பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை வியாழக்கிழமை பங்களாதேஷ் நோக்கி பயணமாகிறார்.

இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து பேசவுள்ளனர்.

இலங்கை - பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் கடந்த 1972 ஆம் ஆண்டில் ஆரம்பமாகின. இலங்கையில் பங்களாதேஷின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பிலும், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் விவசாய, கல்வி, வெளிவிவகார பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற விடயங்களிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 142 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுகிறது. அந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.