலையில் எம்மால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும். 

அதேபோல் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது. மீண்டும் நாட்டில் சீரற்ற காலநிலை உருவாக்ககூடிய வாய்ப்புகள் உள்ளது எனவே மீண்டும் நிலைமைகள் மோசமடையும். எனினும் அரசாங்கமாக நாம் சகல ஆயதங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். 

எனினும்  டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருந்த போதிலும் மரண வீதமானது மிகவும் குறைந்த அளவில் காணப்படுகின்றது. அதாவது 0.3 வீதம் டெங்கு  மரண வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம்  சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் நாட்டில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.