(நா.தனுஜா)
மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெள்ளத்தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அச்சட்டம் ஒடுக்குமுறைக்கு ஏதுவாக அமையக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதனால் அதனை முற்றாக நீக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் மொஹமட் ருஷ்டி கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் தமது ஆணைக்குழுவினால் தன்னியல்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்;ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விளக்கமளித்தும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
மொஹமட் லியதீன் மொஹமட் ருஷ்டி பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் தன்னியல்பாகவும், ருஷ்டியின் தாயாரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு, தம்மால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைக் கடந்த 12 ஆம் திகதி வெளியிட்டது.
அதுகுறித்து தமது கடிதத்தின் ஊடாக நீதியமைச்சருக்குத் தெளிவுபடுத்தியிருக்கும் ஆணைக்குழு, பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப்பிரிவானது ருஷ்டியை 'மதரீதியான கடும்போக்காளர்' எனச் சித்தரிப்பதற்கு முற்பட்டதாகவும், அது அவரது அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படாதிருப்பதற்கான உரிமையை மீறும் நடவடிக்கையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு அரசியலமைப்பின் 14(1)(ஏ), 10, 13(1), 13(2), 13(5), 14(1)(எச்), 14(1)(ஜி), 12(1) மற்றும் 12(2) ஆகிய சரத்துக்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ருஷ்டியின் அடிப்படை உரிமைகள் பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் மீறப்பட்டிருப்பதாகவும் நீதியமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தௌ;ளத்தெளிவாகக் காண்பிப்பதாகவும் அக்கடிதத்தில் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி குற்றம் தொடர்பான பரந்துபட்ட வரைவிலக்கணம், விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கான சாத்தியம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சந்தேகநபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவேண்டிய அவசியமின்மை, பிணைக்கோரிக்கை நிராகரிப்பு மற்றும் பொலிஸாரிடம் வழங்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் சாட்சியாக ஏற்கப்படல் ஆகிய ஐந்து விடயங்களும் இச்சட்டத்தின் ஒடுக்குமுறை போக்குக்கு மிகமுக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாகவும், இக்காரணங்களுக்காக பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் எனவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM