முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோதமான தொழில்கள் அனைத்திற்கும் முல்லை மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றம் சாட்டியுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையதின் பொருளாளர் எ.மரியராசா இக் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி மீன்பிடித்தல் ,டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்தல்,வெளிச்சம்பாய்ச்சி மீன்படித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்கள்  செய்யப்பட்டு  வருகின்றது. 

தென்னிலங்கை மீனவர்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கு முல்லை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இது தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை.

இதனால் சிறு தொழில்களை செய்யும் மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் உழவு இயந்திரத்தை பயன்படுத்துவதனால் கரையோரத்தில் உள்ள மணல் கிண்டப்பட்டு அந்த பகுதி பள்ளமாக மாறுவதுடன் கடல் அரிப்பை தடுப்பதற்கு கரையோரங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும் அடம்பன் கொடிகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன.

இதேபோல் உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதனால் 40 மனிதர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் இல்லாமல்போகின்றது. இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை. அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழில் நீரியலவளத்துறை திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக செயற்படாமல் தென்னிலங்கை மீனவர்களுக்காகவே செயற்படுகின்றது.

20 கடல்மைல்களுக்கு அப்பாலேயே அட்டை தொழில் செய்யவேண்டும் என சட்டத்தில் உள்ளது. ஆனால் முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களுக்காக 5 கடல் மைல்களுக்கு அப்பால் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் டைனமைற் பாவித்து மீன்பிடித்தல் போன்ற செய்ய கூடாது என சட்டத்தில் உள்ள நிலையில் 20 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் செய்யலாம் என அனுமதி வழங்கியிருக்கின்றார். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் காரணம் என்றார்.