வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் குறித்த சம்பவம் நடந்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையை சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் இடுப்பு மேற்பட்ட வயிற்று நெஞ்சு பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும்,லொறி மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் முடிவதைந்த பின்னரே குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.”-என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றன. நேற்று மதியம் உணவு உட்கொண்ட பின் யாழ்ப்பாணம் சென்றுவந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

மேலும், அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.மந்திகை வைத்தியசாலைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் வாகனத்தினை மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மந்திகை வைத்தியசாலைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கோசன் துறை மூத்த பொலிஸ் அத்தியட்சிகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. 

துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மூவர் கைது செய்யப்பட்டு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.