ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை (23) இலங்கைக்கு வருகை தரவிருக்கிறார்.
26ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், அரசாங்கத் தரப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அத்துடன் யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்யவிருக்கிறார்.
ஆரம்பத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங் கை விஜயத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர்பில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதால் அதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மக்களும் சிவில் சமூக தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர்.
இது தொடர்பாக கடிதங்களும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த அனைத்து விடயங்களையும் கடந்து தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது உறுதியாகியிருக்கிறது.
கடும் சர்ச்சைக்குப் பின்னரும்கூட அவரது இலங்கை விஜயம் உறுதியாகியுள்ளதால் அவர் இலங்கை வரும் போது யாரை சந்திக்க வேண்டும்? எத்தகைய விடயங்களை வலியுறுத்த வேண்டும் ?என்பது தொடர்பில் உள்நாட்டு சிவில் சமூக அமைப்பினரும் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களும் பல்வேறு விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.
சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்களும் இது தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி இலங்கையிலும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் சிவில் சமூகத்தினரும் இது தொடர்பாக யோசனைகளை முன்வைத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதற்கு ஏற்பாடாக இருக்கவில்லை. எனினும் பாரிய அழுத்தத்தின் பின்னர் தற்போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
உண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வது முக்கியமான நிகழ்வாகவே இருக்கிறது. சிவில் சமூகத் தரப்பினரை பொறுத்தவரையில் செப்டெம்பர் மாதத்துக்கு பின்னர் அவர் இலங்கைக்கு வருவது பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்துகின்றனரே தவிர, அவரது வருகையை எதிர்க்கவில்லை. காரணம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயமானது எந்தக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையற்ற தன்மையை தோற்றுவிக்கக்கூடாது. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதாகவும் மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இதன் காரணமாகவே செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எப்படியிருப்பினும் அவர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகள், நகர்வுகள் இடம்பெற வேண்டும் என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரை சந்திப்பார். ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய தரப்பினரை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான அழுத்தத்தை மனித உரிமைகள் ஆணையாளர் பிரயோகிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 16 வருடங்களாக நீதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். போராடிக்கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களின் அந்த நீதிக்கான கோரிக்கை மேம்படுத்தப்பட வேண்டும். அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எவ்வாறு காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கான விஜயத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாதிக்கப்பட்ட மக்களையும் சிவில் சமூக தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அந்தத் தரப்பினரின் குரல்களை ஆணையாளர் செவிமடுக்க வேண்டும். விசேடமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் ஏன் சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடனான விசாரணை பொறிமுறையை கோருகின்றனர் என்பது தொடர்பாக ஆராய்ந்து அதற்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தமக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இதுவரை எட்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தப் பிரேரணைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் பொறிமுறைகள் எப்படி அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் யுத்தம் முடிந்து 16 வருடங்கள் கடந்தும் இன்னும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதும் இங்கு தீர்க்கமான விடயமாக உள்ளது.
அதனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு வழியை திறப்பதாக அமைய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். இதற்கு முன்னரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், அந்த விஜயங்களின் பின்னர் கூட இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்தும் அந்த மக்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயமானது திருப்புமுனையாக அமையுமா என்பது கேள்வியாக இருக்கிறது.
இலங்கை தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற பிரேரணையானது இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. இதன் காரணமாகவே செப்டெம்பர் மாதம் புதிய பிரேரணையொன்று நிறைவேற்றப்படவிருக்கிறது. செப்டெம்பரில் நடைபெறவுள்ள 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு இணை அனுசரணை நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் செப்டெம்பர் மாத அமர்வானது பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் விசேடமானதாகும். அதனாலேயே செப்டெம்பருக்கு பின்னர் இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை விஜயம் செய்யுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரியிருந்தனர்.
தற்போது இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஒரு மைல் கல்லாகவும் திருப்புமுனையாகவும் செயற்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும்.
தமது நீதிக்கான போராட்டம் எந்தவொரு கட்டத்திலும் வலுவிழக்காது என்ற நம்பிக்கையை இந்த மக்கள் மத்தியில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் அவரின் விஜயம் எவ்வாறான விளைவுகளை தரப் போகிறது என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான பயணத்தில் முக்கியமாக அமையும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் முதன்மை ரீதியாக கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM