காதலுடன் வீட்டை விட்டு ஓடிப்போனமையால் தன் தங்கை என்றும் பாராது கத்தியால் குத்தி கொடூரமாக அண்ணன் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள ஷெராகோட் பகுதியை சேர்ந்த நசியா அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் குறித்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையால், நசியா தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளார்.

நசியா காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறிது நாள் கழித்து நசியா இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட அவரது குடும்பத்தினர், அவரிடம் சமாதானம் பேசி தங்களது வீட்டுக்கு வந்துவிடும்படி அழைத்தனர். இதுகுறித்து பொலிஸாரிடமும் கூறி, தாங்கள் கொடுத்த முறைப்பாட்டினை மீளபெற்றுள்ளனர். நசியாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் இருந்த நசியாவுக்கும், அவரது சகோதரர் மொகமது இஷாக்குக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இஷாக், ‘‘காதலனுடன் ஓடி நமது வீட்டுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டாய்’’ எனக்கூறி நசியாவை அவரது பெற்றோர் முன்னிலையில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸார் இஷாக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.