bestweb

வெலிகம துப்பாக்கிச்சூடு : உண்மைக்குப் புறம்பாக சோடிக்கப்பட்ட சம்பவத்தை வழங்கியதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சாட்சியம்

12 Jun, 2025 | 09:08 AM
image

(இராஜதுரை ஹஷான்)

2023 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி மாத்தறை, வெலிகம பகுதிக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிலிருந்து சென்ற அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டதாகவும், தாம் இந்த சுற்றிவளைப்பினை மேற்கொள்வதாக தென்மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கும், வெலிகம பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கவில்லை என்பது உத்தியோகபூர்வமாக குழு முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டது.

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பாக சோடிக்கப்பட்ட ஒரு சம்பவத்தையே தாங்கள் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கும், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்துக்கும் சத்தியப்பிரமாணம் ஊடாக அறிவித்ததாக கொழும்பிலிருந்து சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

இதனைத்தொடர்ந்து குழுவில் சாட்சியமளித்த மாத்தறை - அம்பாந்தோட்டை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரான நிஷாந்த டி சில்வா, 'இந்த சுற்றிவளைப்பு தொடர்பில் எம்மிடம் முழுமையான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் சுற்றிவளைப்புக்கான உரிய நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ளவில்லை.

ஆகவே சுற்றிவளைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம் இதில் உண்டு என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. எனவே இதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நெவில் டி சில்வா, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் பொறுப்புக்கூறவேண்டும்' என்று விடயங்களை முன்வைத்தார்.

தேசபந்து தென்னக்கோனை பணிநீக்கம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு நேற்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூடியது.

இதன்போது வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு முதலாவதாக சாட்சியமளித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியான அன்சலம் டி சில்வாவிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்போது '2023 டிசம்பர் 30 ஆம் திகதியன்று இரவு 8.00 மணியளவில் மாத்தறை வெலிகம பகுதியை நோக்கி நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் சென்ற வாகனத்தின் இலக்கத்தகடு கழற்றப்பட்டு, போலியான தகடுகள் இரண்டு பொருத்தப்பட்டன' என்றார். இதன்போது குறுக்குக்கேள்வி எழுப்பிய திலீப பீரிஸ், 'திருட்டுத்தனமான ஒரு செயற்பாட்டுக்கு திருட்டுத்தனமாக சென்றதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?' எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அன்சலம் டி சில்வா, 'ஆம்' என்றார்.

'இந்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு எம்மை அழைத்துச்சென்றார்கள். அங்கு நெவில் டி சில்வா வருகைதந்தார். அப்போது சோடிக்கப்பட்ட ஒரு பொய்யான விடயத்தைக் குறிப்பிடுவோம். அதன்மூலம் இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். அதன் பின்னர் நாங்கள் 7 பேரும் அவ்வாறே குறிப்பிட்டோம். மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னிலையிலும் அவ்வாறே கூறினோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து குழுவில் சாட்சியமளித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச்சேர்ந்த, அதாவது அன்றைய தினம் கொழும்பிலிருந்து சென்ற வாகனத்தைச் செலுத்திய சாரதியான துலிப் விஹான் ஜயதிஸ்ஸ விடயங்களை முன்வைக்கையில், 'அன்றைய தினம் மாத்தறைக்கு ஒரு கடமையின் நிமித்தம் செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். ஆனால் எதற்காக செல்கிறோம் என்று என்னிடம் கூறவில்லை.

முதலில் நாம் செல்லும்போது வாகன இலத்தகட்டினை மாற்றும்போது நான் 'ஏன்' என்று கேட்டேன். அதற்குப் பதிலளித்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, 'உனக்கு அது தேவையில்லை. சொல்வதைச் செய்' என்றார். அதன் பின்னரே நான் வாகனத்தின் பின்புறமிருந்த வாகன இலக்கத்தகட்டினைக் கழற்றி, போலியான தகட்டினைப் பொருத்தினேன். நான் என்ன செய்வது? உயரதிகாரிகள் சொல்வதைத்தான் நான் செய்யவேண்டும்' என்றார்.

இவ்வேளையில் கேள்வி எழுப்பிய குழுவின் தலைவரான உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன, 'வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கும், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும், அப்போது அளிக்கப்பட்ட சாட்சியத்துக்கும், தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அளித்திருக்கும் சாட்சியத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?' என வினவினார்.

அதற்குப் பதிலளித்த துலிப், 'ஆம், நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனது உயரதிகாரிகள் அன்றைய தினம் சோடிக்கப்பட்ட விடயத்தையே நீதிமன்றத்துக்கும், வெலிகம பொலிஸ் நிலையத்துக்கும் குறிப்பிட்டார்கள். நான் என்ன செய்வது? நான் ஒரு சாதாரண சாரதி. இச்சம்பவத்தினால் நான் இப்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். எனது குடும்பம் மிகுந்த வறுமையில் உள்ளது. ஊரில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன். இதிலிருந்து என்னை எப்படியாவது விடுவியுங்கள்' கண்ணீல்மல்க கூறினார்.

அதனையடுத்து சாட்சியமளித்த நிஷாந்த டி சில்வா, '2023 டிசம்பர் 29 ஆம் திகதி ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய தரப்பினர் வெலிகம பகுதியில் ஒன்றுகூடுவதாக எமக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தது. இந்தத் தகவலை நான் பொலிஸ்மா அதிபருக்கும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நெவில் டி சில்வாவுக்கும் அறிவித்திருந்தேன். இந்தக் குழுவினர் அன்றைய தினம் வெலிகம பகுதிக்கு சுற்றிவளைப்புக்காக வருகைதருவதாக தென்மாகாண பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது எனக்கோ அல்லது வெலிகம பொலிஸ் நிலையத்துக்கோ அறியத்தரவில்லை.

இவர்கள் உண்மையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவேண்டுமாயின், அன்றைய தினம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் அத்தகைய முறையான வழிமுறைகள் எதனையும் பின்பற்றவில்லை. வாகனத்தில் இருந்தவாறே டபிள்யூ 15 என்ற ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். ஆகவே இவ்விடயத்தில் சுற்றிவளைப்புக்கும் மேலாக பிறிதொரு பாரிய விடயம் உண்டு என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. ஏனெனில், இந்த ஹோட்டல் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட குற்றத்துக்காக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டார்.

குறுக்கு கேள்வி எழுப்பிய நீதியரசர் சூரசேன, 'சுற்றிவளைப்புக்கு மேலதிகமாக ஏதோவொன்று இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆகவே அந்த விடயத்துக்கு யார் பொறுப்புக்கூறவேண்டும் என்று தாங்கள் கருதுகின்றீர்கள்?' என வினவினார். அதற்குப் பதிலளித்த நிஷாந்த டி சில்வா, 'இச்சுற்றிவளைப்பு தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய தரப்பினரான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் டி சில்வா ஆகியோர் பொறுப்புக்கூறவேண்டும்' என்றார்.

இதனைத்தொடர்ந்து நேரம் போதாத காரணத்தினால் பிரதிவாதியான தேசபந்து தென்னக்கோனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய் வீரவிக்ரமவுக்கு இந்த சாட்சியாளரை குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சாட்சியாளர்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும், ஏனைய தெரிவுசெய்யப்பட்ட சாட்சியங்களை அழைப்பதற்கு குழு அனுமதி அளித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56