இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கரையொதுங்கிய பாரிய கப்பலின் பாகங்கள் கடற்பரப்பில் நினைவுத் தடங்களாகி, சுற்றுலா மையமாகக் காட்சியளிக்கும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் “கப்பல் வீதி”...
(பாலநாதன் சதீசன்)
இயற்கை இறைவனின் இணையில்லா ஓவியம் என்பது போல இயற்கையின் கொடைகளால் பரந்து விரிந்த பசுந்தரை, பற்றைக் காடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரையுடன் அமைவு பெற்றிருக்கும் ஆழிவனம் கடற்கரை முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்காலில் அமைவு பெற்றிருப்பது சிறப்பானதாகும்.
பரந்து விரிந்திருக்கும் மணல் தரைகளில் ஆங்காங்கே சிறு சிறு பனைமரக்கூடல்களும் சிறு சிறு பற்றைக்காடுகளும், உண்பதற்கு அரிதாக கிடைக்கும் நாவல், பனிச்சை, சூரைப்பழ மரங்கள் என இயற்கைச் சூழல் இட அமைவிலேயே ஆழிவனம் கடல் அமைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இந்த ஆழிவனம் கடற்கரை சுற்றுலா மையம் அமைந்துள்ளது.
இக்கடல் பரந்த காடுகளுக்கு மத்தியில் காணப்படுவதால் “ஆழிவனம்” கடற்கரை என அழைக்கின்றார்கள். அக்கடற்கரையினை தற்போது மக்கள் “கப்பல் வீதி கடல்” என்றும் அழைக்கின்றார்கள். ஏனெனில், 2006ஆம் ஆண்டு இயந்திரக் கோளாறு காரணமாக ஜோர்தான் நாட்டுக்கு சொந்தமான பாரிய கப்பலொன்று கரையொதுங்கியிருந்தது. பின்னர் அதன் அடிப்பாகங்கள் மட்டுமே இந்த கடல் பகுதியில் எஞ்சி, அதன் நினைவுத்தடங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக, பலர், இந்தப் பகுதியை “கப்பல் வீதி” என்றே கூறுகின்றார்கள்.
பார்ப்பவர்கள் மனதை தன் வசம் ஈர்க்கும் வகையில் ஆழிவனம் கடல் தோற்றமளிக்கிறது. இந்த கடல் மிகவும் ஆழமானதாகவும் கடற்பரப்பில் அலைகளின் தாக்கம் குறைவானதாகவும் காணப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் சிறு வாடி அமைத்து, தத்தமது கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஆழிவனம் கடற்பகுதியில் உள்ள கப்பலின் அடியில் பறவைகள் அனைத்தும் சென்று, இளைப்பாறி, பின் பறந்து செல்லும் அழகோ தனி!
கடலலைகள் கரைதழுவிச் செல்லும்போது அலையில் அடித்துவரும் சிறு நண்டுகள் வரையும் ஓவியமும், அலைகளோடு கரைவந்துசேரும் சிறு மட்டிகள் தம்மை மண் போர்வையால் போர்த்திக்கொள்ளும் அழகும் பார்ப்பவர் மனதை வசீகரிக்கின்றன.
இந்த கடற்கரையில் சிறுவர்கள் விளையாடக்கூடிய வகையில் தூய்மையான மணல் தரைகளும் இருக்கின்றன. அத்தோடு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவுகளை சுமக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு மிக அருகிலேயே இந்த கடற்கரை இருப்பதால், இது வரலாற்றுப் பதிவு மிகுந்த இடமாகவும் உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் காடு, மணல், கடல், கனி மரங்கள் என முற்றிலும் மாறுபட்ட, வனப்பு மிகுந்த இயற்கைச் சூழலைக் கொண்டு, தனி அழகுடன் காட்சியளிப்பதும் கூட முல்லை மண்ணுக்கு சிறப்புச் சேர்க்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM