மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணல் மண்ணை பெற்றுக்கொள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகளை ஆம்பித்துள்ளனர்.

எனினும் வீட்டு திட்டத்திற்கு அத்தியாவசியப் பொருளான மணல் மண்ணைப் பெற்றுக்கொள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், சுமார் 28 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு டிப்பர் மணல் மண்னை பெற்றுக்கொள்ள 35 ஆயிரம் ரூபா முதல் 42 ஆயிரம் ரூபா வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணல் மண்ணுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு நாளைக்கு செல்லபடியாகும் வகையில் மன்னார் பிரதேசச் செயலகத்தினால் மண் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்ற போதும் தூர இடங்களில் இருந்து மன்னாரிற்கு மண் கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்  வீட்டுத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் மக்கள் தொடர்ச்சியாக மண்ணை பெற்றுக்கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே வீட்டுத் திட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள மக்கள் உரிய முறையில் மண்னை பெற்றுக்கொள்ள மன்னார் பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் முறையிட்ட போதும், அவர் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில்  இருந்து யாழ் மாவட்டம் உற்பட பல்வேறு  இடங்களுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் மண் கடத்தல் இடம்பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

புவிச்சரிதவியல் திணைக்களம் அதிகலவான கியூப் மண் அகழ்வு செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குகின்றனர்.அவர்களுடைய அனுமதிப்பத்திரத்தை அதிகளவானவர்கள் பெற்று வைத்துளள்னர்.

ஆனால் ஒரு நாள் அனுமதிப்பத்திரத்தை பிரதேச செயலகத்தினூடாக சிலர் பெற்றுக்கொண்டுள்ளனர். அதனை வைத்து ஒரு நாள் மாத்திரமே மணல் விநியோகத்தில் ஈடுபட ஈடுடியும். ஒரு நாள் மண் விநியோக அனுமதிப்பத்திரமானது அத்தியாவசிய வீட்டுத்தேவைகளுக்காக வழங்கப்படுகின்ற தொன்றாகும். அதனை கொண்டு வருவதற்கான வீதி அனுமதிப்பத்திரமும் வழங்கப்படுகின்றது.

எனினும் வடமாகாணத்தில் ஆற்று மற்றும் மணல் மண் காணப்படுகின்ற இடமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்ற போதும் மன்னார் தீவு பகுதியில் மணலின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

பிரதேச செயலாளரின் ஒப்புதலோடு நீண்ட கால அனுமதிப்பத்திரத்தை வழங்குகின்ற புவிச்சரிதவியல் திணைக்களமும், ஒரு நாள் அனுமதியை வழங்குகின்ற பிரதேச செயலகமும் தமக்கு சாதகமானவர்களுக்கு மண் அகழ்வை மேற்கொண்டு வினியோகிக்க அனுமதி வழங்குவதினால் அவர்கள் பல ஆயிரம் ரூபா அதிகரித்த விலையில்  மன்னார்  மக்களுக்கு  மணல் மண்ணை விநியோகித்து வருகின்றனர்.

இனால் பாதிக்கப்பட்ட  வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார். மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் குறிப்பாக இலுப்பைக்கடவை, பூங்கொடியாறு, மடு, கூராய், அருவியாறு போன்ற இடங்களில் இருந்து காவல் துறையினரின் சட்டவிரோத அனுமதியோடும், உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்போடும், மணல் மண் வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் கடிதம் மூலம் கவனத்திற்கு கொண்டு சென்ற பொதும் உரிய பலன் கிடைக்கவில்லை எனவும், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் அசமந்த போக்குடன் செயற்படுவதினாலேயே குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்தார்.