bestweb

அகதி என்ற நிலையில் இருந்து வெளியேறி, கண்ணியமான வாழ்க்கைக்கு திரும்புதல்

22 Jun, 2025 | 09:35 AM
image

தி. இராமகிருஷ்ணன் 

இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற -- ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத இரு சம்பவங்கள் , 30 வருடங்களுக்கும் அதிகமான காலமாக வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளை நாடுதிருப்பி அனுப்புதலுடனும் உள்நாட்டில் ஒருங்கிணைப்பதுடனும் தொடர்புடைய பிரச்சினை மீது கவனத்தைக் குவிக்க வைத்திருக்கிறது.

முதலாவது சம்பவத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட அகதியொருவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை பத்து வருடங்களில் இருந்து ஏழு வருடங்களாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையீடு செய்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் மறுத்தது. 

தனது தணடனை முடிவடையும்போது இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் வழக்கிய குற்றவாளி தனது தண்டனை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் குடியேறும் நோக்குடன் உச்சநீதிமன்றத்தை நாடினார். அதை விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள்,  " உலகம் பூராவும் இருந்து வரும் அகதிகளுக்கு இடம்கொடுக்க இந்தியா ஒரு தர்மசத்திரம் அல்ல"  என்று எழுத்தில் அல்ல வாய்மூலமாக கூறினர்.

இந்திய நீதிமன்றங்கள் பல சந்தர்ப்பங்களில் அகதிகள் தொடர்பில் மிகவும் அனுதாபமாக நடந்தகொண்டிருந்ததால், இந்த நீதிபதிகளின்  கருத்து அகதிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏறனபடுத்தியது.

இந்தியாவில் திபெத் அகதிகள்

மற்றைய சம்பவத்தில், தமிழ்நாட்டில் பல வருடங்களை கழித்த பிறகு  தனது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பிய எழுபது வயதான ஒரு அகதி யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அதிகாரிகளினால் தடுத்துவைக்கப்பட்டார்.

இது அவருக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது.   "செல்லுபடியாகக்கூடிய ஆவணங்கள்" இல்லாமல் அவர் இலங்கையை விட்டு வெளியேறியதே தடுத்துவைக்கப்பட்டமைக்கான காரணமாகக் கூறப்பட்டது.

அவர் இலங்கை திரும்புவதற்கு சென்னையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமே அனுசரணை செய்தபோதிலும் கூட அவர் தடுத்து வைக்கப்பட்டார். 

தமிழ்நாட்டு புனர்வாழ்வு முகாமில் இலங்கை அகதிகள் குடும்பம்

 ஒரு சர்ச்சைக்கு பிறகு அவர் விடுவிக்கப்படார். சட்டபூர்வமற்ற துறைமுகம் ஒன்றின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியோரை கையாளுவதற்கான சட்டத்தின் " தன்னியல்பான பிரயோகத்தின் " விளைவாகவே அந்த தடுப்புக்காவல் என்று இலங்கையின் போக்குவரத்து அமைச்சரும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) மூத்த தலைவர்களில் ஒருவருமான பிமால் இரத்நாயக்க உடனடியாகவே பதிலளித்தார். கொள்கையை மாற்றுவவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தமிழ்ச் சமூகத்துக்கு உறுதியளித்தார்.

வேறுபட்ட சூழல்கள், வேறுபட்ட கொள்கைகள்

தமிழ்நாட்டில் புனர்வாழ்வு முகாம்களுக்கு உள்ளேயும் வௌயேயும் சுமார் 90 ஆயிரம் இலங்கை அகதிகள் வாழ்ந்துவருகிறார்கள். இந்தியாவில் நீண்டகாலமாக திபெத்திய அகதிகள் ( சுமார் 63, 170 பேர்) வாழ்ந்து வருகின்ற போதிலும்,  இவ்விரு அகதிகள் பிரிவுகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருக்கின்றன.

1983  ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு வந்த  இலங்கை அகதிகளைப் பொறுத்தவரை, அவர்களை நாடுதிருப்பியனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் 1995 மார்ச் வரை இடம்பெற்றன.  ஆனால், இரு பிரிவு அகதிகளும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளில் இந்தியாவுக்கு வருகை தந்ததால்,இலங்கை அகதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போனறு நாடு திருப்பியனுப்பும் நடவடிக்கை எதுவும் திபெத் அகதிகள் விடயத்தில் இடம்பெறவில்லை.

கர்நாடகா,  இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம் மற்றும லடாக் யூனியன் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் குடியமர்ந்த திபெத்திய அகதிகளைப் போலன்றி, பெரும்பாலும் சகல இலங்கை அகதிகளும் (ஒடிசா மாநிலத்தில் வாழும் சிலரைத் தவிர) தமிழ்நாட்டிலேயே வசித்து வருகிறார்கள்.

உண்மையில் , அகதிகள் விவகாரத்தை இந்திய மத்திய உள்துறை அமைச்சு அதன் வருடாந்த அறிக்கைகளில் கையாளுகின்ற முறையின் மூலம் இலங்கை அகதிகளுக்கும் திபெத்திய அகதிகளுக்கும் அடிப்படை வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருக்கிறது.  இலங்கை அகதிகள் விடயத்தில், இலங்கைக்கு அவர்களை திருப்பியனுப்புவதே இறுதி இலக்காக இருக்கின்ற அதேவேளை, திபெத்திய அகதிகள் விடயத்தில் அத்தகைய வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதில்லை. 

திபெத்திய அகதிகளுக்கு என்று மத்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் '  திபெத்திய புனர்வாழ்வு கொள்கை ' (Tibetian Rehabilitation Policy - TRP)   ஒன்றை வகுத்தது. அவர்களை விடவும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகமானதாக இருக்கின்ற போதிலும், அத்தகைய திட்டம் எதுவும் கிடையாது. திபெத்திய சமூகத்தினருக்கு நல்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும்  திபெத்திய புனர்வாழ்வு கொள்கை பேசுகிறது. அந்த அம்சத்தை இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாடு அரசாங்கம் பல வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

திபெத்திய அகதிகளுக்கென்று மகாத்மா காந்தி தேசிய கிராமிய தொழிலாவாய்ப்பு உத்தரவாதத்திட்டத்தின் கீழ்  அலலது தனியார் மற்றும் அரசாங்க சார்பற்ற பட்டயக்கணக்கியல் , மருத்துவம், பொறியியல் துறைகளில் ஆக்கவளமுடைய வாய்ப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக  கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பிடுகிறது. இதே போன்ற வாய்ப்புக்களை இலங்கை அகதிகளுக்கும் விஸ்தரிக்கலாம்.

தமிழ்நாட்டில் சுமார் 500 இளம் அகதிகள் பொறியியல் துறையில் பட்டங்களை பெற்றிருக்கின்ற போதிலும், அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு தனியார் கம்பனிகள் குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதால் அவர்களில் ஐந்து சதவீதமானவர்களினால் மாத்திரமே  தங்களது துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றிருக்கிறார்கள். 

இலங்கை அகதிகளை நாடுதிருப்பியனுப்புவது தொடர்பான அதன் பாரம்பரிய நிலைப்பாட்டை குழப்பிக்கொள்ளாமல், இந்திய  மத்திய அரசாங்கம் இந்த அகதிகளுக்கும் கூட திபெத்திய அகதிகள் விடயத்தில் செய்வதைப் போன்று கொள்கை ஒன்றை வகுக்கக்கூடியதாக இருக்குமானால், அது அவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

இலங்கையில் இருந்து முதல் தொகுதி அகதிகள் வரத்தொடங்கியதற்கு பிறகு நாற்பது வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையில்,  மாநிலத்தில் தொடர்ந்தும் எவ்வளவு காலத்துக்கு புனர்வாழ்வு முகாம்களை பேணுவது ( மொத்த அகதிகளில்  மூன்றில் இரண்டு பங்கினர் முகாம்களில் தான் வாழ்கிறார்கள்) என்பது குறித்து சமுதாயம் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்கள் எவ்வளவு தான் நன்னோக்கத்தை கொண்டிருந்தாலும், ஒரு அகதி என்ற அடையாளத்துடன் இருப்பதை சுயமரியாதையுடைய ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழமுடியாது.

இலங்கை உட்பட சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் கலந்தாலோசித்து அதிகாரிகள் நிலைபேறான தீர்வுகளை கொண்ட திடடம் ஒன்றை வகுக்க வேண்டும். அகதிகளை நாடுதிருப்பியனுப்புவதும் உள்நாட்டில் ( இந்தியாவில்) ஒருங்கிணைத்துக் கொளவதும் அந்த திட்டத்தின் அங்கமாக இருக்க வேண்டும். இந்த வருடத்தின் உலக அகதிகள் தினத்தின் ( ஜூன் 20) தொனிப்பொருள் " அகதிகளுடன் ஒருமைப்பாடு " (  Solidarity with refugees) என்பதாகும். அகதிகள் கௌரவமான முறையில் வாழ்க்கையை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தால் மாத்திரமே இந்த தொனிப்பொருள் அர்த்தமுடையதாக இருக்க முடியும். 

(தி இந்து) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசு கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் 

2025-07-08 18:52:04
news-image

எங்கள் கணவர்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது...

2025-07-08 15:56:00
news-image

இலங்கையில் இணைய குற்ற வலையமைப்புகளின் அச்சமூட்டும்...

2025-07-07 15:49:57
news-image

' அவைகள் தோல்களும் எலும்புகளும்"காசாவில் பால்மா...

2025-07-07 12:16:34
news-image

மக்கள் தொடர்பு அறுந்த அரசியல்வாதிகளின் விதி

2025-07-06 16:59:37
news-image

உலக முஸ்லிம்களின் கண்ணியத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள...

2025-07-06 16:58:36
news-image

தலாய் லாமா: அரசியல் சூறாவளிக்குள் ஓர்...

2025-07-06 16:35:41
news-image

சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள்

2025-07-06 16:32:35
news-image

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அர்த்தமுள்ள கொள்கைகள்...

2025-07-06 16:27:50
news-image

சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நோர்வூட் பிரதேச சபை...

2025-07-06 15:52:51
news-image

இலங்கையும், 'றோ'வின் புதிய தலைவரும்

2025-07-06 15:47:26
news-image

அடக்கி வாசிக்கும் எதிரணி அரசியல் தலைவர்கள்

2025-07-06 15:44:24