ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டதுடன் இறுதி மதிப்பீட்டு அறிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கை விஜயத்தின் போது அவர் அரசாங்க தரப்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதியமைச்சர், ஆளுநர்கள், அரச அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோன்று அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பில் மட்டுமன்றி கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணத்துக்கும் விஜயங்களை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அங்கும் பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். யாழில் செம்மணி புதைகுழிகளை பார்வையிட்ட உயர்ஸ்தானிகர் ,அங்கு ஏற்றப்பட்டிருந்த அணையா தீபத்துக்கும் அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக வீதியில் சந்தித்து உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரையும் சந்தித்ததுடன் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் தனது மதிப்பீடுகளை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி விஜயத்தின் இறுதியில் நேற்று முன்தினம் கொழும்பில் மதிப்பீடுகளை வெளியிட்டுள்ள என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ,செம்மணியானது கடந்தகால காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தியது.
கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசுக்கு சவாலான விடயமாக அமையும். பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்பதும், உண்மைகளை வெளிப்படுத்துவதுமே காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழி என்று அறிவித்திருக்கிறார்.
மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான உண்மையையும், நீதியையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய சுயாதீன மற்றும் தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியிருக்கிறார்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்கின்றன. சமூகத்தின் முக்கிய பங்காளியான சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
அச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்திருக்கிறார்.
அந்த வகையில் சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக அவர் தனது மதிப்பீடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விடயங்களை கருத்திற் கொண்டு அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவகையில் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோன்று யுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுடன் அவர்களது காயங்கள் ஆற்றப்படுவது அவசியமாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இங்கு வருகை தந்தார். ஆரம்பத்தில் அவரது வருகை இந்த நேரத்தில் பொறுத்தமானதல்ல என சிவில் சமூக தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் வலியுறுத்தியிருந்தனர். இலங்கை தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற பிரேரணை இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் செப்டெம்பர் மாத அமர்வில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வடக்கில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் செப்டெம்பர் மாதம் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என கூறியிருந்தார்.
அந்த அடிப்படையில் செப்டெம்பர் மாத அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும் சிவில் சமூகத் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அந்த கரிசனைகளையும் தாண்டி வோல்கர் டேர்க் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருக்கிறார்.
எப்படியிருப்பினும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் முன்வைத்திருக்கின்ற விடயங்கள் தாக்கம் செலுத்தக் கூடியதாகவே இருக்கின்றன. அதாவது கடந்த காலங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது. காரணம் கடந்த கால தவறுகளை ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
அதுமட்டுமன்றி சர்வதேச சமூகமும் கடந்த கால மீறல்கள், தவறுகள் தொடர்பாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. எனவே இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். தற்போது இலங்கை வந்து சென்றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவரமான நீண்ட அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்தின் மதிப்பீடுகள் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் உயர்ஸ்தானிகர் முன்வைத்திருக்கின்ற மதிப்பீடுகள், கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு விரைவில் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறை இதயசுத்தியுடன் உருவாக்கப்பட்டு அதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவது அவசியமாகும்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் 16 வருடங்களாக தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனை இம்முறை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நேரடியாக கண்டிருக்கிறார்.
எனவே, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் ஒரு சுயாதீனமான பொறிமுறையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் யாரையும் தண்டிக்குமாறு அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. மாறாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பில் பதிலளிக்குமாறும் உண்மைகளை வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒரே இரவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவோ காயங்களை ஆற்றவோ முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. இனியும் பாதிக்கப்பட்ட மக்களினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீதி கிடைப்பதற்கு முன்பதாக அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு முன்பதாக நாங்கள் மரித்து விடுவோமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை அடையத் தொடங்கி விட்டனர்.
இந்த விடயத்தை அவர்கள் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தா னிகரிடமும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே இந்த விடயங்கள் உணர்வு பூர்வமான மற்றும் ஆழமான அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன.
அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள், கரிசனைகள், நம்பிக்கைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற வேதனை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். அதனை நோக்கமாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியிருக்கின்ற கரிசனைகள் மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஆழமான முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும் மீறல்களை ஆராயவும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டுகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM