ஒற்றையாட்சி அரசியல் ஆட்சிமுறையை நிராகரித்து, பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்றை தமிழ்த் தேசியத்தின் மரபு வழி தாயகத்தில் இலங்கைத் தீவு என்ற யதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாடுபடுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் தேசிய பேரவையும் இணக்கம் கண்டுள்ளன.
தமிழ்த் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புகளுக்கிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த 02ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திலேயே இத்தகைய இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தும் இரு கூட்டணிகளின் தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர். இந்தக் கலந்துரையாடலை அடுத்தே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.
ஒன்பது அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசத்தின் இறைமையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழி தாயகத்தில் சமஷ்டி ஆட்சி முறை தீர்வாக அமைய வேண்டும், 13ஆவது திருத்தம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு இல்லை என்றும், 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தினால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை இரு தரப்பும் நிராகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரின் போதான இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுப் பயணத்தில் சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும், ஏற்கெனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒருங்கிணைந்து மக்களின் பங்கேற்புடன் தயாரித்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் ஒருமித்த கொள்கையுடன் செயற்படுவதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ்த் தேசிய பேரவையும் தற்போது இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகவே அமைந்துள்ளது.
உண்மையிலேயே தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டால்தான் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வை காண்பதுடன் அந்த மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கான ஆரம்பமாக இந்த இரு கூட்டணிகளுக்கிடையேயும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அமைய வேண்டியது அவசியமாகவுள்ளது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையே ஓர் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். அந்த இணக்கப்பாட்டுடன்தான் அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்த முடியும். இந்த விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே ஒற்றுமை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக விளங்கிய தமிழ்க் கட்சிகள் இன்று பிளவடைந்து மாற்றுக் கூட்டணிகளை அமைத்து செயற்படும் நிலைமை காணப்படுகின்றது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் அதற்கு அடுத்ததாக தமிழ்த் தேசிய பேரவையும் வாக்குகளைப் பெற்றிருந்தன.
ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தனர். ஆளும் தேசிய மக்கள் சக்தியானது வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர்ந்த மாவட்டங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது.
தமிழ்த் தேசியத்தின்பால் மக்கள் பேராதரவை வழங்காது, தெற்கின் சிங்களக் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு பெரும் ஆதரவை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர். இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் என்ன? ஏன் இந்த மக்கள் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார்கள் என்ற விடயத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள் சீர்தூக்கி பார்த்தமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் ஓரளவுக்கு அந்தக் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கின்றனர். ஆனாலும், தேசிய மக்கள் சக்தியையும் பெரும்பான்மையான மக்கள் ஆதரித்திருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவுகளும் பிணக்குகளும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தம்மீது அக்கறை இன்றி சுயநல அரசியல் நோக்குடன் இந்தக் கட்சிகள் செயற்பட்டு வந்தமையினாலேயே தமிழ் மக்கள் தமது வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்தனர்.
ஆனால், இம்முறை தமிழ் தேசியக் கட்சிகள் தம்மை ஓரளவுக்கு சுதாகரித்துக்கொண்டமையினால் பெருமளவான தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே, இந்த வரலாற்றுப் படிப்பினையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் இனியாவது செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ன? என்பது தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கட்சிகள் எடுக்க வேண்டும்.
தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ்த் தேசிய பேரவையும் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்ற விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கட்சிகள் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வர வேண்டியது இன்றியமையாததாகும்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பவற்றுக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்படாமையினால் தமிழரசுக் கட்சியுடன் இந்த இரு தரப்பினரும் இன்னமும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.
ஆனால், தமக்குள் தமிழ்த் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இந்த விடயங்கள் தொடர்பில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு கலந்துரையாடல்களை நடத்தி ஒரு இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.
இதனைவிடுத்து, வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான சபைகளை நாமே கைப்பற்றியுள்ளோம், பெரும்பான்மையான மக்கள் எம்மையே ஆதரித்துள்ளார்கள் என்று கூறிக்கொண்டு மமதையில் செயற்படக் கூடாது.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவடைந்தமைக்கு காரணம் என்ற என்ன என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வரலாற்றுத் தவறுகளை நினைவில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்.
தமிழ்க் கட்சிகளிடையே பிளவுகள் நீடிக்குமானால் அது எந்த வகையிலும் தமிழ்த் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு உதவப் போவதில்லை. எனவே, இந்த விடயத்தை கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் ஒன்றுபட்டு உரிமையைப் பெறுவதற்கு முயல வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM