இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை

24 Jun, 2025 | 10:27 AM
image

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.  

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. 

அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி பெற்று , பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர் 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.  

அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் மனைவியும், அப்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று, விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

2022ஆம் ஆண்டு திருவெம்பாவை உற்சவத்திற்கு ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் இருந்த பழமை வாய்ந்த முருகன் சிலை உள்ளிட்ட சிலைகள் சில என்பன களவாடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட  கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருந்த போதிலும் , ஆலயத்திற்கு செல்லும் மக்கள் ,கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும் , அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

இராணுவத்தினர் அவ்வாறு அறிவித்து 06 மாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட முடியாத நிலைமையே காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி பலாலி மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆலயத்தில் இராணுவத்தினரிடம் விசேட அனுமதி பெற்று , விசேட பூஜைகளை நடாத்தி இருந்தனர்.

குறித்த பூஜையில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர தற்காலிக வீதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.

அந்நிலையில் தற்போது தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை திங்கட்கிழமை (23) நாடாளுமன்ற உறுப்பினர் , க. இளங்குமரன் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறித்த தற்காலிக வீதி அமைத்து முடிந்ததும் இராஜ இராஜேஸ்வரி அம்மனை மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உறுதி அளித்துள்ளார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03