தன்னை சிறையில் அடைக்க சதி நடப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

2017 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக 2 மாதங்களின் பின் விசாரணை நடத்தவேண்டிய தேவை ஏன் என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தன்னை சிறையில் அடைக்க சதி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக யாழ்.மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் என்பவர் குற்றப்புலனாய்வு துறையினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று 2 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்த விசாரணைக்கான அழைப்பு வந்துள்ளது. 

இது முதலமைச்சருக்கு எதிரான சதியில் முன் நின்றவர்கள் என்ற அடிப்படையில் எம்மை சிறைக்குள் தள்ளுவதன் ஊடாக முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்ப சதி செய்யலாம். 

இல்லையேல் தமிழர்களின் தலைமைகள் எனக்கூறிகொண்டிருப்பவர்கள் அரைகுறை அரசியலமைப்பை தமிழர்களுக்கு திணிக்க முயற்சிக்கையில் அதனை தமிழ் மக்களுடன் இணைந்து நாங்களும் எதிர்க்கலாம் என்னும் அடிப்படையில் எங்களை சிறைக்குள் தள்ளினால் அந்த பிரச்சினை எழாது என்பதற்காகவும் இந்த சதி நடக்கலாம். ஆனால் எங்கிருந்தாலும் நாம் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.