இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இ்டையிலான இருபதுக்கு20 போட்டியில் எவின் லீவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றூல பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், ஒரு சர்வதேச இருபதுக்கு20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 எனக் கைப்பற்றியது.

இன்று இரு அணிகள் மோதும் ஒரு இருபதுக்கு20 போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் கார்லஸ் பிராத்வைட், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

இதற்கமைய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் 48 ஓட்டங்களும் அணித்தலைவர் விராட் கோலி மற்றும் ரிஷாப் பன்ட் தனித்தனியே 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். மேற்கிந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரோம் டெய்லர், வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

சவாலான இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிரடி ஆரம்ப நாயகன் கிறிஸ் கெய்ல் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆரம்பத்தில் இருந்து சிக்சர் மழை பொழிந்த எவின் லீவிஸ் சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 194 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

லீவிஸ் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை 62 பந்துகளின் 12 ஆறு ஓட்டங்களுடனும் 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக பெற்றுக்கொண்டார். சாமுவேல்ஸ் 36 ஓட்டங்களை ஆட்டமிழப்பின்றி பெற்றுக்கொண்டார்.போட்டியின் ஆட்டநாயகனாக எவின் லீவிஸ் தெரிவுச்செய்யப்பட்டார்.