"நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்கிறேன்" - பொன்விழா காணும் பரதநாட்டியக் கலைஞர் சிவானந்தி ஹரிதர்ஷன்

11 Jun, 2025 | 05:04 PM
image

(நேர்காணல் - மா.உஷாநந்தினி)

ண் புருவங்களையும் பேசவைக்கின்ற நாட்டியக் கலையின் அழகை, “காணக் கண் கோடி வேண்டும்…” என்று பாட்டோடு கலந்து சிவானந்தி ஹரிதர்ஷன் காட்டிய பாவத்தில் கண்டு இரசிக்க முடிந்தது.  

வயதேறியும், எள்ளளவும் நளினம் குன்றாத பரதநாட்டியக் கலைஞராக சிவானந்தி ஹரிதர்ஷன் இன்றும் மிளிர்ந்துகொண்டிருக்கிறார்.

நவரசங்களில் சிருங்காரத்தை விரும்புகிறவர், சிவானந்தி. நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்வதாக எப்போதும் சொல்வார். 

அவரை அண்மையில் பேட்டி கண்டவேளை, “பரதநாட்டியம் எனக்கு மகிழ்ச்சியையும், அதை விட ஆத்ம திருப்தியையும் கொடுக்கிறது. கடவுளின் அனுக்கிரகத்தால் இன்று வரை, எனக்குத் தெரிந்த எல்லாக் கலைகளையும், என்னுடைய ஒவ்வொரு மாணவிக்கும் கற்பித்து வருகிறேன்” எனக் கூறினார்.

கொழும்பில் நிர்த்தனா நடனப்பள்ளியை ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகாலமாக நாட்டிய குருவாக தனது கலைச் சேவையினை நிறைவேற்றி வரும் சிவானந்தி, இந்த ஐம்பது ஆண்டுகளில் 55 அரங்கேற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார்.  

தனது நாட்டியப்பள்ளியின் ஊடாக பல மாணவர்களுக்கு இன்று வரை பரதநாட்டியத்தை நுணுக்கமாக, பாரம்பரிய சாஸ்திரிய முறைப்படி கற்பித்து வருகிறார்.

சிவானந்தி, பழமை மாறாத புதுமையை நாட்டிய நாடகங்களில் கையாள்வதில் வல்லவர். அனார்கலியை பரதத்தோடு இணைத்து அவர் உருவாக்கிய நாட்டிய நாடகம் அவரது படைப்பாற்றலுக்கு சிறந்த உதாரணம்.

கலாக்ஷேத்ராவில் பரதநாட்டியம் பயின்றபோது இவர் பங்கேற்ற ‘பாதுகா பட்டாபிஷேகம்’, ‘சபரி மோக்ஷம்’, ‘மகா பட்டாபிஷேகம்’, ‘ருக்மணி கல்யாணம்’ போன்ற நாட்டிய நாடகங்களும், இவரது சுய தயாரிப்பில் உருவான 'அனார்கலி', ‘சீதா சுயம்வரம்’, ‘கைகேயி வரம்’, ‘கிருஷ்ண லீலை’, 'ஸ்ரீநிவாச கல்யாணம்', ‘அனசூயா’, ‘நர்த்தன காளி’, ‘சகுந்தலை’, ‘பாஞ்சாலி சபதம்’, ‘நவரஸ நிலை’ முதலிய நாட்டிய நாடகங்களும் இவரது கலைப்பயணத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

கலைச் செம்மல், நடனக்கலையரசி, பரத கலாநிதி, வாழ்நாள் சாதனையாளர், கலைமாமணி போன்ற பட்டங்களையும் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தால் புங்கா விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

பரதநாட்டியக்கலைத் துறையில் இவரது ஐம்பது ஆண்டுகால குரு சேவைக்கு கௌரவமளிக்கும் வகையில், பொன்விழா நாட்டிய நிகழ்வொன்று எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சிவானந்தி ஹரிதர்ஷன் வீரகேசரிக்கு அளித்த பேட்டி இங்கே தரப்படுகிறது.

நாட்டியக்கலைத் துறையில் ஐம்பது ஆண்டுகால ஆசிரியப் பணியை திரும்பிப் பார்க்கிறபோது என்ன தோன்றுகிறது?

நான் பரதநாட்டிய ஆசிரியையாக பணியை ஆரம்பிக்க எண்ணியபோது, எனக்கு பக்கபலமாக இருந்தவர் எனது தந்தை. அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி... “உங்களால் தனியாக வகுப்புகளை நடத்த முடியுமா? அல்லது வேறொரு நடன ஆசிரியையின் கீழ் வகுப்புகளை நடத்தப்போகிறீர்களா?" என்பதே. அவர் அப்படிக் கேட்டதும், “என்னால் தனியாக வகுப்பெடுக்க முடியும்" என்றேன். அவ்வாறே நடன ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கினேன்.

முதலில் ஏழு மாணவிகள் மாத்திரம் என்னிடம் நாட்டியம் பயின்றார்கள். அவர்களில் சிலர் அரங்கேற்றம் நிகழ்த்தினார்கள். பின்னர் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றது. கடவுளின் அனுக்கிரகத்தால் அன்றிலிருந்து இன்று வரை எனக்குத் தெரிந்த கலைகள் அனைத்தையும் எனது ஒவ்வொரு மாணவிக்கும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.

இத்தனை ஆண்டுகால கலைச் சேவையில் உங்களை திருப்திப்படுத்தியது எது?

ஒவ்வொரு அரங்கேற்றத்தின்போதும், வேறு நாட்டிய நிகழ்வுகளின்போதும், எனது மாணவர்கள் இதை விட இன்னும் கலையில் தங்களை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும், மிகவும் நேர்த்தியாக, கற்ற கலையை வெளிப்படுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

இன்னும் சொல்வதானால், ஒரு நாட்டிய ஆசிரியையாக, மாணவர்களின் கலையாற்றலைக் கண்டு நான் திருப்தியடைகிறேன். இருந்தாலும், அவர்கள் கலையில் மென்மேலும் முன்னேற வேண்டும் என்பதே எனது ஆசை.

இந்த பயணத்தில் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்திருக்கும்... ஏதேனும்  ஒன்றைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

நான் கலாக்ஷேத்ராவில் நாட்டியப் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், கொழும்பு லயனல் வென்ட்டில் முதன்முதலாக காம்போதி ராகத்தில் “எதிரில்லாத..." என்ற பதத்தை ஆடினேன்.

அந்த நிகழ்வுக்கு வருகைதந்த எனது இரண்டாவது குருவான கமலா ஜோன் பிள்ளை அவர்கள், “உன்னுடைய அடவுகள் அங்க சுத்தமானவை. ஆனால், இப்போது, உனது பாவம் எத்தகையது என்பதைப் பார்க்கவே நான் வந்திருக்கிறேன்" என்றார்.

நான் அந்தப் பதத்தை ஆடி முடித்ததும், எனது குரு உட்பட நிகழ்வுக்கு வந்திருந்த எல்லா நடன ஆசிரியைகளும், என்னுடைய பாவம் அத்தனை அற்புதமாய் இருந்ததென பாராட்டினார்கள். அது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நான் முதன்முதலாக செய்த நிகழ்ச்சியை பலரும் பாராட்டியபோது, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதன் பிறகு, கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் ஒரு காளி நடனம் ஆடினேன். அதில், நான் அசல் காளியாகத் தோற்றமளித்ததாக எல்லோரும் கூறினார்கள். ஒரு முறை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நான் ஆடிய துர்க்கை நடனத்தையும் பலர் ரசித்துப் பாராட்டினார்கள். இப்படியாக, நான் நாட்டியமாடிய வேளைகளில் பலர் என்னை தட்டிக்கொடுத்தார்கள். அந்த தருணங்களை இப்போது நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது.

உங்களுக்கும் நாட்டியத்துக்கும் இடையிலான பிணைப்பு எத்தகையது?

பரதநாட்டியத்தை, எனது சந்தோஷமாக நான் பார்க்கிறேன். நாட்டிய வகுப்புக்குள் நுழைந்துவிட்டால், என்னை நானே மறந்துவிடுகிறேன். வீட்டைப் பற்றியோ எனது பிள்ளைகளைப் பற்றியோ கூட சிந்திப்பதில்லை. அந்தத் தருணம் என் நினைவிலிருப்பது, நானும் எனது மாணவிகளும் மட்டுமே. அந்தளவுக்கு நாட்டியத்தில் ஒன்றித்துவிடுகிறேன். அதனால் நாட்டியம் எனக்கு சந்தோஷத்தையும் அதை விட ஆத்ம திருப்தியையும் கொடுக்கிறது என்றே கூறவேண்டும்.

இன்று நீங்கள் பரதநாட்டிய குரு... ஆனால், அன்று குருபக்தி, பயபக்தியோடு நீங்கள் நாட்டியம் பயின்ற நாட்களைப் பற்றி கூறுங்கள்... 8 வயதில் பரதம் கற்க ஆரம்பித்தீர்கள். அப்போது உங்கள் குரு யார்?

உண்மையில் நான் ஐந்து வயதிலேயே நாட்டியம் பயில ஆரம்பித்துவிட்டேன். அப்போது திருமதி. பாலசுந்தரி பிரார்த்தலிங்கம்தான் என்னுடைய குரு. அன்றைய சூழ்நிலையில், என்னை நாட்டிய வகுப்புக்கு அழைத்துச் செல்வது வீட்டில் சிரமமாக இருந்ததனால், நான் வகுப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்டேன்.  சிறிது கால இடைவெளிக்குப் பின்பு, மீண்டும் எட்டு வயதில் அதே நாட்டியப்பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன். இரண்டு வருடங்களிலேயே குருவிடம் அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், தில்லானா என்பவற்றை கற்றுக்கொண்டேன்.

அந்த நாட்களில் எனது குருவின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, பாலசுந்தரி ஆசிரியை, என்னை இந்தியாவில் உள்ள கலாஷேத்ரா பள்ளிக்கு நாட்டியம் பயில அனுப்புமாறும் அதற்கான உதவிகளை தானே செய்துதருவதாகவும் எனது பெற்றோரிடம் கூறினார். எனினும், அந்த சிறு வயதில் என்னை இந்தியாவுக்கு அனுப்ப பெற்றோர் தயங்கி, மறுத்தனர்.

அதன் பின்னர், நான் திருமதி. கமலா ஜோன் பிள்ளை ஆசிரியையிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினேன். அவர், நான் அடவுகளை அழகாகப் பிடிப்பதாக பாராட்டினார். 

சில வேளைகளில், அங்கு நாட்டியம் பயில வருகிற, என்னை விட சிறு வயது மாணவர்களுக்கு அடவுகளை கற்றுக்கொடுக்குமாறு என்னிடம் குரு சொல்ல, அவர்களுக்கும் அடவுகளை கற்பித்தேன். அப்போதே கற்பிக்கத் தொடங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

14 வயதில் என்னை, தந்தையார் இந்தியாவில் உள்ள கலாஷேத்ரா பள்ளியில் சேர்த்தார். அங்கு, முதலாம் வருடத்தில் அடவுகளைப் பயின்றேன். என்னுடைய அடவு சுத்தம் அவதானிக்கப்பட்டு, திறமையின் அடிப்படையில் 'டபிள் ப்ரொமோஷனாக" முதலாம் வருடத்திலிருந்து மூன்றாம் வருடத்துக்கு அனுப்பப்பட்டேன்.

அந்த நாட்களில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.... வழமையாக நான் ஆடும்போது, சில விடயங்களை சுட்டிக்காட்டி, திருத்திவந்த ஆசிரியை, ஒரு கட்டத்தில் எனக்கு ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டார். அதை நினைத்து, ஒரு நாள் நான் கதறி அழுதேன். அப்போது, என்ன நடந்ததென ஆசிரியை என்னிடம் கேட்டார். “நீங்கள் மற்றவர்கள் நாட்டியத்தில் விடும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துகிறீர்கள். ஆனால், எனக்கு மட்டும் எதுவுமே சொல்வதில்லை" என்றேன். அதற்கு ஆசிரியை சொன்னார், “நீங்கள் அழகாக ஆடுகிறீர்கள்... உங்களிடம் நான் எப்படி திருத்தம் சொல்வது" என்று. அதை தற்போது நினைத்துப் பார்க்கிறபோது, மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அத்தையார் முன்னிலையில் நாட்டியம் ஆடிய அனுபவம் எப்படியிருந்தது?

ஆம்… நான் கலாஷேத்ராவில் நாட்டியம் பயின்ற காலத்தில் அத்தையாரும் அங்கிருந்தார். ருக்மணிதேவி அருண்டேல் அம்மையாரை எல்லோரும் 'அத்தை’ என்றே அழைப்போம். அவர் முன்னிலையில் பல தடவை நாட்டிய நாடகங்களில் ஆடியிருக்கிறேன் என்ற பெருமையும் எனக்கு உண்டு என்றே சொல்லவேண்டும்.

நிர்த்தனா நடனப்பள்ளி 1975இல் ஆரம்பிக்கப்பட்டது... இப்போது எப்படி இயங்குகிறது?

எனது குரு திருமதி. கமலா ஜோன் பிள்ளைதான் நடனப்பள்ளிக்கு“நிர்த்தனா” என்று பெயர் சூட்டினார். நான் முதலில் சொன்னதுபோல், ஆரம்பத்தில் ஏழு மாணவிகள் இங்கு நாட்டியம் கற்றார்கள். அதன் பிறகு, படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதுவரை 55 பிள்ளைகளின் அரங்கேற்றங்களை  நிகழ்த்தியிருக்கிறேன். என்னுடைய மாணவர்கள் நிறைய மேடைகளில் நடனமாடியிருக்கின்றனர். எல்லோரும் மிகத் திறமையாக நாட்டியம் ஆடக்கூடியவர்கள் என்றே நான் நினைக்கிறேன்.

50 ஆண்டுகள்... 55 அரங்கேற்றங்கள்... ஒரு நாட்டிய ஆசிரியையாக, ஒவ்வொரு அரங்கேற்றத்தின்போதும் எப்படி உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக்கொள்கிறீர்கள்?

பொதுவாக, அரங்கேற்றம் நிகழ்த்தப்போகிறோம் என்றாலே உருப்படிகளை தயாரிக்க இறங்கிவிடுவேன்.  ஜதீஸ்வரம், சப்தம்... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நான்கைந்து உருப்படிகளையாவது புதிதாக அமைத்துக்கொள்வேன். உருப்படி தயாரிப்பது அத்தனை எளிதான விடயமல்ல. அதற்கென நேரம் ஒதுக்கி, சிந்தித்து உருப்படிகளை அமைப்பேன். ஏற்கெனவே தயாரித்த உருப்படிகளை திருத்துவது, சிலவேளைகளில் அவற்றை நீக்கிவிட்டு, மீண்டும் ஒன்றைத் தயாரிப்பது என எனக்கு திருப்தி ஏற்படும் வரையில் முயற்சி செய்துகொண்டேயிருப்பேன்.

அரங்கேற்றங்களுக்கான நாட்டியப் பயிற்சி வேளைகளிலும் மாணவர்களுக்கு அறிவுரைகளை கூறி, அடவுகளை சுத்தப்படுத்தி, தனியாக பாவங்களை சொல்லிக்கொடுத்து வழிநடத்துவேன்.

ஒவ்வொரு அரங்கேற்றத்தின்போதும் புதிது புதிதாக உருப்படிகளை தயாரிக்கும் அதேவேளை கலாஷேத்ரா பாணியிலிருந்தும் விலகாமல், நாட்டியங்களை அமைத்து, நிகழ்த்தி வருகிறேன்.

ஆண்கள் உங்களிடம் நாட்டியம் கற்கிறார்களா? 

ஆம்... நிறைய பேர் நாட்டியம் பயில்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், ஸ்ரீமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் மகன் சாரங்கன் என்னிடம் நாட்டியம் கற்று, அரங்கேற்றம் நிகழ்த்தினார். அவர், மிகச் சிறப்பாக ஆடக்கூடிய ஒருவரே.

சிலர் கூறுவார்கள், ‘ஆண்கள் நடனம் பயின்றால் அவர்களது சைகைகள் பெண்களைப் போன்றிருக்கும்’ என்று. உண்மையில் எல்லா ஆண்களும் அப்படியென்று சொல்லிவிட முடியாது.

நாட்டியம் கற்பிக்கும்போது, ஆண்களுக்கு, அவர்களது ஆண்தன்மை மாறாத வகையில் நடனம் கற்பிக்க வேண்டும். சில ஆண்கள், இயல்பாகவே பெண்களைப் போன்ற நளினத்தைக் கொண்டிருந்தால், அவர்கள் நாட்டியமாடும்போதும் பெண்களைப் போன்றே நளினம் காட்டுவார்கள். 

ஆனால், சாரங்கனைப் போல இன்னும் நிறைய ஆண்கள் என்னிடம் பரதநாட்டியம் பயின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஆண்தன்மை மாறாமல், மிக அழகாக ஆடும் திறமையை பெற்றிருந்தனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் பல பரதநாட்டியப் போட்டிகளில் நடுவராகவும் அங்கம் வகித்திருக்கிறீர்கள்... போட்டியாளர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன என்று கூற முடியுமா?

அங்க சுத்தம், பாவம், நாட்டியக்கலையை வெளிப்படுத்தும் விதம் முதலான விடயங்களை கருத்திற்கொண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. நடுவர் குழாமில் ஐந்து பேர் இருந்தோமானால், ஐந்து பேரின் மதிப்பெண்களும் ஒரே மாதிரி இருந்தால்தான் அந்த போட்டியாளர் முதல் இடத்தைப் பெறுவார். அனேகமாக, நடுவர்கள் எல்லோரது பார்வையும் புள்ளிகளும் ஒன்றுபோலவே அமைந்துவிடும். சிலவேளைகளில், ஒருசில நடுவர்களின் புள்ளிகள் வித்தியாசப்படக்கூடும். காரணம், அவர்களது கண்ணோட்டம் வேறாக இருந்திருக்கலாம். ஆனாலும், மொத்தப் புள்ளிகளை சேர்த்துக் கணிக்கும்போது அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளர் முதலிடத்துக்குத் தெரிவாவார்.

பரதநாட்டியம் ஆடும் ஒருவர் அழகாக, நிறமாக இருக்கவேண்டும் என்றொரு கருத்து வெகுசிலரிடம் இருக்கிறது… அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னுடைய கண்ணோட்டத்தில் கூறுவதானால், பரதநாட்டியம் ஆடும் ஒருவர், அழகாக பாவம் காட்டி, அங்க சுத்தத்தோடு நடனமாடி, அந்தக் கலையை, அழகாக வெளிப்படுத்தினாலே போதும் என்று நினைக்கிறேன்.

முறையாக நாட்டியம் கற்றாலும் சிலரால் உயரத்தை எட்ட முடியவில்லையே ஏன்?

சிலர் கடுமையான உழைப்பின் மூலம் கலையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். இன்னும் பலப்பல காரணங்கள் இருக்கலாம். என்னை பொறுத்தவரையில், தீவிரமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2017இல் நடனப்பள்ளியின் 42ஆவது ஆண்டுவிழாவில் நீங்களும் மேடையில் நடனமாடினீர்கள்...  இம்முறை நிகழவுள்ள ஐம்பதாவது ஆண்டு சிறப்பு விழாவில் உங்கள் பரதநாட்டியத்தை எதிர்பார்க்கலாமா?

நிச்சயமாக... 2017இல் நானும் மகளும் “குழலிசை அமுதூட்டி...” பதத்துக்கு ஆடினோம். அதன் பிறகு மாணவிகளோடு இணைந்து தில்லானா ஆடினேன். அதன் பிறகு, இம்முறை, நிர்த்தனா நடனப்பள்ளியின் 50ஆவது ஆண்டு விழாவில் எனது மாணவிகளோடு சேர்ந்து நாட்டியமாடவுள்ளேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்....

2025-06-09 09:14:33
news-image

"நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்கிறேன்" -...

2025-06-11 17:04:49
news-image

கலையில் சமத்துவமின்மையை ஏன் கொண்டுவர வேண்டும்? ...

2025-05-23 18:56:02
news-image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ...

2025-05-08 13:55:50
news-image

மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

2025-04-29 21:17:35
news-image

காண்பியக் காட்சி - கே.கே.எஸ் வீதி...

2025-04-25 21:34:14
news-image

இசையின் காதல் ராணி எஸ். ஜானகியின்...

2025-04-23 13:13:06
news-image

வயலின் மறுசீரமைப்பில் ஒரு கலங்கரை விளக்கமாக ...

2025-04-22 13:58:25
news-image

புதிய அலை கலை வட்ட இளைஞர்...

2025-04-19 10:02:50
news-image

பங்குனி உத்தர நாயகி போற்றி....!

2025-04-04 16:54:50
news-image

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108...

2025-04-10 16:32:08
news-image

கம்பளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பங்குனித் திங்கள்...

2025-04-06 12:33:39