தோட்ட நிர்வாகம் வழியுறுத்திய 18 கிலோ தேயிலை கொழுந்தினை கொய்ய முடியாத நிலையில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளத்தை வழங்க போவதை எதிர்த்து அக்கரபத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தின் பிரோமோர் பிரிவு தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் சுமார் 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். மாதாந்த நாள் சம்பளம் வழங்கப்படும் இக்கால பகுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள சீட்டியில் தோட்ட நிர்வாகம் அரைநாள் கொடுப்பனவு உள்ளிட்டுள்ளமையை அறிந்ததன் பின்பே தொழிலாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

18 கிலோ தேயிலை கொழுந்துக்கு குறைவாக கொய்தவர்களுக்கு அரைநாள் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை தமக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தொழிலுக்கான நாட்களுக்குரிய முழு நாள் சம்பளம் வேண்டும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

அதன்பிறகு அவ்விடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்தில் வைத்து தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து தோட்ட தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளத்தை வழங்காமல் முழு நாள் சம்பளத்தை நாளை தோட்ட நிர்வாகம் வழங்கும் என உறுதியளித்ததன் பின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.