(மா.உஷாநந்தினி)
படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்
சரித்திரப் புகழ்பெற்ற காதல் நாயகி “அனார்கலி” தழுவிய கதக் நடனத்துக்கு ஒரு தற்காலிக மாற்றீடாக, புதுமையாக, அனார்கலியோடு இணைக்கப்பட்ட பாரம்பரிய சாஸ்திரிய நடனமான பரதநாட்டிய அமைப்பை “அனார்கலி நாட்டிய நாடக”த்தினூடாக கண்டு, ரசிக்கும் அனுபவத்தை “சுவர்ண நிருத்தியா” என்கிற நிகழ்வு அளித்திருந்தது.
இந்திய வரலாற்றில், முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் மன்னனான அக்பரின் மகன் சலீமுக்கும் (ஜஹாங்கீர்), அரண்மனையின் நடனக் கலைஞரான அனார்கலிக்கும் இடையே கனிந்த காதல், உலகத் தரம் வாய்ந்த படைப்புக்களின் ஊடாக பிரசித்தி பெற்றது.
அனார்கலிக்கும் மன்னரின் மகனான சலீமிற்கும் இடையே காதல் கனிந்ததும், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதனால் அனார்கலிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டதும், அவள் துன்பத்தில் துடித்ததும், இறுதியில் அனார்கலியை உயிரோடு வைத்து சுற்றிலும் சமாதி கட்டப்பட்டதும், கற்பனையில், காட்சிகளாக நம் மனக்கண்களில் இன்றும் நிற்கின்றன.
அந்தக் காட்சிகளை “அனார்கலி நாட்டிய நாடகத்தில்” உணர்வு மேலிட ரசிக்கும்படியாக அமைந்திருந்தார், பரதநாட்டியக் கலைஞர் சிவானந்தி ஹரிதர்ஷன்.
நாட்டிய நாடகத்தில், பரதம் ஆடிய அனார்கலி கதாபாத்திரம், அதன் பண்பாடு, மரபிலிருந்து விலகாமல் சபைக்கு சலாம் வைத்த அழகு ரசனையை இன்னும் அதிகப்படுத்தியது.
“நான் சிறு வயதில் ‘அனார்கலி’ தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகுந்த வேதனையடைந்தேன். கைகூடாமல் போன காதல் கதை எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதே நான் நினைத்துவிட்டேன்.. இந்தக் கதையை நாட்டிய நாடகமாக உருவாக்க வேண்டும் என்று.
‘அனார்கலி’ நாட்டிய நாடகத்தை நான் உருவாக்கியபோது எனக்கு 19 வயது. அப்போது நான் தயாரித்த இந்த நாட்டிய நாடகத்தில் அனார்கலியாக நானே நடனமாடினேன். இரண்டு முறை இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. இரண்டிலும் நானே அனார்கலி.
அந்த நாடகத்தையே எமது நடனப்பள்ளியின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் மேடையேற்றியதும், அன்று நான் ஏற்று ஆடிய அனார்கலி கதாபாத்திரத்தை இன்று, எனது மகள் எடுத்து ஆடுவதை நினைக்க சந்தோஷமாக இருக்கிறது” என்று நாட்டிய நாடகத்தை அமைத்த சிவானந்தி ஹரிதர்ஷன் தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் அனார்கலியாக ஆடிய ஆரம்ப நாட்களில், அனார்கலிக்கு உயிருடன் சமாதி கட்டப்பட்டதோடு, அவள் பிரிந்த துன்பம் தாங்காமல் அடுத்த நொடியே சலீமும் இறந்துவிடுவதாக நாட்டிய நாடகத்தின் கடைசிக் காட்சியை அமைத்திருந்தேன். ஏனென்றால், அந்த காலகட்டத்தில் அனார்கலி இறந்ததோடு சலீமும் இறந்துவிட்டதாக கதைகள் சொல்லப்பட்டு, அவை பலராலும் நம்பப்பட்டன.
பின்னர், நாட்கள் செல்லச் செல்ல அனார்கலி கதையில், மாறுபட்ட சம்பவங்கள் பலவாறு சொல்லப்பட்டன. அனார்கலியின் மறைவுக்குப் பிறகு, சலீம் சில காலம் வாழ்ந்ததாக வரலாறு சொல்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சரித்திரக் கதைகளை நாட்டிய நாடகங்களாக அமைக்கும்போது, வரலாற்று உண்மைகளில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமான ஒன்று.
ஆகவே, பின்வந்த நாட்களில், அனார்கலி நாட்டிய நாடகத்தில், அனார்கலி மறைவுக்குப் பின்னர், சலீம் இறப்பது போன்ற காட்சியை நீக்கிவிட்டேன். இம்முறை மேடையேற்றப்பட்ட நாடகத்தின் இறுதிக் காட்சியில் அனார்கலியின் கல்லறைக்கு முன்னால் சலீம் மண்டியிட்டு அழுவதையே நீங்கள் பார்த்திருப்பீர்கள்...” என்று அவர், நாட்டிய நாடகத்துக்குப் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படையாகச் சொன்னார்.
நிர்த்தனா நடனப்பள்ளிக்கும் அதன் இயக்குநரான சிவானந்தி ஹரிதர்ஷனின் குருசேவைக்குமான 50 ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையில் “சுவர்ண நிருத்தியா” பொன்விழா, கடந்த ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
வீரகேசரியின் ஊடக அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவானந்தி ஹரிதர்ஷனின் முதல் நாட்டிய குருவும் பிரபல பரதநாட்டியக் கலைஞருமான பாலசுந்தரி பிராத்தலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்துடன் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், பரதநாட்டியக் கலைஞர் வாசுகி ஜெகதீஸ்வரன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் போன்ற முக்கியஸ்தர்கள் பலரின் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தேறியது.
புஷ்பாஞ்சலி, கணபதி நடனம், குடை நடனம், காவடி நடனம், ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், தில்லானா போன்ற நடனங்களுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவானந்தி ஹரிதர்ஷன் நட்டுவாங்கம் இசைக்க, அகிலன் சிவானந்தன், அருண் ஹரிதர்ஷன் (சிவானந்தி ஹரிதர்ஷனின் மகன்) ஆகிய இருவரும் பாட, ரட்ணம் ரட்ணதுரை (தபேலா), அபிணவ் ரட்ணதுரை (மிருதங்கம்), சுந்தரமூர்த்தி கோபிதாஸ் (வயலின்), பிரியந்த தசநாயக்க (புல்லாங்குழல்), விநாயகமூர்த்தி செந்தூரன் (கீபோர்ட்) ஆகியோர் பின்னணி இசைப் பங்களிப்பு வழங்கினர்.
கிருஷ்ணனின் பால்ய லீலைகள், சூதாட்ட களம், சகுனியின் நுட்பமான காய்நகர்த்தல், பாண்டவர்களின் தோல்வி, திரௌபதியின் துகிலுரிப்பு, கிருஷ்ணனின் அருள், போர்க்களத்தில் கையறு நிலையில் நிற்கும் கர்ணன் அர்ஜுனனின் அம்பு பட்டு மடிந்தது, கிருஷ்ணன் தோன்றிய காட்சிகள்.... என ஒவ்வொன்றும் “கானம் இசைத்து...” வர்ணத்தில் காட்டப்பட்டது.
மறைந்த இந்திய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானா ஆரம்பிக்கவிருந்த தருணத்தில், “தில்லானாவா? வேகமா, பார்க்க அழகா இருக்குமடா..” என்று பார்வையாளர் ஒருவர் ஆர்வமிகுதியில் சொல்லக் கேட்டபோது, கலை பொதுமக்களை எவ்விதம் சென்றடைந்திருக்கிறது என்பது புரிந்தது.
அத்துடன், அண்மையில் மறைந்த, இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞரான அருந்ததி ஸ்ரீரங்கநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு அமைக்கப்பட்ட குடை நடனமும் கீர்த்தனமும், அவருக்கான சமர்ப்பணமாக மேடையேற்றப்பட்டன.
“ஒயிலாக பவனி வந்தாள்...” நடனத்தின்போது, நடன நெறியாள்கையாளரான சிவானந்தி ஹரிதர்ஷன், தனது சிரேஷ்ட மாணவிகளோடு இணைந்து மேடையில் ஆடியது முத்தாய்ப்பான நிகழ்வு. சலங்கை கட்டிய சில ஜோடிக் கால்களின் ஒலிகளுக்கு மத்தியில் “சத்தமின்றி”, ஆனால், சர்வ தாளத்தோடு சிவானந்தி ஆடினார். வயதேறிவிட்டாலும், அவரது நளினத்தையும் அங்க சுத்தத்தையும் துள்ளியாடும் வேகத்தையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர், வியந்தனர்!
“உட்கார்ந்தபடி வாயால் பாடியும் சொல்லியும் கைகளால் சைகை காட்டியும் மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லிக்கொடுப்பதை விட, நாமே ஆடிக் காண்பித்து, நாட்டியம் கற்றுக்கொடுப்பதே சிறந்த கற்பித்தல் முறை” என்று சிவானந்தி கூறுவதுண்டு. தவிர, “மாணவர்களோடு சேர்ந்து நானும் ஆடுவதால்தான், இந்த வயதிலும் என் உடல் நாட்டியத்துக்கு வளைந்துகொடுக்கிறது” என்கிறார்.
“சுவர்ண நிருத்தியா” பொன்விழாவின் இறுதிப் படைப்பாக, அனார்கலி நாட்டிய நாடகம் நிகழ்த்தப்பட்டது.
இதன் பிரதான கதாபாத்திரமான அனார்கலியாக, சிவானந்தியின் மகளும் பரதநாட்டியக் கலைஞருமான நிர்த்தனா ஹரிதர்ஷன் வேடமேற்று ஆடினார். அனார்கலியின் இணையான “சலீம்” கதாபாத்திரத்துக்கு தகுந்தாற்போல் ஆண்வேடமணிந்து, சிவானந்தியின் மாணவி நிரஞ்சனி இளங்கோவன் ஆடியிருந்தார்.
கதக் நடனத்தை தழுவிய அனார்கலியும் குழுவினரும், பாத்திரப் படைப்புக்கே உரிய அசல் ஆடை, அலங்கார ஒப்பனையில், பரதநாட்டியம் ஆடிய காட்சிகள் புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தன.
மன்னர் அரசவையில், போதை மயக்கத்தில் அனார்கலி பாடி ஆடும் காட்சியில், அனார்கலிக்கு சிவானந்தி பின்னணிக் குரல் கொடுத்த விதமும் வார்த்தை உலறலும் பாணியும் சபையை பெரிதும் ஈர்த்தன. அனார்கலியை உயிரோடு வைத்து கல்லறை கட்டப்பட்ட காட்சியும் கல்லறைக்கு முன்னால் சலீம் அழுது துவண்ட காட்சியும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டன.
சரித்திரங்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டுவரும் ஒரு காலகட்டத்தில், வேறு நாடு, வேறு சமூகம், வேறு பண்பாடு என்ற பாகுபாடின்றி சகல வரலாறுகளையும் உள்வாங்கி, சகல இன, மத, சமூகத்தினரோடும் அவர்தம் பண்பாடுகளோடும் கைகோர்த்துப் பயணிக்கின்ற பெருமை கலைகளுக்கு மட்டுமே உண்டு. அதன் உண்மைத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ‘அனார்கலி நாட்டிய நாடகம்’ என்றால், அதை மறுக்க இடமில்லை.
இதையும் பார்க்க...
நிர்த்தனா நடனப்பள்ளியின் “சுவர்ண நிருத்தியா” பொன்விழா நிகழ்வு
https://www.virakesari.lk/article/217989
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM