bestweb

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று நாங்களும்  அதிக டெஸ்ட்களில் விளையாட தகுதி உடையவர்களே! - ஏஞ்சலோ மெத்யூஸ்

Published By: Vishnu

17 Jun, 2025 | 01:25 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு போன்று இலங்கைக்கும் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறைகூவல் விடுக்கப்படவேண்டும் என ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச அரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாவதற்கு முன்னதாக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசமாக இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எமக்கு மிகக் குறைவான டெஸ்ட்கள் கிடைப்பது கவலைக்குரியதாகும். நேர்மையாகக் கூறுவதென்றால் 2008க்குப் பின்னர் நான் முதல் தடவையாக ஒரு வருடத்தில் நான்கு டெஸ்ட்களில் விளையாடுகிறேன். இது கவலை தருகிறது. இளம் கிரிக்கெட் தலைமுறையினர் இன்னும் அதிகமான டெஸ்ட்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில் கிரிக்கெட் வடிவங்களில் டெஸ்ட் கிரிக்கெட்தான் உயரியதாகும். எனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவேண்டும்.

'இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருடத்தில் 15க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அப்படியானால் எங்களால் ஏன் முடியாது. எங்களாலும் விளையாட முடியும். அதற்காக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்தால் அது சாத்தியமாகும். நாங்கள் உலகக் கிண்ணங்களை வென்றுள்ளோம். ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். எனவே அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே நாங்களும் அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி உடையவர்களே' என பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

16 வருடங்கள் இலங்கைக்காக மூவகை கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதித்த நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதற்கான காரணம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

'கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஒரு சுழற்சியாகும். நாங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறோம். கடந்த கால வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். நாங்கள் எல்லோரும் இளம் வீரர்களாக அணியில இணைந்து சிரேஷ்ட வீரர்களாக வெளியேறுகிறோம். என்னைப்பொறுத்த மட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வுபெறுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

 'கடந்த ஏழு, எட்டு போட்டிகளில் எனது திறமை நான் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. எனவே அணிக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. நான் எமது அணியின் எதிர்கால அட்டவணையைப் பார்த்தபோது நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இல்லை. (பங்களாதேஷுடனான தொடருக்குப் பின்னர் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னரே அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது) இது துரதிர்ஷ்டவசமாகும். எனவே இதுதான் இளையவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க சரியான தருணம் என எண்ணினேன். ஏனேனில் பல திறமையான இளம் வீரர்கள் சாதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார்.

தொடர்ந்து பதிலளித்த அவர்,

'சனத் பயிற்றுநராக பொறுப்பேற்ற பின்னர், தரங்கவும் அவரது அணியினரும் தேர்வாளர்களாக வந்த பின்னர் தொடர்பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் எங்களோடு அடிக்கடி உரையாடுகிறார்கள்.. சிரேஷ்ட வீரர்களோ அல்லது கனிஷ்ட வீரர்களோ அவர்கள் சரியானவற்றை கலந்துரையாடுகிறார்கள்.. அதுதான் முக்கியமானது. அணியில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு தொடர்பாடல்கள் பிரதானமானது. அதன் பின்னரே ஆற்றல் வெளிவரும். அதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டோம். எங்களுக்கு டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாட கிட்டத்தட்ட வாய்ப்பிருந்தது. அத்துடன் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆகவே தொடர்பாடல் மிகத் தெளிவாக இருந்ததுடன் சூழ்நிலையும் சிறப்பாக இருந்தது. அதனால் தான் ஆற்றல்களும் மேலும் மேலும் சிறப்பாக இருந்தது. அவர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றுகின்றனர். அத்துடன் திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களது தரமும் உயர்கிறது. எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார்.

டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாட எண்ணியுள்ளதாக ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

'ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றது. அப் போட்டி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இலங்கை சம்பியனாகவேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன். ஆனால், அதற்கு எனது உடற்தகுதி அனுமதிக்கவேண்டும். அதற்காக நான் கடுமையாக உழைக்கவுள்ளேன். கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு எனது திறமையை அதிகரித்துக்கொள்ளும் அதேவேளை உடற்தகுதியையும் பேணவுள்ளேன். அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்' என பதிலளித்தார்.

இலங்கை அணி வீரராக நினைவிலிருந்து நீங்காத தருணங்கள் பற்றி கேட்டபோது,

'எனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுப் பார்க்கும்போது ஒவ்வொரு விரரரையும் போன்று எனக்கும் நினைவிலிருந்து நீங்காத எத்தனையோ தருணங்கள் இருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்னில் 2010இல் நாங்கள் ஈட்டிய வெற்றி - (ஒருநாள் போட்டியில் மெத்யூஸ் - மாலிங்க 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 132 ஓட்டங்களின் உதவியுடன் ஈட்டிய ஒரு விக்கெட் வெற்றி), இங்கிலாந்துக்கு எதிராக முதல் தடவையாக அந் நாட்டில் நாங்கள் ஈட்டிய (ஏஞ்சலோ மெத்யூஸின் தலைமையில்) முதலாவது டெஸ்ட் வெற்றி, 2016இல் அவஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு ஈட்டிய 3 - 0 தொடர் வெற்றி ஆகிய அனைத்தும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றிகளாகும். அத்துடன் உலகக் கிண்ணத்தை மறக்க முடியாது. 2014 ரி20 உலகக் கிண்ணம், 2014 ஆசிய கிண்ணம் ஆகிய வெற்றிகளையும் ஈட்டினோம். வெற்றியீட்டிய இந்த அணிகளில் எல்லாம் நான் பங்காற்றியதையிட்டு மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்' என்றார்.

மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் போன்ற கசப்பான நிகழ்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிரான 2021 உலகக் கிண்ணப் போட்டியில் டைம் அவுட் ஆன விதம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

'அது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால், அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள். அவர்களுக்கு எதிராக எனது மனதில் எதுவும் இல்லை. அவர்கள் எங்களுடன் நலமாகவே இருக்கின்றனர். வெளிப்படையாக கூறுவதென்றால் நாங்கள் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால், அவர்களுக்கு எதிராக எனது மனதில் இதுவும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. வெறுப்பு என்பது கிரிக்கெட்டில் மோசமான வார்த்தை. நாங்கள் அனைவரும் கடினமாகவும் நேர்மையாகவும் விளையாடுகிறோம். அவர்கள் அனைவரும் எனது நல்ல நண்பர்கள்' என ஒரு சிறந்த வீரருக்கே உரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பதிலளித்தார் மெத்யூஸ்.

இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அணித் தலைவர் பதவியை நீங்கள் துறந்ததற்கான காரணம் என்ன?

'ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் சந்தித்த தோல்வியை இலங்கை அணியினாலும் முழு இலங்கையினாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதன அடுத்து நான் அணித் தலைவர் பதவியலிருந்து விலகிக்கொண்டேன். நாங்கள் வீழ்ச்சி அடைந்த நேரத்திலேயே அணித் தலைவர் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. அந்தத் தோல்வியினால் நான் பெரும் சோகம் அடைந்தேன். அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வெண்டும் என நான் எண்ணினேன். அதனால் தான் அணித் தலைவர் பதியிலிருந்து விலக நேரிட்டது. ஒரு வருடம் கழித்து தலைமைப் பதவியைப் பொறுப்பெற்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.

'2008இலிருந்து இன்றுவரை நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன், எதிர்கொண்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவற்றை நான் சமாளித்துக்கொண்டேன். ஆடுகளத்தின் உள்ளேயும் வெளியேயும் சவால்கள் வந்தன. உபாதைகளுக்குள்ளானேன். அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வந்தேன். நான் எப்போதும் சரியானதை செய்ய முயற்சித்தேன் என கருதுகிறேன். வீரர்கள் என்ற வகையில் தலைவர் என்ற வகையில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் சில வேளைகளில் தவறாகி விடுவதுண்டு. விளையாட்டில் இவ்வாறு இடம்பெறுவது சகஜம். ஆனால், பின்னோக்கிப் பார்க்கும் போது நான் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சரியான தீர்மானங்களையே எடுத்தேன் என்பதையிட்டு சந்தோஷமடைகிறேன். அத்துடன் அணிக்கான எனது நூற்றுக்கு 100 வீத பங்களிப்பை வழங்கினேன் என நம்புகிறேன்' என பதிலளித்தார் மெத்யூஸ்.

புனித சூயைப்பர் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவராக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ் 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடி இருந்தார்.

பாடசாலையை விட்டு விலகிய பின்னர் கலம்போ கோல்ட்ஸ் கழகத்தில் இணைந்த ஏஞ்சலோ மெத்யூஸ் கிட்டத்தட்ட 20 வருடங்கள் அக் கழகத்திற்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தனது கிரிக்கெட் வளர்ச்சியில் இக் கழகமும் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர், '2007ஆம் ஆண்டு மாகாண கிரிக்கெட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதால் 2008இல் இலங்கை ஏ அணிக்கு நான் தெரிவுசெய்யப்பட்டேன். தென் ஆபிரிக்காவுக்கான அந்த கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு சதங்களை அடித்தேன். அதன் பின்னர் இலங்கை அணியில் நான் இணைக்கப்பட்டேன். அப்போது தொலைக்காட்சி திரைகளில் பார்த்து இரசித்த சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், முரளிதரன், மஹேல, சங்கக்கார ஆகிய உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உடைமாற்று அறையில் (dressing room) பார்த்தபோது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

'ஆனால், அந்த சூழ்நிலையை எனது சொந்த வீடு போல் ஆக்கி எனது மன அழுத்தத்தை குறைத்ததுடன் உணர்ச்சிகளையும் இலகுவாக்கிய டி.எம். டில்ஷான், திலான் சமரவீர உட்பட அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனது கன்னி முயற்சியில் நான் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தேன். ஆனால் அவர்கள் எனது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினர். அத்துடன் தன்னம்பிக்கையும் ஊட்டினர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதன் பின்னர் நான் பின்னோக்கி நகரவில்லை. மேடு பள்ளங்களை சந்தித்தேன். தொல்லைகளும் கஷ்டங்களும் வந்தன. அவை அனைத்தையும் கடந்து வந்ததைப் பார்க்கும்போது இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் அவர்.

ஊடக சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியவர்களை நினைவுகூர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ், தன்னை வளர்த்து ஆளாக்கி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கிய தனது பெற்றோரே தனது ஹீரோக்கள் என கூறினார்.

'நான் எத்தனையோ பேருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையை எனக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பல தடவைகள் உபாதைக்குள்ளானேன். ஆனால், இறைவனின் ஆசியால் என்னால் 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்ய முடிந்தது.

இது எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க விசேட பயணமாகும். இன்றுவரை நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் தங்களை எனக்காக அர்ப்பணித்த எனது பெற்றோர், எனது உடன்பிறப்புகள், எனது மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு நான் நன்றிகூறவேண்டும். நான் அழுத்தங்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவற்றிலிருந்து மீண்டு வர எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அது இலகுவானதல்ல. அவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். என்னை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கிய எனது பெற்றோரிடம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் தான் எனது ஹீரோக்கள்.

'எனது நெருங்கிய நண்பர்கள், பிரச்சினைகள், சிரமங்களின்போது எனக்காக என்னோடு இருந்தவர்கள், எனது முன்னாள், சமகால பயிற்றுநர்கள், எனக்கு கல்வி தந்து என்னை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கச் செய்த புனித சூசையப்பர் கல்லூரி, கல்லூரியின் முன்னாள், சமகால முதல்வர்கள் (அதிபர்கள்), முன்னாள் மற்றும் சமகால ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் சமகால பயிற்றுநர்கள் உட்பட எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்னேன். அத்துடன் எனது கழகம் கலம்போ கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் நன்றி கூறவேண்டும்' என மெத்யூஸ் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான, 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த காலி சர்வதேச மைதானத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55