நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்

22 Jun, 2025 | 01:02 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்துள்ளன.

முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுஸைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். அதன் பின்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாக இது அமைந்திருக்கின்றது.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை வரை (26) நாட்டில் தங்கியிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்தோடு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் ஏனைய முக்கிய அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அதேவேளை செவ்வாயன்று (24) மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கும் வோல்கர் டேர்க், மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளார். இச்சந்திப்புக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைநகர் கொழும்பில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள உயர்ஸ்தானிகர், அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கிழக்கில் திருகோணமலைக்கும், வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

மேலும் இவ்விஜயத்தின் முடிவில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ள வோல்கர் டேர்க், அதில் தனது இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அவதானிப்புக்களையும், வலியுறுத்தல்களையும் வெளியிடவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உருவாகியிருந்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே அவரது இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07
news-image

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய...

2026-07-21 13:32:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-21 13:03:09