பொலனறுவை மெதிரிகிரிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் காரணமின்றி 41 மாணவர்கள் தங்களது கைகளில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தரம் 10 மற்றும் 11 மாணவர்களில் ஒரு சிலர் முதலில் தங்கள் கைகளில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாகவும் பின்னர் ஏனைய சில மாணவர்களும் மாணவிகளும் அவர்களைத் தொடர்ந்து பிளேட் மற்றும் கூரிய கொம்பஸ் கருவிகளை பயன்படுத்தி தங்களது கைகளை காயப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு மாணவர்கள் ஏன் கையை வெட்டிக்கொண்டமை தொடர்பில் உரிய காரணம் அறியப்படாத நிலையில், மாணவர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.