ஏ.எல். நிப்றாஸ்
உலகில் பல நூற்றாண்டுகளாக வாழும் கரப்பான்பூச்சி போன்ற ஒருசில உயிரினங்கள் மட்டும் குறிப்பிடத்தக்க அளவுக்கு 'கூர்ப்படையாமல்' உள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பொதுவாக தேசிய அரசியலும், குறிப்பாக முஸ்லிம்களுக்கான அரசியலும் அவ்விதம் கூர்ப்படையாமல் அல்லது பரிணாம வளர்ச்சியின்றி காலத்தைக் கடத்த முடியாது.
அதேபோல், குறிப்பிட்ட நாளைப் பற்றி மட்டுமே சிந்தித்து அன்றைய தினத்துக்காக மட்டுமே திட்டமிடும் ஒருவரைப் போல ஒருவித 'அன்றாடங்காய்ச்சி' அரசியலை முஸ்லிம் கட்சிகள் இனியும் செய்து கொண்டிருக்கக் கூடாது. நீண்டகால திட்டமில்லாத ஒரு மக்கள் கூட்டமாக நாம் வாழவும் இயலாது.
மாறாக, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்காகவும் இலக்குகளை அடைவதற்காகவும் நீண்டகால திட்டங்களை வகுத்து, ஒரு தூரநோக்கான வழித்தடத்தில் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது.
நாமும் கட்சி தொடங்கினோம், தலைவரானோம் அல்லது யாரோ உருவாக்கிய கட்சியில் நாம் தலைவரானோம். எம்.பி.யானோம், அமைச்சரானோம், டீல்களை பேசினோம், உழைத்தோம், குடும்பத்தினரை வளர்த்தோம், கட்சியில் பலரை எம்.பி.யாக, மாகாண சபை உறுப்பினராக, உள்ளுராட்சி மன்ற பிரதிநிதியாக ஆக்கினோம் என்று வெறுமனே அரசியல் இலாபநட்டங்களை கணக்குக் காட்டிக் கொண்டிருப்பதை கைவிடுவது அவசியம்.
சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் பெருந்தேசிய கட்சிகளில் உயர் பதவிகளில் இருந்தனர். கால் நூற்றாண்டாக கட்சித் தலைவராக, எம்.பி.யாக இருக்கின்ற தற்காலத்து முஸ்லிம் அரசியல்வாதிகளைவிட, பெருந்தேசிய ஆட்சியாளர்களுடன் இருந்து கொண்டே முஸ்லிம் சமூகத்திற்கான பல தூரநோக்கான திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்திய மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகளை நாமறிவோம்.
ஏன், அன்றைய காலகட்டத்தில் துருக்கித் தொப்பிக்காக போராடிய தலைவர்களும் இருந்தார்கள். அப்படியிருந்தும் ஏன் முஸ்லிம்களுக்கு ஒரு தனித்துவ அடையாள அரசியலும், தனிக் கட்சிகளும் தேவைப்பட்டன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஏனென்றால், தெற்கில் பெருந்தேசியவாதம் மற்றும் இனவாதமும், வடக்கு கிழக்கில் தமிழ் ஆயுதக் குழுக்களை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசிய எழுச்சியும் ஏற்பட்ட பிறகு, முஸ்லிம்களும் தமது தனித்துவத்திற்காக போராடுவதற்கு ஒரு தனித்துவ அரசியல் வாழிமுறை தேவைப்பட்டது.
ஒரு சமூகமாக வடக்கு, கிழக்கிற்கிலும் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பல தனித்துவமான அபிலாஷைகள், நீண்டகால பிரச்சினைகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. பெருந்தேசியக் கட்சிகளோடு அல்லது தமிழர் அரசியலோடு இணைந்து கொண்டு அந்த இலக்குகளை அடைய முடியாது என்ற ஒரு நிலை வந்தபோதுதான் முஸ்லிம்கள் தனியாக கட்சி தொடங்கினர்.
ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் லீக், மலாய் காங்கிரஸ், இஸ்லாமிய ஐக்கிய முன்னணி, உள்ளிட்ட சிறு முஸ்லிம் கட்சிகள், 'எம்.பி.க்களை தயாரித்தல்' என்ற அற்ப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை என்று கருத முடியாது.
முஸ்லிம் கட்சிகளின் வரலாற்றில் எம்.ஐ.எம். மொஹிதீன், எம்.எச் சேகு இஸ்ஸதீன் ஆகியோரினால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணி மிக முக்கியமானது. வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தனித்துவ அடையாள அரசியலையும், கருத்தியலையும் விதைத்ததில் இக்கட்சிக்கு மிக முக்கிய பங்குண்டு.
எவ்வாறாயினும், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை மக்கள்மயப்படுத்தின் மூலம் அரசியல் அடைவுகளைப் பெற்றது 1980களில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்பதை மறுக்க முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம் அதன் தலைவராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரபின் தெளிவான தூரநோக்குப் பார்வையும் நெஞ்சுறுதியும், மக்களை முன்னிலைப் படுத்தும் அரசியலும் என்று சொல்லலாம்.
அவர் ஆட்சியாளர்களுடன் உறவு கொண்டாடினார். ஆனால், சமூகத்திற்காக அதே ஆட்சியாளர்களை எதிர்த்தாhர். ஒரு காலத்தில் தமிழ்த் தேசியத்தோடு நெருக்கமாக இருந்த அஷ்ரப், முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கப்பட்ட போதும், முஸ்லிம் தேசியத்திற்காகவும் அதிகார அலகுக்காகவும் குரல்கொடுத்தார்.
விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி., ஈ.என்.டி.எல்.எவ்., ஈரோஸ் எனப் பல தமிழ் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம்கள் நெருக்குவாரங்களைச் சந்தித்த போது, அஷ்ரப் ஓடி ஒழிந்தவர் அல்லர். சமூக உரிமைகளுக்காக நேரிடையாகவே அவற்றை எதிர்த்தார். சமகாலத்தில் தூரநோக்கான பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார்.
மர்ஹூம் அஷ்ரப் மு.கா.வின் தலைவராக இருந்தது சுமார் 15 வருடங்களே ஆகும். 11 வருடங்கள்தான் அவர் எம்.பி.யாக இருந்தார். ஆறு வருடங்கள்தான் அமைச்சராக இருந்தார். பெருந்தேசிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது மட்டுமன்றி, விடுதலைப் புலிகளுக்கு பெரும் தலையிடியாகவும் மாறிவிட்டிருந்தார்.
அஷ்ரப்பின் மரணத்தை தொடர்ந்து அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த ரவூப் ஹக்கீம் அல்லது அதற்குப் பிறகு 'காங்கிரஸ்களை' உருவாக்கிய அதாவுல்லா, ரிஷாட் ஆகியோர் அல்லது ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகளின் 'உரிமையாளர்கள்' இந்த தூரநோக்கான அரசியலில் எந்த இடத்தில் இருக்கின்றார்கள் என்று மறுவாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது.
ஸ்தாபகத் தலைவரின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் சரியாக பயணிக்கத் தவறியமையே தேசிய காங்கிரஸூம், மக்கள் காங்கிரஸும் மக்களுக்குள் வியாபிக்க காரணமாக அமைந்தது. அத்துடன், முஸ்லிம் கட்சிகள் சமூக அரசியலில் விட்ட தவறுகளே இப்போது என்.பி.பி. போன்ற பெரும்பான்மைக் கட்சிகள் மக்களுக்குள் ஊடுருவ வழியேற்படுத்திக் கொடுத்துள்ளன.
எனவே, இந்தப் போக்கை மாற்றியமைக்க வேண்டும். முஸ்லிம் அரசியல் என்பது கட்சித் தலைவர்கள், அவர்களது குடும்பம், அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தினருக்கான அரசியலாக அல்லாமல் சமூகத்திற்கான அரசியலாக தன்னை உருமாற்றிக் கொள்வது அவசியம். எம்.பி.களை உருவாக்குகின்ற தொழிற்சாலையாக அல்லாமல் சமூகத்தின் நீண்டகால இலக்குகளை அடைவதற்கான கருவியாக தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்;டும்.
வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் என்ன? அவற்றை அடைவதற்கான வழியென்ன? குறுங்காலப் பிரச்சினைகள் என்ன? அதேபோல் வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன, அவற்றை எப்படி அணுக வேண்டும் என்ற தரவுகள் மட்டுமன்றி அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை பெருந்தேசியக் கட்சிகளின் எம்.பிக்;களால் தீர்ப்பது சாத்தியமில்லை. ஆயுதக் குழுக்களால் ஏற்பட்ட மனித உரிமை மீறலுக்கான நீதியை, அபிலாஷைகளை என்.பி.பி. போன்ற கட்சிகளில் உள்ள, தனித்துவ அடையாள அரசியல் பற்றிய எந்த பிரக்ஞையுமற்ற முஸ்லிம் எம்.பி.க்கள் வென்றெடுக்கவும் மாட்டார்கள்.
தென்னிலங்கை முஸ்லிம்களின் ஓரிரு விடயங்களை பெருந்தேசியக் கட்சிகளில் அங்கம் ஒருசில முஸ்லிம் எம்.பிக்கள் செய்வார்கள் என்று கருதலாம் எனினும், வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ அபிலாஷைகளுக்காக முஸ்லிம் கட்சிகளே முன்னிற்க கடமைப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன, அபிலாஷைகள் என்ன, அதனை எவ்விதம் தீர்க்க வேண்டும் என்ற ஆகக் குறைந்தது 20 வருடங்களுக்கான திட்டம்; ஒன்று இருக்க வேண்டும். எந்தப் பிரச்சினையை எந்த நுட்பத்தின் ஊடாக தீர்க்கலாம், அதற்காக முஸ்லிம் அரசியலின் கூட்டுப்பலத்தை எப்போது பிரயோகிக்கலாம் என்ற முன்னறிவு இருக்க வேண்டும்.
இதுதான் கட்சியின் இலக்கு, இதனை அடைவதற்காக எல்லோரும் வேலை செய்ய வேண்டும் என்பதை முதலில் தலைவர்கள்; உணர்ந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை தளபதிகள், எம்.பி.க்கள் அதிகாரத்தில் உள்ள நபர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முக்கியமாக தலைவர்களைச் சுற்றியுள்ள எடுபிடிகளுக்கு கொஞ்சம் சமூக உணர்வை கரைத்துப் பருக்க வேண்டும்.
அடுத்த விடயம், முஸ்லிம் சமூக அரசியலில் 'தலைமைத்துவச் சங்கிலி' ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இப்போதிருக்கின்ற தலைவர் யார், அடுத்த தலைவர் யார் என்பது சமூகத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இப்போதுள்ள தலைவர்கள் இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்க வேண்டும்.
மறுபுறத்தில், நீண்டகால அடிப்படையிலான திட்டமிட்ட அரசியலை முன்கொண்டு செல்லும் விடயத்தில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக விழிப்புடன் செயற்படுவது மிக அவசியமாகும். அஷ்ரப் கனவு கண்டதுபோல தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இவ்விடயத்தில் முக்கிய வகிபாகமொன்றை எடுக்க வேண்டும்.
ஓய்வுநிலை அரசியல்வாதிகள், உலமா சபை, பள்ளிவாசல்கள், உணர்வுள்ள மக்கள் ஒரு அழுத்தக் குழுவாக, இவ்விடயத்தில் செயற்பட வேண்டும். இப்போதுள்ள தலைவர்கள் சமூகத்திற்கு தேவையானதைச் செய்யவில்லை என்றால் புதிய தலைவர்களை இனம் காண்பதுதான் நமது தெரிவாக இருக்க முடியும்.
முஸ்லிம் சமூகம் இப்படியான நீண்டகால திட்டமிடலை இப்போதே செய்யாவிட்டால், இன்னும் 25 வருடங்கள் போனாலும் நாம் இந்த இடத்தில்தான் நிற்போம் என்பதை பொறுப்புடன் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM