வீ. பிரியதர்சன்
உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக.
ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ்சோமதேவ கூறுகிறார்.
1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது.
பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர்.
இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்.
கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM