அரசின் வசம் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கைப்பற்ற திட்டமிடுகிறார் சர்வதேச தொழிலதிபரான நீரஜ்( ஜிம் ஷெர்ப்) . அரசாங்கத்தை நடத்தி வரும் அரசியல் கட்சியின் அமைச்சர்கள், தங்களுக்கு கணிசமான தொகையை கவனித்தால் இது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கிறார்கள்.
அத்துடன் இதற்கு மறைமுக கட்டணமாக ஒரு லட்சம் கோடியையும் கேட்கிறார்கள். அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கான நிபந்தனையையும் அவர்கள் விதிக்கிறார்கள்.
இதில் தாங்கள் நேரடியாக ஈடுபடாமல், வேறு ஆட்களை நியமித்து நிறைவேற்ற தொழிலதிபர் நீரஜ் திட்டமிடுகிறார். இந்தத் தருணத்தில் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்து வருமான வரித்துறை சோதனை செய்து நல்ல பெயரை சம்பாதித்த தீபக் (நாகார்ஜுனா) மீது பொய்யான வழக்குகள் புனையப்பட்டு அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இவரை குறி வைத்து தொழிலதிபர் நீரஜ், சிறையிலிருந்து விடுதலைப் பெறச் செய்து மறைமுகமாக லஞ்சத்தை பரிமாற்றம் செய்வதற்கான பணியை கொடுக்கிறார். அவர் இது போன்ற பணிகளை செய்வதற்கு அடையாளம் ஏதுமற்ற பிச்சைக்காரர்கள் தான் பொருத்தமானவர்கள் என நான்கு பிச்சைக்காரர்களை தெரிவு செய்கிறார்.
அதில் ஒருவர் தான் தேவா ( தனுஷ்). அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் அவருக்கே தெரியாமல் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. தெரிவு செய்யப்பட்ட பிச்சைக்காரர்களை காரியம் முடிந்ததும் நீரஜ் தரப்பினர் கொன்று விடுகிறார்கள். இதனால் அதிர்ச்சி அடையும் தேவா தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்.
இவருக்கு வாழ்க்கையின் சிக்கலான தருணத்தில் கடினமான முடிவை மேற்கொண்டு, அதில் தோல்வி அடைந்து தனித்து விடப்படும் சமீரா (ராஷ்மிகா மந்தானா ) மனிதாபிமான அடிப்படையில் உதவுகிறார். இதனால் அவரும் வில்லன்களின் வலையில் விழ.. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
வாழ்க்கைக்கென ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு திருப்பதியில் யாசகம் கேட்டு பிழைத்து வருகிறார் தேவா. பிச்சைக்காரர்கள் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மீதான சமூகத்தின் புறக்கணிக்கும் போக்கு தேவாவிற்கு ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த தருணத்தில் நீரஜ்- தீபக் கூட்டணியின் சட்டவிரோத பண பரிமாற்ற திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேவா - தன்னைப்போல் தெரிவு செய்யப்பட்ட ஏனைய இரண்டு சக யாசகர்களின் மரணத்திற்குப் பிறகு.. அந்த கூட்டணியின் நோக்கத்தை மெல்ல மெல்ல உணர்ந்து.. இவர்களிடமிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார்.
தேவாவாக படம் முழுவதும் வியாபித்து தனக்கான தனித்துவத்தை ஆழமாக பதிவு செய்கிறார் நடிகர் தனுஷ். இரண்டாம் பாதியில் கதை வணிக பாதையில் பயணிக்க தொடங்கியதும் அதையும் தன்னுடைய நட்சத்திர அடையாளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்குகிறார் தனுஷ்.
சமீரா எனும் கதாபாத்திரத்தில் தோன்றும் ராஷ்மிகா மந்தானாவின் கதாபாத்திரம் சற்று முரண்பாடாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும்.. அதில் தன்னை அழகாக பொருத்திக் கொண்டு அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும் வகையில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் ராஷ்மிகா.
தீபக் எனும் நேர்மையான அதிகாரி வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் தன்னுடைய பங்களிப்பையும் நினைவுபடுத்துகிறார் நாகார்ஜுனா. இவருடைய வாழ்க்கை செல்வந்தர்களால் தடம் மாறும் போதும் ..தன் குடும்பத்திற்காக சமரசம் செய்து கொண்டு வாழ்வதும், அதில் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் தவிப்பதும்.. என சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
தொழிலதிபர் நீரஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொலிவூட் நடிகர் ஜிம் ஷெர்ப் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
பான் இந்திய திரைப்படம் என்பதால் கதாபாத்திரங்கள் இந்தியா முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டு எழுதப்பட்டிருப்பது கவனத்தை கவர்ந்தாலும்... ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டமானதாகவும் , பிரமிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும்.. ரசிக்கும்படி இருந்தாலும்... முதல் பாதியின் நீளம் மிக அதிகம். இதனால் ரசிகர்களின் பொறுமை சோதிக்கப்படுகிறது.
இரண்டாம் பாதியில் குறிப்பாக உச்சகட்ட காட்சிக்கு முன்னரான திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கிறது. அதிலும் சர்வதேச தொழிலதிபர் ஒருவரை ஒருநாள் யாசகம் கேட்க வைக்கும் தேவாவின் திட்டம்.. திரையில் காணும் போது இந்தப் படத்தை முன் வரிசையில் அமர்ந்து ரசிக்கும் வெகுஜன பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
செல்வந்தர்களுக்கும் , அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் மட்டும்தான் இந்த உலகம் சொந்தமானதல்ல. யாசகம் கேட்கும் மனிதர்களுக்கும் சொந்தமானது தான் என வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைக்கதை.. ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாயாஜாலத்தை முழுமையாக நிகழ்த்தவில்லை என சொல்லலாம்.
படத்தின் இரண்டாம் பகுதியில் இடம்பெறும் ' போய் வா நண்பா..' என்ற பாடல் கேட்பதற்கும் , படமாளிகையில் பார்த்து ரசிப்பதற்கும் ஒன்ஸ்மோர் ரகம்.
ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- படத்தொகுப்பாளர் - ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கி இயக்குநருக்கு பக்கபலமாக திகழ்கின்றனர்.
குபேரா - பணம் படுத்தும் பாடு.
தயாரிப்பு : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி & அமீகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
நடிகர்கள்: தனுஷ், நாகார்ஜுனா , ராஷ்மிகா மந்தானா, ஜிம் ஷெர்ப், ஹரிஷ் பெராடி, கே. பாக்யராஜ், சுனைனா மற்றும் பலர்.
இயக்கம் : சேகர் கம்முலா
மதிப்பீடு : 3/5
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM