(நெவில் அன்தனி)
அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் தடவையாக ஐபிஎல் கிண்ணத்தை சுவீகரித்தது.


அத்துடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடர்ச்சியாக 18 வருடங்கள் விளையாடிவந்த விராத் கோஹ்லிக்கும் இது முதலாவது சம்பியன் பட்டமாகும்.
சம்பியனான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 68 கோடி ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற பஞ்சப் கிங்ஸுக்கு 45 கோடி ரூபாவும் பணப்பரிசாக கிடைத்தது.

க்ருணல் பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சு, மிகத் திறமையான களத்தடுப்பு என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சம்பியன் பட்டத்தை சூட உதவின.
கடந்த 17 அத்தியாயங்களிலும் தொடர்ச்சியாக விளையாடிவந்து ஒரு தடவையேனும் சம்பியனாகாத றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவும் பஞ்சாப் கிங்ஸும் 18ஆவது அத்தியாயத்தில் முதல் தடவையாக சம்பியனாகும் கங்கணத்துடன் இந்த வருட இறுதிப் போட்டியில் விளையாடின.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஷஷாங்க் சிங் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அவரது தனி முயற்சி வீண் போனது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக இருந்தது. ஆனால் மத்திய வரிசையிலும் பின்வரிசையிலும் ஷஷாங்க் சிங்கைத் தவிர வேறு எவரும் பிரகாசிக்காததால் அவ் அணிக்கு தோல்வியே மிஞ்சியது.
ப்ரியான்ஷ் ஆரியா, ப்ரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 30 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், ப்ரியான்ஷ் ஆரியா (26), ப்ரப்சிம்ரன் சிங் (24), அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் (1) ஆகிய மூவரும் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
அதேவேளை, திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜொஷ் இங்லிஸ் 39 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். (98 - 4 விக்.)
தொடர்ந்து நெஹால் வதேரா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நெஹால் வதேரா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை சிக்ஸுடன் ஆரம்பித்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்த பந்தில் புவ்ணேஸ்வர் குமாரிடம் விக்கெட்டைப் பறிகொடுத்ததுடன் அடுத்து வந்த அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஒரு ஓட்டத்துடன் யாஷ் தயாளின் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனை அடுத்து கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கு 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஜொஷ் ஹேஸ்ல்வூடின் முதல் இரண்டு பந்துகளில் ஷஷாங்க் சிங்கினால் ஓட்டம் எடுக்க முடியாமல் போனதால் பஞ்சாப் கிங்ஸின் தோல்வி உறுதியாயிற்று.
கடைசி 4 பந்தகளில் 22 ஓட்டங்களை விளாசிய ஷஷாங்க் சிங் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் க்ருணல் பாண்டியா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் புவ்ணேஷ்வர் குமார் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் முதல் 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
பில் சோல்ட் (16), மயான்க் அகர்வால் (24), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (26) ஆகிய மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (10.5 ஓவர்களில் 96 - 3 விக்.)
விராத் கோஹ்லி, ரஜாத் பட்டிதார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 40 ஓட்டங்களே அணியில் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோன் 25 ஓட்டங்களையும் ஜிட்டேஷ் ஷர்மா 24 ஓட்டங்களையும் ரொமாரியோ ஷெப்ர்ட் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசி ஓவரில் 3 விக்கெட்களை இழந்ததுடன் 5 விக்கெட்கள் வெறும் 23 ஓட்டங்களுக்கு சரிந்தன.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைல் ஜெமிசன் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: க்ருணல் பாண்டியா.
வளர்ந்துவரும் வீரருக்கான விருது: குஜராத்தின் தமிழக வீரர் சாய் சுதர்சன்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM