(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பயன்படுத்தி முறையற்ற வகையில் கைதியொருவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளதை போன்று ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே உதய கம்மன்பில மேற்கணடவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்படாத கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரியொருவரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யார் தவறு செய்துள்ளார்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செயற்பாடு தொடர்பில் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமன்னிப்புக்கு உட்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியலை அனுப்புமாறு ஜனாதிபதி செயலாளரினால் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தை அமைச்சின் செயலாளர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார். அதன்பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் அந்த கடிதத்தை சகல சிறைச்சாலைகளுக்கும் அனுப்பியுள்ளார். அதன்படி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பட்டியல் மீண்டும் ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக சகல சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அப்படியாயின் சிறைக்கைதியொருவரின் பெயரை அந்த பட்டியலுக்குள் இரகசியமாக உள்ளடக்குவதென்றால் நான்கு பேர் அதில் சம்பந்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலை பணிப்பாளர் ஆகியோராகும். இதில் சிறைச்சாலைகள் பணிப்பாளர் குறிப்பிட்ட பெயரை உள்ளடக்கியிருந்தால் அவரை கைது செய்யலாம். ஆனால் சிறைச்சாலைகள் ஆணையாளரும் இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சிறைச்சாலைகள் ஆணையாளரே பெயரை உள்ளடக்கினார் என்றால் அவர் உள்ளே இருக்க, சிறைச்சாலை பணிப்பாளர் வெளியில் இருக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் சிறையில் இருக்க முடியாது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் இதில் தொடர்புபட்டிருந்தால் அவருக்கும் மேலுள்ள ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் பொறுப்பு கூற வேண்டும். இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளரை கைது செய்வதென்றால் அதேபோன்று ஜனாதிபதி செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும்.
வெசாக் பௌர்ணமி தினத்தில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் முறை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் என்னை சந்தித்து தெளிவுபடுத்தினர்.
துஷார உபுல்தெனிய அரசியல்வாதிகளுக்காக சோரம் போகாத நேர்மையான அதிகாரியாவார். அவரை நீக்கி தமது ஒருவரை நியமிப்பதற்கான வழியையே அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவரை கட்டாய விடுமுறையில் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் முறையான அடிப்படை விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்காது அவரை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற தீர்மானமாகும். இதனால் அவர் நீதிமன்றத்தில் அதனை சவாலுக்கு உட்படுத்தினால் அரசாங்கம் நெருக்கடிக்கு ஆளாகும்.
ஜனாதிபதிக்கும் தெரியாது திருட்டுத்தனமாக பொதுமன்னிப்பை எவராவது வழங்குவதாக இருந்தால், அதனூடாக அரச பொறிமுறை ஜனாதிபதியிடம் இருந்து மீறிப்போயுள்ளது என்றே அர்த்தப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM